Sunday, July 3, 2022

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"(மத்.9:37, 38)

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.
ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"
(மத்.9:37, 38)

"தாத்தா, அறுவடையின் ஆண்டவர் 
யார்?"

",இயேசு"

"அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்றால்?"

",அவரைத் தான் மன்றாட வேண்டும்."

''யாரைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்?"

",தம் சீடர்களை நோக்கி."

"எதற்காக மன்றாடச் சொன்னார்?'

",பொடியா, வசனம் உன் கையில் இருக்கிறது. எதற்காக அதைப் பிரித்து கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறாய்?"

''உங்களுக்கு உதவி செய்யத்தான்."

'', எனக்கு உதவி செய்யவா?"

"வசனத்தை மொத்தமாக வாசித்து விட்டு விளக்குங்கள் என்று சொன்னால் பிரித்து பிரித்துதான விளக்குவீர்கள்.

பிரிக்கிற வேலையை நான் செய்கிறேன், விளக்குகின்ற வேலையை நீங்கள் செய்யுங்கள்."

", சரி, கேள்."

"ஏற்கனவே கேட்டு விட்டேன்."

",தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி மன்றாடச் சொன்னார்."

"யாருடைய அறுவடைக்கு?"

", இந்த பதிலிலேயே அந்தப் பதிலும் இருக்கிறது.

தம் அறுவடைக்கு, அதாவது இயேசுவின் அறுவடைக்கு."

" அவருடைய அறுவடைக்கு அவர் 
வேலையாட்களை அனுப்ப வேண்டியதுதானே.

ஏன் சீடர்கள் மன்றாட வேண்டும்?

",அதற்கு முந்திய வசனத்தை வாசி."

"அவர் மக்கட்கூட்டத்தைக் கண்டு, அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், அவர்கள்மேல் மனமிரங்கினார்."

", அதாவது?"

"ஏராளமான மக்கள் சுகம்
 பெறுவதற்காக இயேசுவைத் தேடி வந்தவர்களின் கவனிப்பாரில்லாமல் தவித்துக் கிடந்த நிலை பார்த்து மனமிரங்கினார்."

", அவர்களைப் பார்த்து மட்டும்தானா, அல்லது?"

"அங்கே குறிப்பிடப்பட்டிருப்பது அவர்கள் மட்டும்தான்.

ஆனால் அவர்களுக்காக மட்டும் இயேசு மனிதனாக பிறக்கவில்லை.

உலகம் முடியும் மட்டும் வாழக்கூடிய அனைத்து மக்களுக்காகவும்தான் பிறந்தார்.

அப்படியானால் இயேசுவின் மனதில்    இன்று வாழும் மக்களும்  இருந்திருக்க வேண்டும்.''

", அதென்ன இருந்திருக்க வேண்டும்? இருந்தார்கள்.

அவர் போதித்த நற்செய்தியும், 
பட்ட பாடுகளும்,
 அடைந்த மரணமும் அனைத்து மக்களுக்காகவும்தான்."

"அப்படியானால் அவர் சொன்னது சீடர்களுக்கு மட்டுமல்ல.

நமக்கும்தான்'

அவர் சொன்ன வார்த்தைகளை நாமும் வாசிப்போம் என்று அவருக்கு தெரியும்.

 அன்று அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து அவர் இரங்கியது போல இன்று அவரை அறியாத அனைவர் மீதும் இரங்குகிறார். 

அவரைப் பின்பற்றி நாமும் நற்செய்தி அறியாத மக்களை பார்த்து இரங்க வேண்டும்.

இரங்கி ஆண்டவரை நோக்கி,

"இயேசுவே, உமது நற்செய்தியை அறிவிக்க இன்னும் அநேக குருக்கள் தேவை.

உமது தேவ அழைத்தலை அநேகருக்குக் கொடும்."

என்று இயேசுவை நோக்கி மன்றாட வேண்டும்."

", இயேசுவுக்கு எல்லாம் தெரியுமே, நாம் கேளாமலே குருக்களுக்கு ஏற்பாடு செய்ய மாட்டாரா?"

"திசையை மாற்றி விட்டீர்கள்?"

",எந்த திசையை?"

"நான் கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொன்ன திசையை மாற்றி நான் பதில் சொல்லும்படி கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்."

", Correct. பதில் சொல்லு, 

இயேசுவுக்கு எல்லாம் தெரியுமே, நாம் கேளாமலே குருக்களுக்கு ஏற்பாடு செய்ய மாட்டாரா?"

"தாத்தா, நாம் கேட்காமல்தான் நம்மைப் படைத்தார்.

நாம் கேட்காமல்தான் நமக்காக மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரணம் அடைந்தார்.

ஆனால் நாம் கேட்காமல் நம்மால் மீட்பு அடைய முடியாது.

நாம் ஒவ்வொருவரும் நமது மீட்புக்காக மன்றாட வேண்டும்.

மற்றவர்களது மீட்புக்காக மன்றாடுவது ஒரு பிறர் அன்புச் செயல்தானே.

நாம்  ஒவ்வொருவரும்  
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,
 
ஒருவர் மேல் ஒருவர் இரக்கப்பட்டு, 

ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசி,

தங்கள் மீட்புக்காக மட்டுமல்ல மற்றவர்கள் மீட்புக்காகவும் உழைப்பதன் மூலம்

தாங்கள் அன்பு நிறைந்த குடும்பத்துப் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார்.

எங்க வீட்ல, தாத்தா, அப்பா ஏதாவது தின்பண்டம் வாங்கி வந்தால் எனக்கு அதிகம் தர சொல்லி என்னுடைய அண்ணன் அப்பாவிடம் சொல்லுவார்.

 அவரது சகோதர பாசத்தை நினைத்து அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

 அதேபோல்தான் நாம் மற்றவர்கள் மீட்பு பெற குருக்களை அனுப்பும்படி இயேசுவிடம் கேட்டால் அவரும் நமது சகோதர பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவார்.

 நமக்காக பாடுகள் பட்டு மரித்த ஆண்டவரது மகிழ்ச்சிக்காக

 நாம் அவர் கேட்டுக் கொண்டபடி அறுவடைக்கு அதிக ஆட்களை அனுப்பும்படி  அவரிடம் வேண்டலாமே!"

",ஆக இந்த வசனம் ஆண்டவரால் நமக்காக கூறப்பட்ட. இறைவாக்கு."

" இந்த வசனம் மட்டுமல்ல. இயேசு கூறிய அத்தனை வார்த்தைகளும் நமக்காக கூறப்பட்டவை தான்.

எல்லா நற்செய்தி நூல்களும் நமக்காக எழுதப்பட்டவைதான்,

வெறுமனே வாசிப்பதற்காக மட்டுமல்ல, வாசித்தபடி வாழ்வதற்காக.

இயேசு கேட்டுக் கொண்டபடி அறுவடைக்கு அதிக ஆட்களை 
அனுப்பும்படி அவரை வேண்டுவோம்.

நாமும் அதற்காக உழைப்போம்."

", நாம் அதற்காக உழைப்பது எப்படி?"

"நற்செய்தியை. அறியாதவர்களுக்கு நாமே அறிவிக்கலாம்.

நாமே முன்மாதிரிகையாக நற்செய்திப்படி வாழ்வதன் மூலம்
நற்செய்தியை அறிவிக்கலாம்.

நமது சிந்தனையில் நற்செய்தி இருந்தால் அது இயல்பாகவே சொல் மூலமும், செயல் மூலமும் வெளிப்படும்.

நாமும் நற்செய்திப்படி வாழ்வோம், மற்றவர்களையும் வாழவைப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment