Tuesday, July 19, 2022

''உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்: அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." ( மத். 12:13)

''உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்: அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." ( மத். 12:13)

"தாத்தா, நற்செய்தியை வாசிக்கும் போது சில வசனங்களின் பொருள் புரியவில்லையே, அது ஏன்?"

", பொதுவாகச் சொல்லாமல் வசனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லு."

"சீடர் இயேசுவிடம் "அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?"

என்று கேட்டபோது கூறிய பதிலில் வரும்,

''உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்: அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்."

என்ற வசனம்."

", ஒருவருடைய வார்த்தைகளுக்குப் பொருள் காணவேண்டுமென்றால் நீ பார்க்க வேண்டியது அகராதியையா? அவரையா?"

"விளங்கவில்லை."

", உன்னுடைய ஆசிரியர் உன்னைப் பார்த்து, "நீ படிப்புக்கு லாயக்கில்லை. பேசாம எருமை மாடு மேய்க்கப் போ" என்று சொன்னால்,

அகராதிப்படி பொருள் பார்த்து எருமை மாடு மேய்க்கப் போயிருவியா? அல்லது ....."

"ஆசிரியர் அந்த பொருளில் சொல்ல மாட்டார்.

அவருக்கு எனது படிப்பில் மிகுந்த அக்கரை உண்டு.

இப்படி சொன்னால் தான் நான் படிப்பேன் என்று நினைத்து சொல்லியிருப்பார்.

எங்க அம்மா கூட என்னை பார்த்து "உன்னைப் பெறுவதற்கு பதிலாக ஒரு விளக்கு மாற்றைப் பெற்றிருக்கலாம், பெருக்கவாவது உதவும்" என்று சொன்னார்கள்.

நான் அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பொருளில் தான் சொன்னார்கள்.

வார்த்தைகளுக்குப் பொருள் காண அகராதியை பார்க்கக் கூடாது, ஆளைத்தான் பார்க்க வேண்டும்."

",அன்னை மரியாளும் சூசையப்பரும் இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுப்பதற்காக கோவிலுக்குச் சென்ற போது 

 
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து, 

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்:"

என்றார்.

இயேசு மக்களது வீழ்ச்சிக்காகவா மனிதனாகப் பிறந்தார்?''

"இல்லை. அவரை ஏற்றுக் கொண்டோர் எழுச்சி அடைவர்.

ஏற்றுக் கொள்ளாதோர் வீழ்ச்சி அடைவர்.

இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அதை வைத்து தான் பொருள் காண வேண்டும், அகராதியை பார்த்து அல்ல."

",இதேபோன்று இயேசுவை பார்த்து தான் பொருள் கொள்ளக்கூடிய வசனங்கள் இன்னும் இருக்கின்றன.

அவற்றில் 'ஒன்றுதான் நீ கூறியதும்.

சர்வ வல்லபரான இறைமகன் நம்மை மீட்பதற்காக மனித உரு எடுத்தார்.

அவர் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, 

நோயாளிகளைக் குணமாக்கி,

எல்லோருக்கும் நன்மையையே செய்து.

இறுதியில் நமக்காகப் பாடுகள் பட்டு, சிலுவையில் நமக்காக பலியானார்.

ஒருவருக்கும் விளங்காதபடி நற்செய்தியை அறிவிக்கவும்,

உள்ளவனுக்குக் கொடுக்கவும்,
 இல்லாதவனிடமிருந்து உள்ளதையும் எடுக்கவுமா மனிதன் ஆனார்?"

"நிச்சயமாக இருக்காது. அவர் நற்செய்தி அறிவித்ததே அதனால் மக்கள் ஆன்மீக நலன் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

அவரது வார்த்தைகளுக்கு அவரைப் பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் விளக்குங்களேன்."

", அவர் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தபோது,

 பெருங்கூட்டம் அவரை நெருக்கியதால் அவர் படகிலேறி அமர வேண்டியிருந்தது.

அங்கிருந்து விதைப்பவன் உவமையைச் சொன்னார்.

அவர் கூட்டத்தை பார்த்த உடனேயே 

அதில் எத்தனை பேர் தனது நற்செய்தியை கேட்டு புரிய வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்கள்,

எத்தனை பேர் குணம் அடைய மட்டும் வந்திருக்கிறார்கள்,

எத்தனை பேர் கூட்டத்தோடு கூட்டமாக பொழுது போக்கிற்காக வந்திருக்கிறார்கள் 

என்று அவருக்குத் தெரியும்.

அவர் சர்வ ஞானம் உள்ள கடவுள்.

நற்செய்தியில் ஆர்வம் இல்லாத அநேகர் அந்த கூட்டத்தில் இருந்திருப்பது அவருக்கு தெரியும்.

அவர்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

அதனால்தான் விதைப்பவன் உவமையை சொல்லி முடித்தவுடன்,

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

கூட்டத்தில் கேட்கச் செவி இல்லாதவர்களும் இருந்ததால்தான் இயேசு அப்படி சொன்னார்.

அப்போஸ்தலர்கள், அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?" என்று கேட்ட போது,

வந்தவர்களின் மனநிலையை பற்றி ஆண்டவர் கூறினார்.


வந்தவர்களில் அநேகர்

அவர்கள் கண்டும் காணாத , கேட்டும் கேளாத ,

 உணர விருப்பமில்லாத குணத்தினர்.

கேட்கச் செவியுள்ளவனுக்கு,

அதாவது.

கேட்க வேண்டும் என்ற உண்மையான ஆசை உள்ளவனுக்கு 
நிறைய சொல்லப்படும்.
(ஆசை உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்:)

விருப்பமில்லாதவன் தான் கேட்டதையும் மறந்து விடுவான்.
(ஆசை இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்)

வந்த கூட்டத்தின் மனநிலையை பற்றி ஆண்டவர் சீடர்களும் கூறிய வார்த்தைகள் இவை.

ஆனால் சீடர்கள் பேறு பெற்றவர்கள்.

"உங்கள் கண்களோ பேறுபெற்றவை: ஏனெனில் அவை காண்கின்றன. 

காதுகளும் பேறுபெற்றவை: ஏனெனில் அவை கேட்கின்றன."

ஆகவே தான் அவர்களுக்கு விதைப்பவன் உவமையின் பொருளை விளக்குகிறார்.

அந்த விளக்கம் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் உலகெங்கும் சென்று மக்களுக்கு அறிவிக்க வேண்டிய விளக்கம்.

அவர்களுடைய வாரிசுகளாகிய நமது குருக்கள் இன்று திருப்பலியின் போது நற்செய்தி வாசகங்களுக்கு நமக்கு விளக்கம்  தருகிறார்கள்.

நாம் கோவிலில் அமர்ந்திருக்கிறோம்.

எப்படி?

ஆண்டவர் எதிர் பார்க்கின்றபடியா?

 அல்லது 

அன்று அவர் முன் இருந்த கூட்டத்தைப் போலவா?

அதாவது,

காண கண்களும் ,
கேட்க செவிகளும் ,.
உணர உள்ளங்களும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

அல்லது,

கண்ணிருந்தும் பார்க்காதவர்களாகவும் ,

காது இருந்தும் கேட்காதவர்வளாகவும்,

 உள்ளம் இருந்தும் உணர முடியாதவர்களாகவும் இருக்கிறோமா?

எத்தனை பேர் பிரசங்கத்தில் சுவாமியாரைப் பார்க்கிறோம்?

 எத்தனை பேர் அவர் சொல்வதை கூர்ந்து கேட்கிறோம்?

எத்தனை பேர் கேட்பதை உள்ளத்தில் பதிக்கிறோம்?


எத்தனை பேர் பிரசங்கத்தில் சுவாமியாரைப் பார்க்காமல் பராக்கு பார்க்கிறோம் அல்லது தூங்குகிறோம்?

எத்தனை பேர் சுவாமியார் சொல்வதைக் கேட்காமல் பக்கத்தில் இருப்பவர்களோடு அல்லது cell phoneல் பேசுகிறோம்?

எத்தனை பேர் சுவாமியார் சொல்வதை ஒரு காது வழியே வாங்கி, உள்ளத்தில் இருத்தாமல், இன்னொரு காது வழியே விட்டு விடுகிறோம்?

சிந்தித்துப் பார்ப்போம்.

அன்று நடந்தவற்றை நற்செய்தியாளர்கள் குறித்து வைத்திருப்பதன் நோக்கம்  குருக்கள் அளிக்கும் நற்செய்தி விளக்கங்களால் நாம் பயன் பெறுவதற்காகத்தான்."

"உண்மைதான் தாத்தா.

திருமண வீட்டிற்குப் போய்  
சாப்பிடாமல் வந்து விடுபவர்களை போல,

 திருப்பலிக்குப் போனாலும் பிரசங்கத்தால் பயன் பெறாமல் வந்து விடுகிறோம்.

இனியாவது,

பிரசங்கத்தைக் காது கொடுத்து கேட்போம்,

 உள்ளத்தில் இருத்துவோம்,

 அதன்படி வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment