Saturday, January 7, 2023

"கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை."(அப்.10:34)

''கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை."
(அப்.10:34)

கடவுள் மாறாதவர்.

அவரது அன்பு என்றும் மாறாது.

அவரது அளவு கடந்த அன்பின் காரணமாகத்தான் அனைத்து மனிதர்களையும்  படைத்தார்.

அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் அவர் நேசிக்கிறார்.

அவரைப் பொறுத்தமட்டில் மனிதனுக்கு சாதி, இன வேறுபாடு கிடையாது.

எந்த நாட்டை சார்ந்த மனிதர்களாக இருந்தாலும் சரி,

 எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் அவரது அன்புப் பிள்ளைகள்.

அவரது அன்பில் ஒரு போதும் மாற்றம் இருக்க முடியாது.

நாம் மீட்பு பெற வேண்டுமென்றால் அவரது அன்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயலால் அவரது அன்பை நாம் வாழ வேண்டும்.

கிணற்றில் நிறைய தண்ணீர் இருக்கிறது.

யார் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அது பயன்படும்.

அதை குடிப்பவர்களுக்கு தாகம் தீரும்.

பயன்படுத்தாதவர்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.

குடிக்காதவர்களுக்கு தாகமும் தீராது.

அது நமக்கு பயன்பட வேண்டுமா, நமது தாகத்தை தீர்க்க வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அதே போல் தான் நம்மை படைத்தவரின் அன்பு நமது நிலை வாழ்வுக்கு பயன்பட வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அவரது அன்பை நாம் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்தால் அந்த அன்பை நித்திய காலமும் பேரின்பமாக அனுபவிப்போம்.

ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கடவுளின் அன்பினால் எந்த பயனும் இல்லை.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நமது ஆண்டவர் சொன்னார்.

நம்மோடு பகிர்ந்து கொள்வதற்கு அவரது அருள் வரங்கள் அளவில்லாமல் காத்துக் கொண்டிருக்கின்றன.

நாம் செய்ய வேண்டியது அவரது அருள் வரங்களை கேட்க வேண்டியது தான்.

கேட்பவர்களுக்கு கிடைக்கும்.

நமக்கு கடவுளின் அருள் வரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் நாம் முழுமையாக நம்பிக்கையோடு அவற்றை கேட்டுப் பெற வேண்டும்.

நமக்கு கடவுள் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி அவரின் அருள் வரங்களை கேட்டு பெற்று நமது வாழ்வில் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்துவதற்கு வேண்டிய உதவியும் அவரே செய்ய தயாராக இருக்கிறார்.

அவரது அருள் வரங்களின்படி வாழ வேண்டிய உதவியை அவரிடம் கேட்டுப் பெற வேண்டும்.

நாம் கேட்டு பெற்றாலும், கேளாமல் விட்டாலும் அவரது அன்பில் மாற்றம் இல்லை.

அவரது அன்பை பெறுவதற்கும் நமக்கும் குறுக்கே நிற்பது நாம் செய்கின்ற பாவம்.

நம்முடைய பாவத்திற்கு முழுமையான பொறுப்பு நாம் தான்.

பாவத்திற்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டியதும் நாம் தான்.

எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும்,

எத்தனை பாவங்களாக இருந்தாலும்

அவற்றுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்ட வினாடியிலேயே அனைத்து பாவங்களும் முற்றிலும் மன்னிக்கப்பட்டு விடும்.

பாவ சங்கீர்த்தனம் நமது பாவங்களை மன்னிப்பதற்கென்றே இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவத் திரவிய அனுமானம்.

தருவதற்காக எந்நேரமும் காத்துக் கொண்டிருக்கும் நம்மை படைத்த அளவற்ற அன்பு நிறைந்த தந்தையிடம் கேட்போம், 
பெறுவோம், 
வாழ்வோம்.

கடவுளிடம் கேட்பதற்கு பெயர் தான் செபம்.

நமது வாழ்வே செப வாழ்வாக மாற வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே இறைவனது அருளை பெற்று அதைப் பயன்படுத்துவதற்காகத்தான்.

இறைவனிடமிருந்து எதைப் பெற்றாலும்,

நமது வாழ்க்கையினால் 

 அவரால் படைக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவனிடமிருந்து நாம் பெறுவது அவருடைய அன்பை.

நாம் பெற்ற அன்பை நமது சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்வது தான் பிறர் சிநேக வாழ்க்கை..

அன்பின் காரணமாக கடவுள் நமது பாவங்களை மன்னிக்கிறார்.

நாமும் நமக்கு விரோதமாக குற்றம் செய்த நமது சகோதர சகோதரிகளை மன்னிக்க வேண்டும்.

கடவுள் நமக்கு நன்மை செய்கிறார்.

நாமும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.

நாம் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தாலும் அவர் நம்மை நேசித்து பராமரித்து வருகிறார்.

நாமும் நம்மை பகைப்பவர்களை நேசித்து அவர்களுக்கு நல்லதை மட்டும் செய்ய வேண்டும்.

இறை மகன் மனிதனாய் பிறந்து நமக்காக தன்னையே தியாகம் செய்தார்.

நாமும் பிறருக்காக நம்மையே தியாகம் செய்ய வேண்டும்.

கடவுள் நாம் கேட்டதைத் தருகின்றார்.

நாமும் நமது அயலான் கேட்பதை கொடுத்து உதவ வேண்டும்.

இறையன்பும், பிறர் அன்பும் நம்மை வழி நடத்துவது தான் ஆன்மீக வாழ்க்கை. 

கடவுளிடம் கேட்போம்.

நாம் பெறுவதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.

விண்ணக வாழ்வு எல்லோருக்கும் பொதுவானது.

இவ்வுலகில் இணைந்து வாழும் நாம் அனைவரும் விண்ணகத்திலும் இணை பிரியாது இறைவனோடு என்றென்றும் வாழ்வோம்.

நமது பிறப்பின் பயன் விண்ணக நிலை வாழ்வு தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment