(மத்.13:55)
நாட்டை ஆளும் மன்னனுக்கு நாட்டு மக்கள் அரசனுக்குரிய மரியாதையைக் கொடுத்தாலும்,
அவருடைய குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் மத்தியில் அவன் உறவினன்தான்.
இயேசு இறைமகன், சர்வ வல்லப கடவுள். அது மாதாவுக்கும், சூசையப்பருக்கும் தெரியும்.
அவர் 30 ஆண்டுகள் வாழ்ந்த நாசரேத்தூர் மக்களைப் பொறுத்த மட்டில் அவர் தச்சன்மகன், தச்சு வேலை செய்து வந்தவர்.
30 ஆண்டுகளும் அவர் மாதாவுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.
ஊர் மக்களிடம் புதுமைகள் ஏதும் செய்து தன்னை வெளிப்படுத்தவில்லை.
பொது வாழ்வுக்கு வந்து நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த பின்பு தான் புதுமைகள் செய்து
மக்களிடையே பிரபல்யமானார்.
பொது வாழ்வின்போது அவர்
தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய்,
"இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?
இவர் தச்சன்மகன் அல்லரோ ?
இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ?
இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?'
என்று அவருடன் வாழ்ந்த ஊர். மக்கள் ஆச்சரியப் பட்டனர்.
கத்தோலிக்கர்களாகிய நாம் இயேசுவின் தாய் முக்காலமும் கன்னி என்று விசுவசிக்கிறோம்.
ஆனால் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களில் பலர் இயேசு கன்னியின் மகன் என்பதை விசுவசித்தாலும்,
இயேசு பிறந்த பின்பு மாதாவுக்கு குழந்தைகள் பிறந்தன என்று தவறாகப் போதிக்கின்றனர்.
தங்கள் போதனைக்கு சான்றாக
"இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?''
என்ற வசனத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடன் பிறந்தவர்களைச் சகோதரர்கள் என்று அழைத்தாலும்,
நம்முடைய தந்தையின் சகோதரர்களின் பிள்ளைகளையும்,
தாயின் சகோதரிகளின் பிள்ளைகளையும்
அதே வார்த்தையால்தான் அழைக்கிறோம்.
யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோர் அன்னை மரியாளின் சகோதரியின் பிள்ளைகள்.
சித்தி பிள்ளைகள் என்ற முறையில் சகோதரர்கள்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது
"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர்.
தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அவர்களுள் மதலென் மரியாளும்,
யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும்,
செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்." (மத்.27:55, 56)
யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாள்தான் அன்னை மரியாளின் சகோதரி.
"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும்,
அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,
மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் "
(அரு. 19:25)
"அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்," என்று குறிப்பிடப் பட்டிருப்பவர்தான் யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாய்.
இதில் வரும் கிலோப்பா சூசையப்பரின் சகோதரர்.
அன்னை மரியாளின் கணவரின் சகோதார் மனைவி
அன்னை மரியாளுக்குச் சகோதரி.
அந்த சகோதரியின் மக்கள்தான்
யாகப்பன், சூசை, சீமோன், யூதா .
இதில் வரும் யாகப்பர் சின்ன யாகப்பர் என்று அழைக்கப் படுகிறார்.
அருளப்பரின் சகோதரர் யாகப்பர் பெரிய யாகப்பர்.
"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" .
(மத். 12:50)
என்று இயேசு கூறியிருக்கிறார்.
இப்போது நம்மைப் பற்றி நாமே கொஞ்சம் சிந்திப்போம்.
நம்மில் எத்தனை பேர் வானகத்திலுள்ள நம் தந்தையின் விருப்பப்படி நடக்கிறோம்?
ஒவ்வொருவரும் நம்மை பார்த்து கேட்போம்:
"நான் வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறேனா?"
இயேசு பிறப்பால் இறைமகன்,
நாம் படைப்பால் இறைமக்கள்.
இறைத் தந்தையின் சித்தமே இறைமகனின் சித்தமும்.
அவரைப் பொறுத்தமட்டில் தந்தையின் சித்தப்படி நடப்பது அவரது சுபாவம். (Nature)
தந்தையின் சித்தப்படி நடக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் இருவரும், தூய ஆவியோடு, ஒரே கடவுள்.
கடவுள் தனக்கு எதிராக தானே இயங்க முடியாது.
நாம் படைப்பால் இறைமக்களாய் இருந்தாலும்,
பாவத்தினால்,
அதாவது தந்தையின் சித்தப்படி நடக்காததினால்
இறைமக்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இயேசு மனிதனாக பிறந்தது நம்மை இறை மக்கள் என்ற பெயருக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காகத்தான்.
அவரது தந்தையை "எங்கள் தந்தையே " என்று அழைக்க நமக்கு இயேசு அனுமதி கொடுத்திருக்கிறார்.
அதாவது நம்மை தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
நாம் தந்தையின் சித்தப்படி வாழ்ந்தால்தான் நாம் இயேசுவின் சகோதரர்கள் எந்த பெயருக்கு ஏற்றவர்கள் ஆவோம்.
தந்தையின் சித்தப்படி, அதாவது, அவருடைய கட்டளைகளின்படி வாழ்வோம்.
இயேசு ஏழையாக வாழ்ந்தார்.
நாமும் ஏழைகளாக வாழ்வோம்.
இயேசு நற்செய்தியை அறிவித்தார்,
நாமும் அறிவிப்போம்.
இயேசு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்தார்,
நாமும் அப்படியே செய்வோம்.
இயேசு தன்னை துன்பப்படுத்தியவர்களை மன்னித்தார்,
நாமும் மன்னிப்போம்.
இயேசு சிலுவையைச் சுமந்தார், நாமும் சுமப்போம்.
இயேசு நமக்காக மரித்தார்.
நாம் இயேசுவுக்காக மரிப்போம்.
வாழ்வோம், இயேசுவின் தாயும், சகோதர, சகோதரிகளுமாக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment