மற்ற ஊர்களில் செய்த அளவுக்கு சொந்த ஊரில் இயேசு நிறைய புதுமைகள் செய்யவில்லை, காரணம் அங்குள்ள மக்களிடம் போதிய விசுவாசம் இல்லை.
ஒவ்வொரு முறையும் நோயாளிகளைக் குணமாக்கிய போதும் இயேசு "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்று சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இப்படி சொன்னது விசுவாசத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அறிவுறுத்துவதற்காகத்தான்.
குணம் அளிப்பது இயேசு தான். ஆனால் அவர் விசுவாசம் உள்ளவர்களை மட்டும் குணமாக்கியதால் விசுவாசம் குணமாகியது என்றார்.
விசுவாசம் என்றால் என்ன?
இயேசு கடவுள் என்றும்,
சர்வவல்லபர் என்றும்,
புதுமைகள் செய்து நாம் கேட்கும் எல்லா உதவிகளையும் அவரால் செய்ய முடியும் என்றும் ,
நாம் கேட்டதைக் கட்டாயம் தருவார் என்றும் ஏற்றுக் கொள்வது மட்டும் விசுவாசம் அல்ல,
நமது உண்மையான நிலையை ஏற்றுக் கொள்வதும் சேர்ந்து தான் விசுவாசம்.
நமது உண்மையான நிலை என்ன?
1. நாம் ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.
நம்மில் நாமே ஒன்றுமில்லாதவர்கள்தான்.
2. கடவுள் உதவி இன்றி நம்மால் சுயமாக ஒன்றுமே செய்ய முடியாது. கடவுள் உதவி இன்றி அசையக்கூட முடியாது.
3. நம்மை நாமே கடவுள் கையில் ஒப்படைத்துவிட்டால்,
அதாவது, அர்ப்பணித்து விட்டால் கடவுள் உதவியுடன் எதையும் சாதிக்கலாம்.
4. கடவுளின் வல்லமையையும், நமது ஒன்றும் இல்லாமையையும் ஏற்றுக்கொண்டு,
நம்மை முற்றிலுமாக அவரிடம் அர்ப்பணித்து வாழ்வதுதான் விசுவாசம்.
நம்மை கடவுளிடம் முழுமையாக அர்ப்பணித்து விட்டால் அதன் பிறகு வாழ்வது நாம் அல்ல கடவுளே நம்மிடம் வாழ்வார்.
அந்த அளவுக்கு நாம் கடவுளிடம் ஒன்றித்து விடுவோம்.
இந்த ஒன்றிப்பில் நாம் எதை நினைக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறாரோ அதையே நினைப்போம்.
நாம் எதற்கு ஆசைப்பட வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ அதற்கே ஆசைப்படுவோம்.
நாம் எதை பேச வேண்டும் என்று நினைக்கிறாரோ அதையே பேசுவோம்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதையே செய்வோம்.
நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் கடவுள் இருப்பார்.
இந்த நிலையில் நாம் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் செய்வார்.
ஏனெனில் நாம் எதைக் கேட்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதையே கேட்போம்.
முழுமையாக விசுவாசமுள்ளவர்கள் கடவுளின் சித்தப்படி தான் நினைப்பார்கள், பேசுவார்கள், செய்வார்கள்.
ஆகவே அவர்கள் எதைக் கேட்டாலும் கடவுள் கட்டாயம் செய்வார்.
அவர்கள் கேட்டதைக் கடவுள் செய்வதற்கு காரணம் அவர்களுடைய விசுவாசம்...
விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசத்திற்கு எதிரான எதையும் கேட்க மாட்டார்கள்.
ஆகவே அவர்கள் கேட்பது உறுதியாக கிடைக்கும்.
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னது அவரை விசுவசிப்பவர்களுக்கு.
கேட்டது கிடைக்க வேண்டும் என்றால்
விசுவாச வாழ்வு அதாவது அர்ப்பண வாழ்வு வாழ்வோம்.
இயேசுவிடம் நம்மை அர்ப்பணித்து வாழ்ந்தால்
நாம் அவருக்காக மட்டும் வாழ்வோம்.
அவருக்காக மட்டும் வாழ்ந்தால் அவர் சித்தத்தை மட்டுமே செய்வோம்.
அவர் சித்தத்தை மட்டுமே செய்தால் நாம் கேட்பதும் அவருடைய சித்தப்படி தான் இருக்கும்.
அவருடைய சித்தப்படி கேட்டதை அவரால் தராமல் இருக்க முடியாது,
ஏனெனில் அவர் செயல் புரிவது அவரது சித்தப்படி தானே.
"இயேசுவே, உமது சித்தம் எனது பாக்கியம்.
உமது விருப்பம் எனது விருப்பம்.
இனி செயல் புரியப்போவது நானல்ல, நீரே என்னில் செயல் புரியும்!
இனி வாழப்போவது நானல்ல, நீரே என்னில் வாழும்!"
"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"
(அரு.17:21)
என்று தந்தையை நோக்கி இயேசு மன்றாடியதற்கு இணங்க நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment