Wednesday, July 6, 2022

"ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன்." (மத்.10:16)

"ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன்." (மத்.10:16)

இயேசு தன்னைப் பின்பற்றிய சீடர்களிலிருந்து 12 பேரை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்.

அவர்கள்தான் அவர் நிறுவவிருக்கும் திருச்சபையில் முக்கிய பொறுப்பு வகிக்கப் போகின்றவர்கள்.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் போகின்றவர்கள்.

அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக அவரது வாழ்நாளின் போதிலே அவர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார்.

"சிதறிப்போன இஸ்ராயேல் குலத்து ஆடுகளிடமே செல்லுங்கள்.

புறவினத்தாருடைய நாட்டுக்குச் செல்லவேண்டாம். 

சமாரியருடைய ஊரில் நுழைய வேண்டாம்."

பயிற்சியாக இருப்பதால் வெளி உலகிற்கு அனுப்பாமல் இஸ்ராயேல் மக்களிடமே அனுப்புகிறார்.

பயிற்சியின் போது எந்த சூழ் நிலையையும் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால்தான்

"ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன். 

ஆகவே, பாம்புகளைப்போல விவேகம் உள்ளவர்களாயும்,

 புறாக்களைப்போலக் கபடற்றவர்களாயும் இருங்கள்." என்று கூறுகிறார்.

முதலில் "இஸ்ராயேல் குலத்து ஆடுகளிடமே  செல்லுங்கள்"
என்று சொன்னவர்,

"ஓநாய்களிடையே அனுப்புகிறேன்." என்று சொல்லக் காரணம் என்ன?

அவர் அளிக்கப் போவது பயிற்சி.

"இறைவனின் ஆட்டுக் குட்டியாகிய அவரே பணி புரிந்து கொண்டிருப்பது ஓநாய்களின் மத்தியில் தான்.

ஆடுகளுக்கு அவர் போதித்து கொண்டிருந்தாலும் பரிசேயர்கள், சதுசேயர்கள். மறை நூல் அறிஞர்கள், யூத மத குருக்கள் ஆகிய ஓநாய்கள் அவரை கடித்து தின்பதற்கென்று எப்போதும் அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

கள்ளங் கபடில்லாத அவர் விவேகத்துடன் மூன்று ஆண்டுகள் அவர்கள் வாயில் அகப்படவில்லை.

ஆயினும் அவரை சிலுவையில் அறைந்து கொன்றவர்கள் அவர்கள்தான்.

அதே ஓநாய்கள் இஸ்ரயேலர்கள் வாழ்ந்து கொண்டிருந்த மற்ற பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆகவே அப்போஸ்தலர்கள் ஓநாய்களுக்கு மத்தியில் தான் ஆடுகளுக்கு நற்செய்தி போதிக்க வேண்டியிருந்தது.

அவர்கள் கபடில்லாமலும், விவேகத்துடனும்தான்  பணி  புரிய வேண்டும் என்று இயேசு அறிவுருத்துகிறார்.

திருச்சபை நிறுவப்பட்ட பின் வேத சாட்சிகளாக மரிப்பது வரை நற்செய்தி அறிவிப்பதற்காக அவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமே!

முதலில் ஓநாய்களுக்கு இரையாக வேண்டியது இயேசுதான். அவரைப் பின்பற்றிதான் அப்போஸ்தலர்கள்.

இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கூறிய வார்த்தைகள் அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

வார்த்தைகள் மூலமும், வாழ்க்கை 
மூலமும் நாமும் நற்செய்தி அறிவித்து கொண்டுதான் இருக்கிறோம், மற்ற ஆடுகளுக்கு ஓநாய்கள் மத்தியில்.

நாமும் கபடில்லாமலும், விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவத்தை முற்றிலுமாக அழித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் புரிந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில்,

நாம் கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் புரிந்து கொண்டிருக்கிறோம்.

நமது திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் கபடில்லாமலும், விவேகத்துடனும் நற்செய்தி அறிவிக்க வேண்டும்.

நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. எதிரிகளையும் நமது பக்கம் இழுத்து, அவர்களை மன்னித்து,
நண்பர்களாக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்.


நமது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால் நம்மை வெறுப்பவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் நமது நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இதற்கு நம்மிடம் விவேகம் வேண்டும்.

யார் யாரோடு எப்படி பழக வேண்டும், அவர்களே அறியாமல் நமது கருத்துக்களை அவர்களுக்குள்ளே அனுப்ப வேண்டும் என்று நாம் அறிந்திருக்க வேண்டும்.

நமது சொல்லிலும் செயலிலும் கபடு இருக்கக் கூடாது.

நாம் நாமாகவே இருக்க வேண்டும்.

விவேகத்துடன் நடந்தால்தான் நாம் உண்மையை விட்டு மாறாமல் மற்றவர்களை உண்மையின் பக்கம் ஈர்க்க முடியும்.

கெட்டவர்களோடு சேர்ந்து நாம் கெட்டுப் போகாமல் அவர்களை நல்லவர்களாக மாற்ற விவேகம் வேண்டும்.

நம்மை அழிக்க நினைப்பவர்களை காப்பாற்ற நினைத்தால்,

அதாவது, நமக்கு தீமை செய்ய நினைப்பவர்களுக்கு நாம் நன்மை
செய்ய நினைத்தால்,

அவர்களது அழிக்கும் நினைப்பு அழிந்து விடும்.

அதையும் தாண்டி அவர்கள் நம்மை அழித்தால் நாம் இன்னொரு இயேசுவாக மாறிவிடுவோம்.

ஆண்டவரின் செம்மறியை ஓநாய்கள் கொன்று விட்டாலும்

அவற்றை மன்னித்து விட்டு தான் அவர் உயிர் துறந்தார்.

நாமும் ஓநாய்கள் மத்தியில் வாழ்ந்த ஆண்டவரின் செம்மறியைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment