Thursday, January 12, 2023

"உம்முடைய சித்தம் பூலோகத்திலும் செய்யப்படுவதாக."

''உம்முடைய சித்தம் பூலோகத்திலும் செய்யப்படுவதாக."

"தாத்தா, நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போது,

'உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக'

என்று வேண்டுகிறோமே, எதற்காக?

கடவுள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அது தானே கடவுளின் சித்தம்.

கடவுள் அவர் விரும்புவதை செய்ய நமது வேண்டுதல்  எதற்கு?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பு,

கடவுள் மட்டும் தானே இருந்தார்.

அவர் யாருடைய அனுமதியையும் கேட்டு இந்த பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை.

யாருடைய அனுமதியையும் கேட்டு நம்மைப் படைக்கவில்லை.

இப்போதும் அவர் நினைத்தது தானே நடக்கும்.

நாம் ஏன், "நீர் நினைத்தது நடப்பதாக" என்று செபிக்க வேண்டும்?"

"'ஒரு வேலைக்காரன் தனது முதலாளியிடம் சென்று,

'ஐயா, நீங்கள் என்னை என்ன வேலை வேண்டுமானாலும் செய்யச் சொல்லலாம்" என்று சொன்னால் என்ன அர்த்தம்?''

"நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் என்று அர்த்தம்."

"'அதே அர்த்தத்தை உனது செபத்துக்கும் கொடு."

"விண்ணகத் தந்தையே,

 உமது சித்தத்தை  விண்ணகத்திலுள்ள அனைவரும் நிறைவேற்றுவது போல 

பூலோகத்தில் உள்ள நாங்களும் நிறைவேற்றுவோம். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்." என்று அர்த்தம்."

"'வீட்டுக்கு வரும் விருந்தாளியை 'வாருங்கள்' என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

"உங்களை எங்கள் விருந்தாளியாக ஏற்றுக் கொள்கிறோம்' என்று அர்த்தம்."

"'இப்போது கர்த்தர் கற்பித்த செபத்தின் முதல் பகுதியை உனது வாசகங்களை கொண்டு கூறு."

"மோட்சத்தில் இருக்கிற எங்கள் தந்தையே, 

உம்மைப் போற்றிப் புகழ்கிறோம்.

மோட்சத்தில் இயங்கும் உமது அரசை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

நாங்களும் மோட்சத்திற்கு வர ஆசைப்படுகிறோம்.

அங்கு நாங்கள் வர வேண்டுமென்றால்,

மோட்ச வாசிகள் எவ்வாறு உமது சித்தத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ,

அதேபோல நாங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே, தந்தையே, நாங்கள் உமது சித்தப்படி செயல் புரிய வாக்களிக்கிறோம்.

நாங்கள் வாக்களிக்கிற படி நடக்க எங்களுக்கு உதவியருளும்.

தயவுசெய்து எங்களை உமது விண்ணக அரசுக்குள் ஏற்றுக்கொள்ளும்."

சரியா, தாத்தா?"

"'அப்படியானால் கர்த்தர் கற்பித்த செபத்தை நாம் சொல்லும்  ஒவ்வொரு முறையும் கடவுளுக்கு என்ன வாக்கு கொடுக்கிறோம்?"

"உமது விருப்பப்படியே நாங்கள் வாழ்வோம்' என்று வாக்கு கொடுக்கிறோம்.

வாக்கு கொடுத்துவிட்டு நமக்கு வேண்டிய மற்ற உதவிகளையும் கேட்கிறோம்."

"'நமக்கு வேண்டிய உதவிகளை நாம் பெற வேண்டுமானால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?"

"விண்ணக தந்தையின் விருப்பப்படி வாழ வேண்டும்.

அவரது விருப்பப்படி வாழ்ந்தால்தான் அவரிடம் உதவி கேட்க நமக்கு உரிமை கிடைக்கும்.

நாம் நமது இஸ்டம் போல் வாழ்ந்து விட்டு அவரிடம் சென்று உதவி கேட்பதில் அர்த்தமில்லை."

"தாத்தா, நான் உங்களிடம் கடவுளின் சித்தம் என்ன என்று கேட்டால்,

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிக்க வேண்டும்,

நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறரையும் நேசிக்க வேண்டும்

என்ற  அவருடைய இரண்டு கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தம் என்று சொல்லிவிடுவீர்கள்.

ஆகவே அந்த கேள்வியைக் கேட்க மாட்டேன்.

அது பொதுவாக மனுக் குலம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய அவருடைய சித்தம்.

அதுபோல் ஒவ்வொரு மனிதனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அவரது சித்தமும் இருக்கும்.

அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது?"

"'நம் ஒவ்வொருவரையும் கடவுள் ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார் என்பது உனக்குத் தெரியும்.

நம் ஒவ்வொருவரையும் நித்திய காலமும் தனது மனதில் வைத்து நேசித்து வந்த கடவுள் 

நாம் எந்த நாட்டில்,
எந்த ஊரில், 
எந்த பெற்றோருக்கு, 
எப்பொழுது பிறக்க வேண்டும்
 என்பதை அவரே தீர்மானித்து அதன்படி நம்மைப் படைத்திருக்கிறார்.

நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் 

என்பதற்கான சூழ்நிலையையும் அவரே அமைத்து கொடுத்திருக்கிறார்.

நமது உள் உணர்வுகளின் மூலம் அவரே சில ஆசைகளை நம் உள்ளத்தில் ஏற்படுத்துகிறார்.

நாம் பரிபூரண சுதந்திரம் உள்ள அவருடைய பிள்ளைகள்.

நமக்கென்று சில சொந்தமான ஆசைகளும் இருக்கும்.

நம்முள் எழும் ஆசைகள் நமது சொந்த ஆசைகளா,

 அல்லது இறைவன் தரும் ஆசைகளா என்பதை தீர்மானிப்பதற்காகத்தான்

 நமக்குள் மனசாட்சி என்ற ஒன்றை அவரே அமைத்திருக்கிறார்.

உதாரணத்திற்கு உனக்கு அரசியலில் நுழைய ஆசை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

உன்னுடைய மனசாட்சி அதை தவறு என்று சொன்னால் அதை அப்படியே மறந்து விட வேண்டும்.

சரி என்று சொன்னால் உன்னுடைய பெற்றோர், ஆத்ம குரு ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

எடுக்கிற முடிவு இறைவனது சித்தத்துக்கு உகந்ததாக இருக்கும்."

"அதாவது இறைவன் நமது உள்ளத்தில் ஏற்படும் தூண்டுதல்கள் மூலமாகவும்,

 நம்மை ஆன்மீகத்தில் வழி நடத்துபவர்கள் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார்.

மனசாட்சிக்கு விரோதமாக நாம் முடிவு எடுத்தால் கடவுள் என்ன செய்வார்?"

"'அதைத் தொடராதவாறு அநேக  தடங்கல்களை ஏற்படுத்துவார்.

அதையும் மீறி நீ இஷ்டப்படி நடந்தால் உனது முயற்சியில் ஆன்மீக ரீதியாக  தோல்விகளே ஏற்படும்."

"ஆன்மீக ரீதியாக என்றால்?"

"'அரசியல் வாழ்வில்  தவறுகள் பல செய்து நிறைய பணம் சம்பாதித்தால் உலக ரீதியாக அது வெற்றி போல் தோன்றும்,

ஆனால் ஆன்மாவை இழக்க நேரிடும்.

உலகம் முழுவதும் ஒருவன் தனதாக்கிக் கொண்டாலும் அவனது ஆன்மாவை இழந்தால் அவனுக்கு என்ன பயன்?

நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது சீடத்துவ வாழ்க்கையை ஒழுங்காக நடத்தினால், நாம் இறைவன் சித்தப்படி தான் வாழ்வோம்.

நமது தேர்வுகள் எல்லாம் மனசாட்சியின் படி தான் இருக்கும்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள் மனதில் இறைவன் பேசுவதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்."

"நல்ல கிறிஸ்தவர்கள் தினமும் வேதாகமம் வாசிப்பார்கள்.

திருப்பலியின் போது 
குருவானவருடைய பிரசங்கத்திற்குத் தூங்காமல் செவிமடுப்பார்கள். 

இறைவாக்கும், குருவாக்கும் கடவுளின் சித்தத்தை வெளிப்படுத்தும்.

ஒரே வாக்கியத்தில்,

கிறிஸ்தவ வாழ்வின் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே  நம் ஒவ்வொருவர் மட்டிலும் இறைவன் சித்தம்.

தந்தையின் சித்தம்,
 நமது பாக்கியம்.

லூர்து செல்வம்.

What we receive should be shared with others.



 What we receive should be shared with others.

Mr. Maria Antony, (From Pandarakulam), my fifth standard teacher, was a very nice man. I cannot forget him all my life for two reasons: 1. His way of teaching. 2. His way of punishing.

While teaching the chair in the class room would always be vacant.

He would always be active with his mouth teaching, eyes scanning our movements, right hand using the blackboard to write down the important points with a piece of chalk and asking us questions every now and then to test if we were really listening.

Even while we were doing our class work such as doing sums and writing answers to given questions, he would be walking around us scanning each and every student’s work.

No one can escape his sharp eyes.

His round sized attractive handwriting is still alive in my mental vision.

He would correct our handwriting note books daily to train us in the art of writing.

He gave individual attention to every student.

He used a peculiar method of punishing us for our inattention in the class, for our looking blank when questioned, for our doing mischief and for our poor handwriting.

He never used a cane.

He used only his forefinger and thumb to pinch our skin to punish us.

His pinch would make us dance with pain.

The very thought of his pinch would set us right.

We would be attentive in the class, study well, write well and avoid mischief for fear of his pinch.

His teaching and punishing methods yielded very good results in our learning.

So, I took him as my role model in my life as a teacher.

But, to pinch I added a cane, to keep in with the times.

I transmitted to my students what I learned from my teachers.

This kind of receiving and transmitting will go on till the end of times.

Every month we receive salary for our service from our management.

What do we do with what we have received?

Save a part of it for our future. 2. Spend the rest to satisfy our present needs.
We go for shopping and empty our purse by giving its contents to the shop keeper in exchange for what we have received.

A hundred- rupee-note has value only when it is given to buy things.

As long as it is with us it is merely a piece of paper.

The government may at any time declare it invalid.

So, while it is valid we must use it according to the counsel Jesus has given us.

9 “And my counsel to you is, make use of your base wealth to win yourselves friends, who, when you leave it behind, will welcome you into eternal habitations” (Luke. 16:9)

We must use our money in such a way as to gain friends in heaven.

Just as we save a part of our income for our future in this world, we must give a part of it for our future in the next world.

In other words, we must use a part of our income for charity, by helping those of our neighbours who are in need.

We must give what we receive.

We receive only to give.

This receiving and giving process must continue till the end of the world.

Not only money, but also whatever good we receive must be shared with others.

In fact Our Creator started this process by sharing His image and love with us.

So we must share ‘our love’ with others, which must express itself in acts of love.

If someone helps us in our need, we must repay that help by helping our neighbours in need, they their neighbours in need, their neighbours their neighbours in need and this process must go on till the end of times.

In Heaven there will be no one in need.

We can enjoy beatific vision of God together eternally.

Lourdu Selvam.

Wednesday, January 11, 2023

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மாற்.2:5)

"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மாற்.2:5)

"தாத்தா, திமிர்வாதக்காரன் பாவ மன்னிப்பு கேட்பதற்காக வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டிற்குள் இறங்கவில்லை.

திமிர்வாதம் குணமாகவே இறங்கினான்.

இயேசு அவன் கேளாமலேயே ஏன் அவனது பாவங்களை மன்னித்தார்?"

"'ஒருவன் ஒரு மருத்துவரிடம் மருத்துவ உதவி கேட்டு சென்றால்,

அவர் குணமாக்க வேண்டியது நோயையா அல்லது நோயாளியையா?"

"உங்கள் கேள்வி புரியவில்லை.

நோயை குணமாக்கத்தான் மருத்துவரிடம் செல்வார்கள்.

இதில் என்ன சந்தேகம்?"

"'நோயைக் குணமாக்க நோய் தானே வரவேண்டும். ஏன் நோயாளி வருகிறான்?"

"தாத்தா, நோய் இருப்பவன் தான் நோயாளி.

நோயைக் குணமாக்கத்தான் அவன் மருத்துவரிடம் வருகிறான்.

அவன் வராவிட்டால் எப்படி அவனது நோயைக் குணமாக்க முடியும்?"

"'உண்மையிலேயே எனது கேள்வி உனக்குப் புரியவில்லை.

இப்போது உனக்கு நோய் ஒன்றுமில்லை. நீ மருத்துவரிடம் போவாயா?"

"ஏதாவது வேலை இருந்தால் போவேன்."

"'போவது யார்?"

''நான்."

"'நீ மருத்துவ உதவிக்காக போகவில்லை."

"ஆமா."

"'உனக்கு நோய் வந்தால்?"

"மருத்துவ உதவிக்காக போவேன்."

"'யாருக்கு மருத்துவ உதவி?

"எனக்கு?"

"'மருத்துவ உதவி தேவைப்படுவது யாருக்கு?"

"எனக்கு என்று சொல்லிவிட்டேன்."

"'அதாவது நோய்க்கு அல்ல, உனக்கு.

 உனக்கு மருத்துவ உதவி தேவை, ஆகவே போகிறாய்."

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை."

"'மருத்துவரிடம் செல்லும்போது குணமாக வேண்டியது நோயாளி. அவனுக்கு தான் மருத்துவம் பார்க்க வேண்டும். நோய்க்கு அல்ல."

"நோயைக் குணமாக்காமல் அவன் எப்படி குணமாவான்?"


"'அவன் குணமாகும் போது நோய் போய்விடும்."

"தாத்தா, நோய் போன பிறகு தானே அவன் குணமடைவான்."

"'தவறு. அவனது உடல் சரியானால்தான் நோய் போகும்.".
'
"நீங்கள் சொல்வது புரியவில்லை."

"'ஒருவன் போதிய நேரம் தூங்காததால் தலைவலி வருவதாக வைத்துக்கொள்வோம்.

தலைவலி எப்போது போகும்?"

"அவன் போதிய நேரம் தூங்கினால் போகும்.

தலைவலிக்கு காரணம் தூங்காமை.

தூங்கிவிட்டால் தலைவலி போய்விடும்."

"'இப்போ உனக்குப் புரிந்திருக்கும்.

உடல் சரியானால், அதாவது உடலுக்கு போதிய தூக்கம் கிடைத்தால், நோய் போய்விடும்.

தலை வலிக்கு காரணம் தூங்காமை.

காரணம் போகும்போது தான் விளைவு போகும்."

"அதாவது அதிகம் சாப்பிடுவதால் வயிற்று வலி வருவது போல.

சாப்பாட்டைக் குறைத்தால் வயிற்று வலி வராது.

இப்போ புரிகிறது. குணமாக வேண்டியது நோயாளிதான்.

நோயாளி குணம் ஆகிவிட்டால், 

அதாவது சரியான உடல் நிலையை அடைந்தால், 

நோய் போய்விடும்."

"'இப்போ கேட்கப்போவது மிக முக்கியமான கேள்வி.

இயேசு மருத்துவப் பணி செய்ய உலகிற்கு வந்தாரா?"

"இல்லை. நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய உலகிற்கு வந்தார்."

"'நீ இயேசுவைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை.

இயேசு மருத்துவப் பணி செய்யவே உலகிற்கு வந்தார்."

"நீங்கள் ஞானோபதேசம் படிக்கவில்லையா?"

"'படித்ததனால் தான் சொல்கிறேன்.

பாவம் என்பது நமது ஆன்மாவை பிடித்திருக்கும் நோய்.

நமது ஆன்மாவை பாவ நோயிலிருந்து குணமாகவே இயேசு உலகிற்கு வந்தார்.

நன்கு கவனி, ஆன்மாவைக் குணமாக்க.

அவர் ஒரு ஆன்மீக மருத்துவர்."

"பாவம் போனால் தானே ஆன்மா குணமாகும்!"

"'பாவம் செய்தவன் பாவத்திற்காக மனஸ்தாபப் பட்டால்தான் பாவம் போகும்..

மனஸ்தாபப் படும்போது ஆன்மா குணமடையறது.

மனஸ்தாபப்பட வேண்டியது ஆன்மா. மனஸ்தாபம் வந்த வினாடி பாவம் போய்விடும்."

"அதாவது மனஸ்தாபம் வந்தால் பாவம் போய்விடும்.

பாவம் போனபின் மனஸ்தாபம் வராது."

"'பாவம் போன பின்பும் வந்த மனஸ்தாபம் ஆன்மாவின் இருக்கும். அது அடுத்து பாவம் வராதபடி பார்த்துக் கொள்ளும்.

மனஸ்தாபம் வர வேண்டும் என்றால் கடவுள் மேல் அன்பு இருக்க வேண்டும்.

அன்பு இருக்க வேண்டும் என்றால் விசுவாசம் இருக்க வேண்டும்.

விசுவாசம் இருக்கும் ஆன்மாவில் இறைவனின் மீது அன்பு இருக்கும்.

இறைவன் மீது அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது.

பாவத்திலிருந்து விடுதலை பெற முதலில் இருக்க வேண்டியது விசுவாசம்.

விசுவாசம் தானாக வராது.

அது இறைவனால் தரப்படும் நன்கொடை,

Faith is God's gift.

இயேசு ஒவ்வொரு நோயாளியும் குணமாக்கும் போது அவனுக்கு முதலில் நன்கொடையாக கொடுப்பது விசுவாசத்தை.

விசுவாசம் அவனிடம் பாவங்களுக்கான மனஸ்தாபத்தை கொடுக்கும்.

மனஸ்தாபம் இயேசுவிடமிருந்து பாவ மன்னிப்பை பெற்றுக் கொடுக்கும்.

தொடர்ந்து இயேசு அவனுக்கு உடல் நோயிடமிருந்து விடுதலை கொடுப்பார்.

நன்கு கவனி. திரும்பவும் சொல்கிறேன்.

முதலில் விசுவாசம்,

 அடுத்து மனஸ்தாபம்,

 அடுத்து பாவமன்னிப்பு,

 அடுத்து உடல் நோயிலிருந்து விடுதலை.

ஒவ்வொரு நோயாளிக்கும் முதலில் ஆன்மீக விடுதலையை கொடுத்த பின்பு தான் உடலுக்கான விடுதலையை கொடுத்தார்."

"இப்போது புரிகிறது

 ஒவ்வொரு முறையும் இயேசு குணமளிக்கும் போது

 "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்று சொல்வது வழக்கம்."

"' இதன் அடிப்படையில் தான்,

இயேசு முதலில்
 அவர்கள் விசுவாசத்தைக் கண்டு .

திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள்
 மன்னிக்கப்பட்டன" என்றார்.

அடுத்து,

"நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்."

"சரி, தாத்தா, அவர் தானே விசுவாசத்தை நன்கொடையாக கொடுத்தார்.

பிறகு ஏன்,

"அவர்கள் விசுவாசத்தைக் கண்டு." என்று எழுதப்பட்டிருக்கிறது?"

"'இயேசு யாரை மீட்க உலகிற்கு வந்தார்?"

"உலகில் உள்ள எல்லா பாவிகளையும் மீட்க உலகிற்கு வந்தார்."

"'அப்படியானால் உலகில் உள்ள எல்லா பாவிகளுக்கும் முதலில் விசுவாசத்தை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா!"

"ஆமா. அப்புறம் ஏன் கொடுக்கவில்லை?"

"' தவறான கேள்வி.
அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் விசுவாசத்தை கொடுக்கிறார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்வதோ ஏற்றுக்கொள்ளாததோ அந்த மனிதனின் விருப்பம்.

 ஒவ்வொரு மனிதனுக்கும் பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்த விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளாதது அவருடைய தப்பு அல்ல,

ஏற்று கொள்ளாதவர்களின் தப்பு.

ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திவிட்டு, வீட்டிற்கு சென்று நடத்தப்பட்ட பாடத்தை படியுங்கள் என்கிறார்.

படிக்கிறவன் தேர்வில் வெற்றி பெறுகிறான்.

பழிக்காதவன் தோல்வி அடைகிறான்.

மாணவன் தேர்வில் தோல்வியடைவது ஆசிரியருடைய தவறு அல்ல. 

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம்

 நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."

என்று ஆண்டவர் அப்போஸ்தலர்களிடம் கூறினார்.

நற்செய்தி அறிவிக்கப்படும்போது விசுவாசம் கொடுக்கப்படுகிறது.

ஏற்றுக் கொள்பவன் விசுவசிக்கிறான்..

விசுவசிக்கிறவன் ஞானஸ்நானம் பெறுகிறான்.

ஞானஸ்நானம் பெற்று  நற்செய்தியின் படி (விசுவசித்ததற்கு ஏற்ப)

வாழ்பவன் மீட்பு அடைகிறான்."

"இயேசு 3 ஆண்டுகள் பொது வாழ்வின் போது அவர் செய்து வந்தது ஆன்மாக்களுக்கான மீட்பு பணி என்பது நன்கு புரிகிறது.

"அவர் நன்மை செய்துகொண்டே சென்றார்." (அப். 10:38) என்றால்

'அவர் எங்கு சென்றாலும் ஆன்மாக்களை மீட்டுக்கொண்டு  சென்றார் என்பதுதான் பொருள்' என்று நினைக்கிறேன்."

'''Correct. அவர் உலகிற்கு வந்தது ஆன்மாக்களை மீட்பதற்காக தானே.

நாமும் உடல் நலமில்லாதிருக்கும்போது 

உடல் நலத்திற்காக இறைவனிடம் வேண்டுமுன்

 நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்று ஆன்மீக குணம் அடைய வேண்டும்,

அதன் பிறகு தான் ஆண்டவர் நமக்கு உடல் நலத்தை கொடுப்பார்.

ஆன்மீக நலனுக்காகத் தான் நாம் உலகில் வாழ்கிறோம்."

லூர்து செல்வம்.

Monday, January 9, 2023

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்." (மாற்கு.1:40)

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்."
(மாற்கு.1:40)

"தொழுநோயாளி கூட நமக்கு பாடம் சொல்லித்  தருகிறான், தாத்தா."

"'இதில் அதிசயம் என்ன இருக்கிறது?

நாம் கற்க தயாராக இருந்தால் ஒரு ஊமையால் கூட நமக்கு பாடம் சொல்லித் தர முடியும்."

"சொல்லித் தர முடியாது, தாத்தா, சொல்லாமல் தான் தர முடியும்.

நான் சொன்னதற்கு விளக்கம் கேட்கவில்லையே?"

"'கேட்டால் தான் கொடுப்பாயா?

சரி, கேட்கிறேன். எந்த தொழுநோயாளி உனக்கு பாடம் சொல்லித் தந்தான்?"

"நேற்று இரவில் செப நேரத்தில் இயேசுவிடம் ஒரு உதவி கேட்டேன். 

பகலில் நேர்காணலுக்குச் சென்று வந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைக்க ஆவன செய்யும்படி ஆண்டவரை கேட்டேன்.

கேட்டுவிட்டு வேதாகமத்தை திறந்து மாற்கு நற்செய்தியை வாசிக்க ஆரம்பித்தேன்.


"தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, "நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்."

"'வேண்டி விட்டு உன்னோடு பேசினானா?"

"பேசாமல் பேசினான்.

அவன் பேசியதை கேட்டு விட்டு இயேசுவிடம் திரும்பி,

"ஆண்டவரே ஒரு கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு, நேர் காணலுக்கும் சென்று வந்திருக்கிறேன்.

நீர் விரும்பினால் எனக்கு வேலை கிடைக்கும்."
 என்று வேண்டினேன்.

தொழுநோயாளி என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தான்."

"'ஒன்றும் சொல்லவில்லையா?"

"சொல்ல வேண்டியதை அவனது புன்முறுவலே சொல்லிவிட்டது."

"'என்ன சொன்னது?"

"Very good. என்னைப் பார்த்து பாடம் கற்றதற்கு எனது மனமார்ந்த நன்றி.

இப்படித்தான் செபிக்க வேண்டும்.

கேளுங்கள் தரப்படும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

நாம் கேட்ட பின்பு, 

"ஆண்டவரே உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாருங்கள்."
என்று சொல்ல வேண்டும்.

நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்கு நன்மை பயப்பதையே தருவார்.

நமக்கு எது  கிடைத்தாலும் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிடைக்காவிட்டாலும் நன்றி கூற வேண்டும்."
என்று கூறியது."

"'பரவாயில்லையே. அநேகர் நாம் பேசுவதையே கேட்பதில்லை.

உனக்கு புன்முறுவல் பேசுவது கூட கேட்டிருக்கிறது."

"ஒரு நாள் சமையல் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த அம்மாவிடம் சென்று,

"அம்மா பண்டம் வாங்க பத்து ரூபாய் தாருங்கள்" என்றேன்.

அம்மா ஒரு புன்சிரிப்பு சிரித்தார்கள்."

"'பணம் கிடைத்ததா?" 

"அதைத்தான் புன்சிரிப்பு கூறிவிட்டதே.

'இன்று அம்மாவிடம் பணம் இல்லை. நாளைக்கு பண்டம் வாங்க 20 ரூபாய் தருவார்கள்.

மகிழ்ச்சியோடு பள்ளிக்கூடம் சென்று வா."

"'நீ என்ன செய்தாய்?"

"பதிலுக்கு ஒரு புன்முறுவல் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன்."

"'ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தான்.

அவன் தினமும் வேலைக்குப் போகும்போது 

கோவிலுக்குச் சென்று நற்கருணைப் பேழையைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டுச் செல்வான்.

இதை  பல நாள் கவனித்துக் கொண்டிருந்த அவனுடைய பங்குக் குருவானவர் ஒரு நாள் அவனைப் பார்த்து,

"ஒவ்வொரு நாளும் காலையில் கோவிலுக்கு வந்து ஆண்டவரிடம் என்ன கேட்பாய்" என்றார். 

"நான் எதுவுமே கேட்க மாட்டேன்.

நான் அவரைப் பார்ப்பேன், அவரும் என்னை பார்ப்பார்.

எங்கள் பார்வைகள் தான் பேசிக்கொள்ளும்."

"அவரது பார்வை என்ன சொல்லும்?"

"மகிழ்ச்சியோடு சென்று வா. இயேசுவும் உன்னோடு தான் வருகிறார்."

"வருவாரா?"

"வருவார். நான் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எங்கள் மனங்கள் பேசிக்கொள்ளும்.

வயலாக இருந்தாலும் அவரது சன்னிதானத்தில் தான் நான் வேலை செய்வேன்."

''கோவிலுக்குள் வராவிட்டால் உன்னோடு வரமாட்டாரா?"

"சாமி, அவர் ஒவ்வொரு வினாடியும் என்னோடுதான் இருப்பார்.

பகலிலும் இரவிலும் என்னோடு தான் இருப்பார்."

"பிறகு எதற்காக அவரைப் பார்ப்பதற்கு கோவிலுக்கு வருகிறாய்?"

''சுவாமி உங்களுக்கு தெரியும், நீங்கள் தான் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறீர்கள். 

இறை மகனுக்கு இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

தேவ சுபாவத்தில் அவர் எங்கும் எல்லோரோடும் இருக்கிறார்.
அவரை மனதால் (சிந்தனையால்) மட்டுமே பார்க்க முடியும்,

மனித சுபாவத்தில் மோட்சத்திலும், திவ்ய நற்கருணைப்  பேழையிலும் இருக்கிறார்.

திவ்ய நற்கருணைப்  பேழையில் 

அவரது அன்னை மரியாளோடு இருந்தது போலவே, தனது ஆன்மாவோடும் சரீரத்தோடும் இருக்கிறார்.

ஆன்ம, சரீரத்தோடு வீற்றிருக்கும் இயேசுவைக் காணவே கோவிலுக்கு வருகிறேன்."

"மோட்சம் எங்கே இருக்கிறது?"

"நீங்கள் எனக்கு பரீட்சை வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களது பிரசங்கத்தில் கேட்டதையே சொல்கிறேன்.

மோட்சம் என்பது ஒரு பேரின்ப நிலை. இடம் அல்ல. அந்நிலையில்  இருப்பவர்களை நமது ஊனக் கண்ணால் பார்க்க முடியாது.

ஆனால் நற்கருணை பேழை ஒரு இடம். அதற்குள் ஆன்ம சரீரத்தோடு இருக்கும் ஆண்டவரை நமது கண்ணால் பார்க்கலாம்.

நீங்கள் அவரை எங்கள் வாயில் வைக்கும் போது அவரை ருசித்து உண்ணலாம்.

கண்ணால் பார்க்கக்கூடிய இயேசுவைப் பார்ப்பதற்குக் கோவிலுக்கு வருகிறேன்.

வசீகர வார்த்தைகளை கூறி அப்பத்தையும், ரசத்தையும் இயேசுவின் உடலாகவும், ரத்தமாகவும் மாற்ற வரம் பெற்ற நீங்கள் பாக்கியசாலி.

உங்களை எங்களது பங்குக் குருவாக பெற்ற நாங்கள் பாக்கியசாலிகள்.

உங்களால் தானே நாங்கள் இயேசுவைக் கண்ணால் பார்க்கவும்,

 நாவினால் சுவைக்கவும் முடிகிறது!"


"அந்த விவசாயி பிரசங்க நேரத்தில் முழுவதும் விழித்துக் கொண்டிருப்பார் போல் இருக்கிறது.

ஆனால் நம்மில் அநேகர் இயேசுவிடம் ஏதாவது கேட்கும் போது விழித்திருப்பார்கள்.

இயேசு அவரது பிரதிநிதி மூலம் பேசும் போது தூங்கி விடுவார்கள்."

"'பரவாயில்லை நீ அதை தூங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறாய்."

"தாத்தா நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

நான் குருவானவரின் பிரசங்கத்தை தான் கவனிக்கிறேன்.

தூங்குபவர்கள் என் கண்ணில் பட்டால் நான் என்ன செய்ய முடியும்?

நான் உங்களை பார்க்கும் போது நீங்கள் உட்கார்ந்திருக்கும் 
நாற்காலியும் எனக்குத் தெரிகிறது.

அதற்கு நான் என்ன செய்வேன்?".

"'நாம் இறைவனோடு மனதால் பேச முயலும் போது நமது கண்ணில் படும் உலகப் பொருள்கள் நமது சிந்தனையை கலைத்து விடக்கூடாது.

மனதை.ஒருமுகப்படுத்தி 
(With Concentration) இறைவனோடு பேசினால் உலக பொருள்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

பேரப்புள்ள,

மனதை ஒருமுகப்படுத்தி செபிப்போம்.

இறைவன் நமக்குத் தர வேண்டியதை அவர் கையிலேயே விட்டு விடுவோம்.

அவர் நமக்குத் தர வேண்டியதை   அதற்குரிய நேரம் வரும்போது தருவார்.

கேட்டதைத் தராமல் வேறு எதையாவது தந்தாலும் நன்றி கூறுவோம்."

"எதையும் தராவிட்டாலும் நன்றி கூறுவோம்."

லூர்து செல்வம்.

Sunday, January 8, 2023

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்." (மாற்கு.1:18)

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்." (மாற்கு.1:18)

சீமோனும், அவருடைய சகோதரர் பெலவேந்திரரும் மீன் பிடிப்பதை தங்களது வாழ்க்கை தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

ஆன்மீகத்தில் பெலவேந்திரர் ஸ்நாபக அருளப்பரின் சீடர்.

இயேசுவின் அறிமுகம் கிடைத்த பின் அவர்தான் மெசியா என்று அறிந்தபின் அவரைப் பின்பற்றத் தீர்மானித்தார்.

தனது சகோதரரான சீமோனை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

இயேசு அவரைப் பார்த்தவுடன், "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

அவர் கூறியதிலிருந்து சீமோனைத் திருச்சபையின் தலைவராக்குவது அவரது நித்திய காலத் திட்டம் என்பது தெரிகிறது.

அதன் பிறகு ஒரு நாள் சீமோனும், பெலவேந்திரரும் மீன் பிடித்து கொண்டிருந்த போது இயேசு அவர்களை பார்த்தார்.

பார்த்தவர் அவர்களை நோக்கி,

 "என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்" என்றார்.

உடனே அவர்கள் தங்கள் உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.

அதுவரை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாப்பாடு போட்டது அவர்களது வலைகள் தான்.

வகைகளை விட்டு விட்டால் தாங்கள் எப்படி உலகில் வாழ்வது,

தங்கள் குடும்பத்தினரை எப்படி காப்பாற்றுவது 

 என்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லை.

அழைப்பவர் மெசியா.

உலக வாழ்க்கையை வாழ்வதைவிட மெசியாவின் சீடர்களாக வாழ்வது மேல் என்று தீர்மானித்து அவரைப் பின்பற்றினார்கள்.

பெலவேந்திரரும், சீமோனும் முதல் முதல் இயேசுவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால் அவர்களையும் மற்ற அப்போஸ்தலர்களையும் தேர்வு செய்தது நமது ஆண்டவராகிய இயேசு தான்.

படித்து பட்டம் பெற்றவர்களாகப் பார்த்து இயேசு தேர்வு செய்யவில்லை.

வயிற்று பிழைப்புக்காக தொழில் செய்து கொண்டிருந்தவர்களைத் தான் இயேசு தேர்வு செய்தார்.

இப்பொழுது ஒருவரை குருவானவர் ஆக்குவதற்காக

 அவருக்கு தேவ சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் போன்ற பாடங்களில் பாண்டியத்துவம் கொடுத்து,

 குறைந்தது 14 ஆண்டுகள் பயிற்சி கொடுத்து தேர்வு செய்கிறார்கள்.

ஆனால் நமது ஆண்டவர் தனது அப்போஸ்தலர்களுக்கு அப்படிப்பட்ட பயிற்சியெல்லாம் கொடுத்ததாக தெரியவில்லை.

சாதாரணமானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை மூன்று ஆண்டுகள் தான் சென்ற இடமெல்லாம் தன்னோடு அழைத்துச் சென்றார்.

அவரது போதனைகளைக் கேட்டார்கள், அவற்றுக்கான விளக்கத்தையும் இயேசுவிடமிருந்து பெற்றார்கள்.

கடவுளாகிய அவர் தான் நினைத்திருந்தால் ஒரே வினாடியில் தனது வல்லமையால் அவர்களை கற்றறிந்த அறிஞர்களாக மாற்றியிருக்கலாம். 

ஆனால் அவரது போதனைகளை கேட்டு அவர்களை அவர்களின் இயல்புப்படி வளரவிட்டார்.

இறுதி உணவின் போது அவரது 
அறிவுரைகளை நீண்ட நேரம் கேட்ட பின்பும்,

கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வேர்வை வியர்த்து தந்தையுடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது,

தூங்கும் அளவிற்கும்,

அவரது எதிரிகள் அவரை கைது செய்த போது அவரை விட்டு ஓடும் அளவிற்கும் மட்டும்தான் அவர்களது இயல்பு படி வளர்ந்திருந்தார்கள்.

தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதையும்,

மரித்த மூன்றாவது நாள் உயிர்க்கப் போவதையும் 

அவர்களுக்கு அவர் பலமுறை கூறியிருந்தும்,

அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததை அவர்கள் ஆரம்பத்தில் விசுவசிக்கவே இல்லை.

ஆண்டவர் விண்ணகம் எய்திய பின் பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கி வந்த பின்பு தான் அவர்கள் விசுவாசத்தில் உறுதியும் தைரியமும் பெற்றார்கள்.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் அவர்கள் நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு தான் இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்து,

வேத சாட்சிகளாக மரிப்பதற்குரிய தைரியத்தைப் பெற்றார்கள்.

உலகமெங்கும் திருச்சபை பரவுவதற்கும், வளர்வதற்கும் பரிசுத்த ஆவி தான் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்களின் திறமையினால் அல்ல, கடவுளின் வல்லமையினாலே திருச்சபை வளர்ந்து கொண்டிருக்கிறது. 

வேதாகமத்தை தினமும் வாசித்து தியானிப்பது நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெறுவதற்காகவும் அல்ல.

வினாடி வினாக்களுக்குப் பதில் அளிப்பதற்காகவும் அல்ல.

இறை வாக்கின்படி நாம் வாழ்வதற்காக வேதாகமத்தை தினமும் வாசிக்கிறோம்.

அப்போஸ்தலர்களைப் பற்றிய வாசிப்பு நமது வாழ்க்கைக்கு எப்படி பயன் தருகிறது?

'அப்போஸ்தலர்கள் ஆரம்ப நிலையில் எப்படி இருந்தார்களோ அதைவிட மிக சாதாரண நிலையில் தான் மனிதர்கள் என்ற முறையில் நாம் இருக்கிறோம்.

ஆன்மீக வாழ்வில் சுயமாக நம்மால் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் கடவுளின் உதவியால் எவ்வளவு பெரிய செயலை வேண்டுமானாலும் செய்யலாம்.

புனிதர்கள் நம்மை போல சாதாரண மனிதர்கள் தான்.

ஆனால் அவர்களால் புதுமைகள் செய்ய முடிகிறது என்றால் அது அவர்களுடன் இருந்து வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரால் தான்.


எப்படி அப்போஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் வருகைக்கு பின்னால் விசுவாசத்தில் உறுதி பெற்று நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தார்களோ,

அப்படியே ஞானஸ்நானத்தின் போது நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் நமது ஆன்மீக வாழ்வை ஆரம்பித்தோம்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பரிசுத்த ஆவியின் வல்லமையால்தான் நாம் ஆன்மீக வாழ்வை வாழ வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் படியே நாம் இயங்க வேண்டும். 

ஒவ்வொரு வினாடியும் நாம் அவரோடு நம்முடைய செபத்தில் இணைந்திருக்க வேண்டும்.

பரிசுத்த ஆவியின் ஆலயமாகிய நமது ஆன்மா எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்.

உத்தம மனஸ்தாபம் என்ற அருள் நீரினால் நமது ஆன்மாவை அடிக்கடி கழுவுவதோடு,

திவ்ய நற்கருணை என்னும் உணவினால் நமது ஆன்மா ஊட்டம் பெற வேண்டும்.

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு இயேசுவுக்காக உலகையே வென்றது போல,

நமது தூய்மையான, நற்கருணை உணவினால் வலிமை பெற்ற நமது ஆன்மா

 அதே பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் விண்ணக சாம்ராஜ்யத்திற்கே உரிமை பெறும்.

அதற்கு அப்போஸ்தலர்கள் தங்கள் உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தது போல,

நாம் நமது உலக பற்றுகளை முற்றிலுமாக துறந்துவிட்டு இயேசுவை பின்பற்ற வேண்டும்.

உலக ஆசை உள்ளவர்களால் விண்ணக வாழ்வுக்கு ஆசைப்பட முடியாது.

உலக வலைகளிலிருந்து விடுதலை பெறுவோம்,

பரிசுத்த ஆவியின் துணையோடு விண்ணுலக வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

Saturday, January 7, 2023

"கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை."(அப்.10:34)

''கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை."
(அப்.10:34)

கடவுள் மாறாதவர்.

அவரது அன்பு என்றும் மாறாது.

அவரது அளவு கடந்த அன்பின் காரணமாகத்தான் அனைத்து மனிதர்களையும்  படைத்தார்.

அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் அவர் நேசிக்கிறார்.

அவரைப் பொறுத்தமட்டில் மனிதனுக்கு சாதி, இன வேறுபாடு கிடையாது.

எந்த நாட்டை சார்ந்த மனிதர்களாக இருந்தாலும் சரி,

 எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் அவரது அன்புப் பிள்ளைகள்.

அவரது அன்பில் ஒரு போதும் மாற்றம் இருக்க முடியாது.

நாம் மீட்பு பெற வேண்டுமென்றால் அவரது அன்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயலால் அவரது அன்பை நாம் வாழ வேண்டும்.

கிணற்றில் நிறைய தண்ணீர் இருக்கிறது.

யார் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அது பயன்படும்.

அதை குடிப்பவர்களுக்கு தாகம் தீரும்.

பயன்படுத்தாதவர்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.

குடிக்காதவர்களுக்கு தாகமும் தீராது.

அது நமக்கு பயன்பட வேண்டுமா, நமது தாகத்தை தீர்க்க வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அதே போல் தான் நம்மை படைத்தவரின் அன்பு நமது நிலை வாழ்வுக்கு பயன்பட வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அவரது அன்பை நாம் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்தால் அந்த அன்பை நித்திய காலமும் பேரின்பமாக அனுபவிப்போம்.

ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கடவுளின் அன்பினால் எந்த பயனும் இல்லை.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நமது ஆண்டவர் சொன்னார்.

நம்மோடு பகிர்ந்து கொள்வதற்கு அவரது அருள் வரங்கள் அளவில்லாமல் காத்துக் கொண்டிருக்கின்றன.

நாம் செய்ய வேண்டியது அவரது அருள் வரங்களை கேட்க வேண்டியது தான்.

கேட்பவர்களுக்கு கிடைக்கும்.

நமக்கு கடவுளின் அருள் வரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் நாம் முழுமையாக நம்பிக்கையோடு அவற்றை கேட்டுப் பெற வேண்டும்.

நமக்கு கடவுள் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி அவரின் அருள் வரங்களை கேட்டு பெற்று நமது வாழ்வில் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்துவதற்கு வேண்டிய உதவியும் அவரே செய்ய தயாராக இருக்கிறார்.

அவரது அருள் வரங்களின்படி வாழ வேண்டிய உதவியை அவரிடம் கேட்டுப் பெற வேண்டும்.

நாம் கேட்டு பெற்றாலும், கேளாமல் விட்டாலும் அவரது அன்பில் மாற்றம் இல்லை.

அவரது அன்பை பெறுவதற்கும் நமக்கும் குறுக்கே நிற்பது நாம் செய்கின்ற பாவம்.

நம்முடைய பாவத்திற்கு முழுமையான பொறுப்பு நாம் தான்.

பாவத்திற்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டியதும் நாம் தான்.

எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும்,

எத்தனை பாவங்களாக இருந்தாலும்

அவற்றுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்ட வினாடியிலேயே அனைத்து பாவங்களும் முற்றிலும் மன்னிக்கப்பட்டு விடும்.

பாவ சங்கீர்த்தனம் நமது பாவங்களை மன்னிப்பதற்கென்றே இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவத் திரவிய அனுமானம்.

தருவதற்காக எந்நேரமும் காத்துக் கொண்டிருக்கும் நம்மை படைத்த அளவற்ற அன்பு நிறைந்த தந்தையிடம் கேட்போம், 
பெறுவோம், 
வாழ்வோம்.

கடவுளிடம் கேட்பதற்கு பெயர் தான் செபம்.

நமது வாழ்வே செப வாழ்வாக மாற வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே இறைவனது அருளை பெற்று அதைப் பயன்படுத்துவதற்காகத்தான்.

இறைவனிடமிருந்து எதைப் பெற்றாலும்,

நமது வாழ்க்கையினால் 

 அவரால் படைக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவனிடமிருந்து நாம் பெறுவது அவருடைய அன்பை.

நாம் பெற்ற அன்பை நமது சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்வது தான் பிறர் சிநேக வாழ்க்கை..

அன்பின் காரணமாக கடவுள் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

நாமும் நமக்கு விரோதமாக குற்றம் செய்த நமது சகோதர சகோதரிகளை மன்னிக்க வேண்டும்.

கடவுள் நமக்கு நன்மை செய்கிறார்.

நாமும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.

நாம் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தாலும் அவர் நம்மை நேசித்து பராமரித்து வருகிறார்.

நாமும் நம்மை பகைப்பவர்களை நேசித்து அவர்களுக்கு நல்லதை மட்டும் செய்ய வேண்டும்.

இறை மகன் மனிதனாய் பிறந்து நமக்காக தன்னையே தியாகம் செய்தார்.

நாமும் பிறருக்காக நம்மையே தியாகம் செய்ய வேண்டும்.

கடவுள் நாம் கேட்டதைத் தருகின்றார்.

நாமும் நமது அயலான் கேட்பதை கொடுத்து உதவ வேண்டும்.

இறையன்பும், பிறர் அன்பும் நம்மை வழி நடத்துவது தான் ஆன்மீக வாழ்க்கை. 

கடவுளிடம் கேட்போம்.

நாம் பெறுவதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.

விண்ணக வாழ்வு எல்லோருக்கும் பொதுவானது.

இவ்வுலகில் இணைந்து வாழும் நாம் அனைவரும் விண்ணகத்திலும் இணை பிரியாது இறைவனோடு என்றென்றும் வாழ்வோம்.

நமது பிறப்பின் பயன் விண்ணக நிலை வாழ்வு தான்.

லூர்து செல்வம்.

Thursday, January 5, 2023

திருச்சபை கட்டளை.

     திருச்சபை கட்டளை.

"தாத்தா, "வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது."..

 என்று திருச்சபை கட்டளை கொடுத்திருக்கிறது.

பாவமே செய்யாவிட்டால் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்?"

"'இப்போ நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு.

இயேசு பிறந்த நாற்பதாம் நாள் எதற்காக திருக்குடும்பம் கோவிலுக்குச் சென்றது?"

"யூத சமய சட்டப்படி குழந்தை பிறந்த 40 வது நாள் தாய் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

முதல் ஆண் குழந்தையை கோவிலுக்கு எடுத்துச் சென்று கடவுளுக்கு ஒப்பு கொடுத்துவிட்டு,

ஒரு ஆட்டுக்குட்டியையாவது இரண்டு புறாக்களையாவது  கொடுத்துவிட்டு குழந்தையை மீட்டு வர வேண்டும்.

அதற்காக அன்னை மரியாளும் சூசையப்பரும் குழந்தை இயேசுவை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்கள்."

"'அன்னை மரியாளுக்கு சுத்திகரிப்பு அவசியமா?"

"இல்லை. அவளது கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இயேசு பிறந்தார். ஆகவே தீட்டு எதுவும் படவில்லை. ஆகவே சுத்திகரிப்பும் அவசியம் இல்லை."

"'பிறகு ஏன் சுத்திகரிப்புக்காக கோவிலுக்குச் சென்றாள்?"

" சமய சட்டத்திற்கு கீழ்ப் படிவதற்காக"

"' குழந்தை இயேசு யார்?"

"கடவுள்."

"' மரியாள் கடவுளையே அவருக்கே ஒப்புக் கொடுக்க வேண்டுமா?"

"தேவை இல்லை. ஏனெனில், அவரே கடவுள்."

"'பிறகு ஏன் மரியாள் குழந்தை இயேசுவை கோவிலுக்கு எடுத்துச் சென்று காணிக்கையாக ஒப்பு கொடுத்துவிட்டு 

இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுத்து மீட்டாள்?"

"சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து"

"' அவசியம் இல்லாவிட்டாலும் கூட சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து 
திருக்குடும்பம் இவற்றை செய்தது.

இயேசுவிடம் பாவம் இருந்ததா?"

"இயேசு கடவுள். அவரால் பாவம் செய்ய முடியாது."

"' பிறகு ஏன் அவர் ஸ்நாபக அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்?"

"அருளப்பர் அவரைத் தடுத்த போது .

இயேசு. இவ்வாறு நாம் நியமங்களெல்லாம்
 நிறைவேற்றுவது தகுதியே."
என்று பதிலளித்தார்.

அவசியம் இல்லாவிட்டாலும் நியமங்களை நிறைவேற்றுவதற்காக (to fulfill all justice.) ஞானஸ்நானம் பெற்றார். 

'பாவமே செய்ய முடியாத அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக  தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தாரே.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகளையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்டது போலவே,

அந்தப் பணியை ஆரம்பிக்கும்போது, அதே நோக்கத்தோடு ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொண்டார்."

"'அதாவது எல்லாம் நமக்காக ஏற்றுக் கொண்டார்.

இப்போ கவனி.

மரியாளுக்கு சுத்திகரிப்பு தேவை இல்லாவிட்டாலும் சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து சுத்திகரிப்பை ஏற்றுக் கொண்டாள்.

 தான் கடவுளாக இருந்தாலும் சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து கோவிலில் தன்னை காணிக்கையாக ஒப்புக் கொடுப்பதை இயேசு ஏற்றுக்கொண்டார்.

தன்னிடம் பாவம் துளி கூட இல்லாவிட்டாலும் நமது பாவங்களுக்காக தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து பரிகாரம் செய்தார்.

நீ "பாவமே செய்யாவிட்டால் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்?".என்கிறாய்.

மனிதர்களில் அன்னை மரியாளைத் தவிர பாவமே செய்யாதவர்கள் யாருமே இல்லை.

"நான் பாவம் எதுவும் செய்யவில்லை" என்று சொல்பவன் ஒரு முழுப் பொய்யன்.

பாவ சங்கீர்த்தனத்தில் சொல்ல ஒரு அற்ப பாவம் கூடவா நம்மிடம் இருக்காது?

தினமும் காலையில் குளிக்கிறாயே, ஏன்?

இரவில் ஒரு வேலைக்கும் போகாதிருக்கும்போது உடம்பில் தூசி ஒட்ட வாய்ப்பில்லை.

வியர்வை கூடவா இருக்காது?

தினமும் காலையில் குளிக்க வேண்டும் என்ற சுகாதார விதிக்கு கட்டுப்பட்டு குளிக்கும் உன்னால்,

திருச்சபையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பாவசங்கீர்த்தனம் செய்ய முடியாதா?

அழுக்கு இல்லாத போதும் வியர்வைக்காக மட்டும் குளிக்கும் போது உற்சாகம் பிறப்பது போல,

ஒரு அற்ப பாவத்திற்காக நீ பாவ சங்கீர்த்தனம் செய்தால் அதற்குரிய அருள் வரங்கள் உனக்கு நிறைய கிடைக்கும்."

",புரிகிறது, தாத்தா.

 பாவ மன்னிப்புக்காக மட்டுமல்ல, 

கிடைக்கும் அருள் வரங்களுக்காகவும் நான் பாவ சங்கீர்த்தனம் செய்வேன்."

லூர்து செல்வம்.