Thursday, July 14, 2022

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

", என்னடா பேரப்பிள்ள, ரொம்ப ஆழமா சிந்தித்துக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது."

"ஆமா, தாத்தா. நமது ஆண்டவர் நமக்காக தன்னையே  தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கத்தானே மனிதனாகப் பிறந்தார்!

",ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

"அதில் சந்தேகம் எதுவும் இல்லை. 
"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று  ஆண்டவர் கூறியிருக்கிறாரே,

'பலியை அன்று' என்று ஏன் கூறினார்? தந்தைவிரும்பாத ஒன்றை அவர் எப்படி செய்திருக்க முடியும்?"

",உன்னுடைய நண்பனுடைய திருமண விழாவிற்குச் சென்று அவனுக்கு திருமண மொய்யாக ஆயிரம் ரூபாய் கவரில் வைத்து கொடுத்திருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

நீ  பணம் கொடுத்தது வெறும் மொய்யாகவா? அல்லது நட்பின் காரணமாகவா?"

"நட்பின் காரணமாகத்தான். நட்பு இல்லாவிட்டால் திருமணத்திற்கு போயிருக்க மாட்டேனே."

",இயேசு  தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்ததற்கு காரணமாக இருந்தது எது?"

"நம் மேல் அவர் வைத்திருந்த அன்பு."

",நம்மிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது எதை?"

"நமது அன்பை."

",அவர் மீது அன்பே இல்லாமல் ஆயிரம் ரூபாய் அவருக்கு காணிக்கையாக கொடுக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்  உன்னிடம் என்ன சொல்லுவார்?''

"காணிக்கையை அன்று, அன்பையே விரும்புகிறேன்" என்று சொல்லுவார்."

", நீ முதலில் குறிப்பிட்ட இறைவாக்கு ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் ஓசே இறைவாக்கினர் மூலமாக  இஸ்ரேல் மக்களுக்குக் கூறியது.

"ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்:

 தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, 

கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்."
(ஓசே .6:6)

அதாவது அன்பின் காரணமாக இல்லாமல் கொடுக்கப்படும் எந்த பலியையும் ஆண்டவர் விரும்பவில்லை.

இயேசு நமக்காக தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தது நம் மேல் கொண்ட அன்பின் காரணமாக.

கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நம்முடைய அன்பைத்தான்.

அன்பு இல்லாமல் கொடுக்கும் எதையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நமது அயலானுக்கும் முதலில் கொடுக்க வேண்டியது நமது அன்பேயே.

உடை இல்லாத ஒருவனுக்கு உடை கொடுக்க வேண்டுமென்றால் அவன் மீது நமக்குள்ள அன்பின் காரணமாக கொடுக்க வேண்டும்.


ஒரு நாள் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்று கொண்டிருந்தபோது, அவருடைய சீடர்களுக்குப் பசியெடுத்தது.

 அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

இதை தண்டனைக்குரிய குற்றமாக பரிசேயர் கருதினர்.

பசி எடுத்தவர்கள் மீது இரக்கம் காட்டாமல், அவர்கள் மீது குற்றம் சாட்டியதை இயேசு விரும்பவில்லை.

ஆகவே அவர்களை நோக்கி 

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருப்பின், குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்."

என்று சொன்னார்.

அன்பின் குழந்தைதான் இரக்கம்.
அன்பு இல்லாத இடத்தில் இரக்கம் இருக்க முடியாது.

தேவைப்படுபவர் மீது நமக்கு இரக்கம் ஏற்பட வேண்டும்.

இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு தேவையானதை கொடுக்க வேண்டும்.

எப்படி அன்பு இல்லாமல் கொடுக்கப்பட்ட பலி பயனற்றதோ,

அப்படியே இரக்கம்  இல்லாமல் கொடுக்கப்படும் உதவியும் பயனற்றது.

இரக்கம்  இல்லாமல் ஒருவர் மேல் குற்றம் காண்பது குற்றம்.

 பசியின் காரணமாக அப்போஸ்தலர்கள் கதிர்களைக் கொய்து தின்றதைக் குற்றம் என்று பரிசேயர்கள் சொன்னது விரும்பத் தகாதது. 

ஆண்டவர் அப்படி ஏன் சொன்னார் என்பது புரிகிறதா?"

" இப்போது புரிகிறது. நாமும் அநேக சமயங்களில்   பரிசேயர்கள் செய்ததையே செய்கிறோம்.

களைப்பின் காரணமாக கொஞ்ச நேரம் அதிகமாக தூங்கிய பிள்ளையைத் தாய் கண்டிப்பது கூட இரக்கம் அற்ற செயல்தான்.

இரக்கம் உள்ளவர்கள்  மற்றவர்கள் தங்கள் பலகீனம் காரணமாக செய்யும் சிறிய தவறுகளை பெரிது படுத்த மாட்டார்கள்.

நாம் நமது அயலானுக்கு செய்யும் ஒவ்வொரு  செயலுக்குப் பின்னாலும் அவன் மீது அன்பும் இரக்கமும் இருக்க வேண்டும்.

இயேசு நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்கிறார்.

நமக்கு சுகம் இல்லாவிட்டால் நம் மீது நமக்கு இரக்கம் ஏற்படும்.

அந்த இரக்கத்தின் காரணமாகவே நாம் மருத்துவமனைக்கு செல்கிறோம்.

நமது அயலானுக்கு சுகம் இல்லாவிட்டால் நம் மீது நாம் காட்டும் இரக்கம் அவன் மீதும் இருக்க வேண்டும்.

அந்த இரக்கம் அவனுக்கு உதவி செய்ய தூண்ட வேண்டும்.

தாகம் எடுப்போருக்கு தண்ணீர் கொடுப்பதும்,

பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதும்,

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பதும்,

சுகம் இல்லாதவர்களை போய் பார்த்து ஆறுதல் கூறுவதும்,

சிறையில் உள்ளவர்களை போய் பார்த்து ஆறுதல் கூறுவதும்,

வழி தெரியாதவர்களுக்கு வழிகாட்டுவதும்

நாம்  அவர்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக இருக்க வேண்டும். நமது வள்ளல் தன்மையை விளம்பர படுத்துவது காரணமாக இருக்கக் கூடாது."

",ஆன்மீக விசயங்களில் சந்தேகம் ஏற்படுகின்றவர்களுக்கு சந்தேகம் நீங்க உதவுவதும், 

ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பதும்,

பாவம் செய்தவர்கள் மனம் திரும்ப உதவுவதும்,

வருத்தமாய் இருப்பவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதும்,

நமது மனதை காயப்படுத்துபவர்களை மன்னிப்பதும்,

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதும்,

தொந்தரவு கொடுப்பவர்களோடு மகிழ்ச்சியாக பழகுவதும்,

இன்னும் இது போன்ற ஏராளமான பிறர் உதவி செயல்களும் 

மற்றவர்கள் மீது நாம் கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக இருக்க வேண்டும்.

நாம் இயேசுவைப் பார்த்து 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்று செபிக்கிறோம்.

நாமும் மற்றவர்கள் மீது இரக்கமாக இருக்க வேண்டும்.

இரக்கம் தான் நம்மை இயேசுவின் சீடர்களாக மாற்றுகிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் நற்செய்தியை வாசிக்கும் போது வாசகத்தின் அடிப்படையில் ஏதாவது ஒரு இரக்கச் செயலை அன்று செய்ய வேண்டும் என்று தீர்மானித்து,

 தீர்மானத்தை நிறைவேற்றவும் வேண்டும்.

நமது செயல்கள் நற்செயல்களாக மாற வேண்டும் என்றால் அவை இரக்கத்தில் காரணமாக செய்யப்பட வேண்டும்.

நமது ஆண்டவர் இரக்கத்தின் காரணமாக சென்ற இடமெல்லாம் எல்லோருக்கும் உதவி செய்து வாழ்ந்தது போல,

 நாமும் செல்லுமிடமெல்லாம் இரக்கத்தோடு செல்வோம்,

உதவி செய்து வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment