Thursday, July 28, 2022

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்(மத்.13:4

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்
(மத்.13:48)

இயேசு விண்ணரசை கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பிடுகிறார்.

மீனவர்கள் வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, 

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு

 தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.

அவ்வாறுதான் உலகம் முடிவில் மனிதர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு .

நல்லவர்கள் மோட்ச நிலையையும் கெட்டவர்கள் நரக நிலையையும் அடைவார்கள்.

உலக முடிவில் நாம் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டுமென்றால் 

மீனவர்கள் செய்ததைப் போன்ற ஒரு வேலையை நாமும் உலகில் செய்ய வேண்டும். 

கடலில் மீனவர்களுக்கு வேண்டிய மீன்களும் வேண்டாதவையும் கிடக்கின்றன.

அவர்கள் வலை வீசும் போது இரண்டுமே வலையில் அகப்படுகின்றன.

மீனவர்கள் வேண்டிய மீன்களை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை எறிந்து விடுகிறார்கள்.

உலகில் நமது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டியவையும் இருக்கின்றன, வேண்டாதவையும் இருக்கின்றன.

நமது கண் வலையை வீசும் போது இரண்டுமே அகப்படுகின்றன.

நாம் ஆன்மீக வாழ்வுக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை எறிந்து விட வேண்டும்.

இப்படி செய்து வாழ்ந்தால் வாழ்வின் முடிவில் நாம் விண்ணக அரசுக்குள் நுழைவோம்.

நல்லவை மட்டும் நிறைந்த சூழ்நிலை எதுவும் உலகில் இருப்பதில்லை.

நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அங்கு நல்லவையும் இருக்கும் கெட்டவையும் இருக்கும்.

நல்லவர்களாக வாழ விரும்புகிறவர்கள் நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பர்,

கெட்டவர்களாக வாழ விரும்புகிறவர்கள் கெட்டவற்றைத் தேர்ந்தெடுப்பர்.

நாம் வாழும் சூழ்நிலையில்

 திருப்பலியும், திருவிருந்தும் நடைபெறும், 
இயேசு நம்மோடு பேசுவதற்காக திவ்ய நற்கருணைப் பேழையில் இரவும், பகலும் காத்துக் கொண்டிருக்கும் கோவில்கள் இருக்கின்றன.

தேவத்திரவிய அனுமானங்களாலும், ஆண்டவரது அருள்வரங்களாலும் நம்மை ஆசீர்வதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் குருக்கள் இருக்கிறார்கள்.

வாசித்து இறைவழி நடக்க நமக்கு வழிகாட்ட பைபிளும், ஏராளமான ஞானவாசக புத்தகங்களும் இருக்கின்றன.

செபக்கூட்ட மையங்கள் இருக்கின்றன.

ஞான உபதேசத்தோடு, நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

இன்னும் இதைப்போன்ற விண்ணகவழியைக் காட்டும் ஏராளமான ஆன்மீக சாதனங்களோடு,


தீமைகளை பொழுதுபோக்காக்கி காண்போரது கண்ணையும், கருத்தையும் கெடுக்கும் சினிமாக்கள் காண்பிக்கப்படும் தியேட்டர்களும்,

குடித்துக் குடியைக் கெடுக்க கொடுத்த வண்ணமிருக்கும் டாஸ்மாக் கடைகளும்,

மற்றவர்களைக் கெடுத்துப் பேசியே நேரத்தை வீணடிப்பவர்களும்,

இலஞ்சம் வாங்கியே பிழைப்பை நடத்தும் பெரியவர்களும்,

குறைவான நல்ல அம்சங்களோடு நிறைவான கெட்ட அம்சங்கள் நிறைந்த cell phoneகளும், TV பெட்டிகளும் 

இவற்றைப் போலவே ஆன்மாவைக் கெடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் சாதனங்களும் ஏராளமாக உள்ளன.

நாம் வாழும் உலகிலேயே நம் கண் வலையில் விழும் இவற்றில் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, கெட்டவைகளைத் தூர எறிபவர்கள்தான்

உலக முடிவில் நல்லவர்கள் பக்கம் இடம் பிடிப்பார்கள்.

நல்லவற்றைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது, அதைச் சிறப்பாய்ச் செய்ய வேண்டும்.

தினமும் திருப்பலியில். பங்கேற்பது என்று தீர்மானிப்பது மட்டும் போதாது. பக்தியுடன் பங்கேற்க வேண்டும்.

தூய்மையான உள்ளத்தோடு திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் நமது சிந்தனை, சொல், செயலை இயக்க வேண்டும்.

செய்பவை அனைத்தையும் இறைவனது அதிமிக மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

நாம் வழிபடும் அதே இயேசுவைத்தான் புனிதர்களும் வழிபட்டார்கள்.

அதே தேவத் திரவிய அனுமானங்களைத்தான் பெற்றார்கள்.

அதே அன்போடுதான் வாழ்ந்தார்கள்.

ஆனால் செய்ததை நம்மை விட சிறப்பாகச் செய்தார்கள்.

சிறப்பின் அளவிற்கு ஏற்ப அவர்களது புனிதத்துவம் இருக்கிறது.

நாமும் நல்லதைச் செய்வோம்.
செய்வதைச் சிறப்பாய்ச் செய்வோம்.

செய்ததன் பயனை விண்ணரசில் பேரின்பமாய் அனுபவிப்போம். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment