ஒரு நாள் இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது ,
அவருடைய தாயும் சகோதரரும் அவருடன் பேச வெளியே காத்துக்கொண்டிருபதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது..
இயேசு இதைத் தம்மிடம் கூறியவனுக்கு மறுமொழியாக:
"யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,
தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.
வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.
அன்னை மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத நம்முடைய பிரிவினை சகோதரர்கள் இந்த வசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாவது "இயேசுவின்
தாயும் சகோதரரும்" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டு
அன்னை மரியாளுக்கு இயேசுவிற்கு பின் வேறு குழந்தைகள் பிறந்ததாக கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் சகோதரர்கள் என்ற வார்த்தை
அன்னை மரியாளின் தங்கை (இயேசுவின் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்) மக்களைக் குறிக்கிறது.
அன்னை மரியாள் முக்காலமும் கன்னி.
"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்."
என்ற வார்த்தைகளை இயேசுவே
தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை,
தந்தையின் விருப்பப்படி நடக்கிறவனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வாதிட பயன்படுத்துகிறார்கள்.
தந்தையின் விருப்பப்படி நடக்கிறவனை தனது தாயுடன் ஒப்பிடுவதிலிருந்தே அவர் தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது ஏனோ அவர்களுக்கு புரியவில்லை.
காமராஜரைத் தென்னாட்டு காந்தி என்கிறோம். காந்தியின் பெருமையை ஏற்றுக்கொண்டதால் தானே காமராஜரை காந்தியோடு ஒப்பிடுகிறோம்.
தனது அன்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் தான் இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அன்னையோடு ஒப்பிடுகிறார்.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தாயுடன்தான் இருந்தார்..
மூன்று ஆண்டுகள் மட்டுமே பொது வாழ்வுக்கு ஒதுக்கியிருந்தார்.
பொதுவாக எப்போதும் எல்லோருக்கும் நற்செய்தியை போதித்தாலும்
கிடைக்கும் முக்கிய சந்தர்ப்பத்தை முக்கிய போதனையைப் போதிக்கப் பயன்படுத்திக் கொள்வார்.
தந்தையின் சித்தப்படி நடக்க வேண்டியதன் அவசியத்தை தனது தாயைப் பற்றிய பேச்சு வந்தபோது வெளியிட்டார்.
அவருடைய தாய் மரியாள் தந்தையின் சித்தப்படி வாழ்ந்தார். தந்தையின் சித்தப்படி வாழ்பவர்கள் எல்லாம் தனது தாயைப் போன்றவர்களே என்பது அவரது போதனை,
தனது சீடர்களைப் பார்த்து சொன்னது நமக்கும் பொருந்தும்.
நாம் தந்தையின் சித்தப்படி நடந்தால் நாமும் அவருடைய தாயின் உயரிய நிலைக்கு மாறி விடுவோம்.
"எனது தாய், "இதோ, ஆண்டவருடைய அடிமை,"
என தன்னையே ஆண்டவருக்கு அடிமையாக்கி,
என்னை வளர்த்து,
என்னை சிலுவையில் என் தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்து,
அவரது சித்தத்தை நிறைவேற்றினாள்,
அவளை போல யாரெல்லாம் எனது தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் எல்லாம் எனக்கு தாய்தான்." என்கிறார்.
ஆண்டவருடைய அருளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நம்மை
அருளால் நிறைந்த தனது தாயின் நிலைமைக்கு உயர்த்தி பேசுவது இயேசுவின் அளவு கடந்த தாராள குணத்தை காட்டுகிறது.
இவ்வளவு அர்த்தத்தோடு பேசிய நமது ஆண்டவரின் வார்த்தைகளுக்கு தங்களது இஷ்டம்போல் அர்த்தம் கொடுத்து அவரை பெற்ற தாயை குறைத்து பேசுகிறார்கள்.
பெற்ற தாயை யாராவது குறைத்து பேசினால் இயேசு மகிழ்ச்சி அடைவாரா?
இயேசுவே தாயாக ஏற்றுக் கொண்ட அன்னை மரியாளை
அவருடைய சீடர்கள் என்று தங்களையே அழைத்துக் கொள்ளும் இவர்கள்
தாயாக ஏற்றுக் கொள்ள மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
நம்மை பொறுத்தமட்டில் இயேசுவின் தாய் நமது தாய்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது
"இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் பார்த்து,
தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.
பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார்.
இந்த வார்த்தைகளின் மூலம் தன்னை பின்பற்றுகிற அனைவரையும் இயேசு தன் தாயின் பிள்ளைகள் ஆக்கினார். அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டதுபோல
நாமும் நமது அன்னையை நமது வீட்டில் ஏற்றுக் கொள்வோம்.
நமது இல்லத்தின் அரசி நம் தாயாகிய அன்னை மரியாள்தான்.
நாம் இயேசுவின் சகோதரர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது,
அவரைப் போலவே வாழ வேண்டும்.
அவர் நமது மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தது போல,
நாமும் அவருக்காக
அவரது தாயைப்போல
நம்மையே அவருக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.
அன்னை மரியே வாழ்க.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment