Wednesday, July 13, 2022

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"(மத்.11:28)

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"
(மத்.11:28)

"தாத்தா, இயேசு 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே' என்று சொல்லும்போது எந்த சுமையை குறிப்பிடுகிறார்?"

",நீ என்ன நினைக்கிறாய்?"

"மனிதனுக்கு ஆன்மாவும் உடலும் இருப்பதால் இரண்டு வகையான சுமைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். 

அவற்றில் எந்த வகையை ஆண்டவர் குறிப்பிடுகிறார் என்று கேட்டேன்."

",ஆன்மா சம்பந்தப்பட்ட சுமை எது என்று நினைக்கிறாய்?'

"பாவமாகத்தான் இருக்க வேண்டும். 

ஆனால் பாவம் செய்யும்போது அது சுமையாக தெரியாது. 

அதில் உள்ள இன்பத்திற்காகத்தான் மக்கள் அதை விரும்பி செய்கிறார்கள்.

பாவத்தின் மீது வெறுப்பு ஏற்படும்போதுதான் செய்த பாவங்கள் சுமையாக தெரியும்.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியை சாப்பிடும் போது அது அவர்களுக்கு இனிப்பாகத்தானே இருந்திருக்கும்.

அதன் விளைவை அனுபவிக்க நேர்ந்த போது தான் அது சுமை என்பது புரிந்திருக்கும்.

அதேபோல் தான் மக்கள் பாவ வாழ்க்கை வாழும் போது இன்பகரமாகத்தான் வாழ்ந்திருப்பார்கள்.

ஆனால் பாவத்தினால் மன அமைதியை இழந்து,

அதனால் ஏற்பட போகும் விளைவை உணர ஆரம்பிக்கும் போது தான் அது சுமையாக மாறி,

வாழ்க்கையில் சோர்வை ஏற்படுத்தும்.

பாவச் சுமையிலிருந்து விடுதலை பெற எண்ணம் தோன்றும்.

பாவச் சுமையால் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களைப் பார்த்து தான் நமது ஆண்டவர் சொல்கிறார்,

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்."

பாவச் சுமையை அவர் முன் இறக்கி வைத்து விட்டு நாம் நிம்மதியாக இருக்கலாம்.

மனுக்குலத்தின் பாவச் சுமையைத்தான் இயேசு சிலுவை உருவில் சுமந்து, 

அதில் தன்னையே பலியாக்கி,

அதற்குக் பரிகாரம் செய்தார்.

நாமும் நமது பாவச் சுமையை அவர் முன் இறக்கி வைப்பதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தி 

பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தையும் ஏற்படுத்தினார்.

பாவம் சங்கீர்த்தனை தொட்டியில் குருவானவர் முன் நமது பாவ சுமையை இறக்கி வைக்கும் போது நாம் இயேசுவின் முன்புதான் இறக்கி வைக்கிறோம்.

குருத்துவதையும் பாவ சங்கீர்த்தனத்தையும் நம்பாதவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல.

நாம் பலகீனமானவர்கள்.

யாரும் "நான் பாவத்தில் விழவே மாட்டேன்" என்று உறுதியாக கூற முடியாது.

விழ நேரும்போது இயேசுவின் காலடிதான்,

அதாவது,

பாவசங்கீர்த்தனத் தொட்டிதான் நமது ஒரே புகலிடம்.

இது சாதாரண கிறிஸ்தவன் முதல் பாப்பரசர் வரை அனைவருக்கும் பொருந்தும்."

", இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகுக்கு வந்தார்.

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:13)

திமிர்வாதம் கொண்டவனைக் குணமாக்கும்போது,

"அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" 

"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"--

 திமிர்வாதக்காரனை நோக்கி- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ"
(லூக். 5:20, 24)

என்று கூறியபோது பாவங்களை மன்னிக்க அவருக்கு இருந்த அதிகாரத்தோடு ஆசையையும் வெளிப்படுத்தினார்.

அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது,

நல்ல கள்ளனை மன்னித்ததோடு,
அவனைப் பார்த்து,

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
(லூக்.23:43)

இவை எல்லாம் பாவங்களை மன்னிக்க அவருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றன.

சரி, இப்போது உடல் ரீதியான சுமையைப் பற்றி கூறு பார்ப்போம்."



"ஆன்மீக ரீதியான சுமை இறக்கி வைக்க வேண்டிய சுமை.

உடல் ரீதியான சுமை ஏற்றுக் கொள்ள வேண்டிய சுமை.

உடலில் ஏற்படும் நோய் நொடிகள், நிறைவேறாத ஆசைகள், 
 வாழ்வில் சந்திக்க நேர்ந்த ஏமாற்றங்கள், 
அவமானங்கள்,
 தோல்விகள், 
குடும்ப பிரச்சனைகள்

போன்ற துன்பங்கள்தான் உடல் ரீதியான சுமைகள்.

ஆண்டவரது வார்த்தையில் சிலுவைகள்.

ஆண்டவரே சிலுவையைத் தேடித்தான் உலகுக்கு வந்தார்.

தனது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின் பற்றுபவன்தான் அவரது சீடனாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது.

யாராவது நமது துன்பங்களைப் போக்க மாட்டார்களா, ஆறுதல் கூற மாட்டார்களா எண்ணி ஏங்குகிறோம்.

அப்போது ஆண்டவர் கூறுகிறார்,

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்"

எப்படி இளைப்பாற்றுவார்?

இயேசு நம்மிடம் கூறுகிறார்,

"பாரமான சிலுவையைச் சுமந்து சோர்ந்து போயிருக்கும் என் அருமை மக்களே என்னிடம் வாருங்கள்.

நீங்கள் சுமந்து கொண்டிருப்பது வெறுமனே உலகைச் சார்ந்த துன்பம் அல்ல. 

உங்களுக்காக என் உயிரைப் பலியாய்க் கொடுத்த எனது சிலுவை.

நீங்கள் என்னைத்தான் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

உலகின் பாவங்களை போக்க நான் சுமந்த அதே சுமையைத்தான் என்னோடு சேர்த்து சுமந்து கொண்டிருக்கிறீர்கள். 

நீங்கள் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ள என்னைப் பாருங்கள்.

அதே சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உங்களுள் இறங்கும்.

நீங்கள் சுமக்கும் சிலுவையின்
என் நுகம் எவ்வளவு இனிது, என் சுமை எவ்வளவு எளிது என்பது புரியும்.

நீங்கள் சிலுவையைச் சுமக்கும்போது 

 உங்களைப் படைத்து பராமரித்து வரும் என்னை,

உங்களுக்காக சிலுவையைச் சுமந்து அதில் மரித்த என்னை,

அளவு கடந்த அன்புடன் உங்களை நேசிக்கும் உங்களது அன்பு இயேசுவைத்தான் சுமக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் 

உங்கள் சிலுவையின் பாரம் காணாமல் போய்விடும்.

எவ்வளவு பெரிய சிலுவையாக இருந்தாலும் அதைச் சுமப்பது இன்பகரமாக மாறிவிடும்."

தாத்தா, துன்பங்களின் போது நாம் சுமப்பது துன்பங்களை அல்ல, நமது அன்பர் இயேசுவைத்தான் என்பதைப் புரிந்து கொண்டால்

நாம் நமது குழந்தையைச் சுமக்கும் தாயாக மாறி விடுவோம்.

"சிலுவை வடிவில் என்னோடு வாழும் இயேசுவே இப்படியே என்னோடு தங்கும்" என்று செபிக்க ஆரம்பித்து விடுவோம்.

இப்படித்தான் இயேசு நம்மை இளைப்பாற்றுவார்."

", Very good பேரப்புள்ள. நாம் சுமக்கும் சிலுவை கனமாக தோன்றும் போதெல்லாம் அதில் நம்மோடு பயணிக்கும் நமது மீட்பர் முகத்தை பார்க்க வேண்டும்.

கனம் காற்றாய்ப் போய்விடும்.

கனமான சிலுவை இனிமையான சிலுவையாக மாறிவிடும். 

இயேசுவோடு பயணிப்பது என்றென்றும் அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தானே.

தனது குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காக பேறுகால வேதனையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் தாயாக மாறி விடுவோம்.

உலகின் துன்பங்கள் நம்மை வாட்டும்போது நமக்குள்ளே வாழும் சாந்தமும், மனத் தாழ்ச்சியும் உள்ள இயேசுவின் முகத்தைப் பார்ப்போம்.

துன்பம் இன்பமாக மாறிவிடும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment