Sunday, January 1, 2023

இயேசுவை மக்கள் படுத்தும் பாடு.

இயேசுவை மக்கள் படுத்தும் பாடு.

."பழைய ஆண்டு வாழ்த்துக்கள், தாத்தா!"

"'ஏண்டா பொடியா, நேற்று
  புத்தாண்டாக இருந்தது இன்று பழைய ஆண்டாக மாறிவிட்டதோ?"

"நேற்று பொங்கின சுடு சோறு இன்று பழைய சோறு தானே, தாத்தா!"

"'சோறும், ஆண்டும் ஒண்ணா?"

"தாத்தா, எந்த பொருளானாலும் 
பயன்படுத்தாமல் இருந்தால் புதியதாகவே இருக்கும்.

பயன்படுத்தி விட்டால் அது பழையது தான்.

ஆண்டின் துவக்கத்தில் புதுப் புத்தகம் வாங்கிய மாணவன் அதை ஆண்டு முழுவதும் திறக்காமலேயே வைத்திருந்தால்

 அது ஆண்டின் கடைசியிலும் புதுப் புத்தகம் தான்.

 ஆனால் புதியது புதியதாகவே இருந்தால் என்ன பயன்?.

 பயன்படுத்தினால் தானே பயன்.

பயன்படுத்தி விட்டால் புதியது பழையது ஆகிவிடும்.

நேற்று புத்தாண்டு.

அதைக் கொண்டாடி முடித்தவுடன் பழைய ஆண்டு."

"'உனது சொல்லிலும் ஒரு தத்துவம் இருக்கிறது, ஏற்றுக்கொள்கிறேன்."

"என்ன தத்துவம் எனது சொல்லில் எனக்கே தெரியாமல்?"

"'ஒரு புதிய பொருளை பழையது ஆக்குவது எது?"

"அதில் ஏற்படும் மாற்றம். அதனால் தான் ஜனவரி 1 புத்தாண்டாக இருந்தது.

ஒன்று இரண்டாக மாறியவுடன் பழைய ஆண்டாக மாறிவிட்டது."
.
'''நாம் மாற வேண்டுமா? மாறக் கூடாதா? யோசித்து பதிலை சொல்லு."

"இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? 

மாற முடியாது, 
ஆனால், மாற வேண்டும்.".

"'கரெக்ட். ஆனால் நீ புரிந்து சொல்கிறாயா புரியாமல் சொல்கிறாயா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் நம்மால் மாற முடியாது?"

"நான் பிறந்த நாளிலிருந்து வயதாகும் வரை நான் தான்.

பிறந்த முதல் நாளில் என்னுடைய அம்மாவுக்கு நான் பிள்ளை.

நூறு வயது ஆகிவிட்டாலும் அம்மாவுக்கு நான் பிள்ளை.

ஆனால் நான் மாறித்தான் ஆக வேண்டும். 

குழந்தை பையனாகி,
 பையன் வாலிபனாகி,
 வாலிபன் கிழவனாக,
கிழவன் மரணம் அடைந்து 

 மாறித்தான் ஆக வேண்டும்."
.
"'ஆன்மீகத்துக்கு வருவோம்.

நாம் ஞானஸ்தானம் பெற்றவுடன் கிறிஸ்தவனாக மாறுகிறோம்.

மரணம் வரை மட்டுமல்ல மரணத்திற்கு பின்னாலும் நாம் கிறிஸ்தவன் தான்.

அதில் மாற்றம் இருக்கக் கூடாது, இருக்க முடியாது.

ஆனால் கிறிஸ்தவன் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

புதிய கிறிஸ்தவன் பழைய கிறிஸ்தவனாக மாறுவதைச் சொல்லவில்லை.

கிறிஸ்தவ பண்புகளில் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

நான் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
 ஏன் தெரியுமா?"

"வளர்வதும் மாற்றம் தான். தளர்வதும் மாற்றம் தான்.

தளர்ச்சி அடையக் கூடாது, வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்."


"'நாம் ஞானஸ்நானம் பெறும்போது பாவ இருள் சூழ்ந்த நமது ஆன்மாவில் அருள் ஒளி வீச ஆரம்பிக்கும்.

நமது ஆன்மா அருள் ஒளியில் வளர வேண்டும்.

எப்போது அருள் ஒளி தளர்ச்சி அடையும்?"

"அற்பப் பாவங்கள் செய்யும்போது ஒளி தளர்ச்சி அடையும்..

 சாவான பாவம் செய்தால் ஒளி நீங்கி மீண்டும் இருள் சூழ்ந்து விடும்.

இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது."

"தளர்ச்சி ஏற்பட்டாலோ, ஒளி நீங்கி இருள் ஏற்பட்டாலோ என்ன செய்ய வேண்டும்?"

"பாவ மன்னிப்பு பெற்று பாவ இருளை நீக்க வேண்டும்.

சாவான பாவம் நிலையில் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்."

"'அருள் ஒளி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?"

"செப வாழ்வு மூலமும், தேவ திரவிய அனுமானங்களைப் பெறுவதில் மூலமும் நமது அருள் ஒளியை அதிகரிக்க வேண்டும்."

"'நமது ஆண்டவரின் தாய் மரியாள் வாழ்நாள் முழுவதும் அருள் நிறைந்தவளாகவே வாழ்ந்தாள்.

நம்மால் அந்த நிலையில் வாழ முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த அளவு அருளில் வளர வேண்டும்.

அருள் நிலை ஒருபோதும் ஒரே நிலையில் இருக்காது. 

ஒன்று வளரும் அல்லது தளரும். 
தளர விடக்கூடாது.

அருள் வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும்."

"வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்க நம்மிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமாக பண்புகள் எவை?"

"'இறைவன் மேல் உள்ள அன்பும், பிறர் மேல் உள்ள அன்பும், நம்மிடம் தொடர்ந்து இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள்.

அன்பு இல்லாவிட்டால் கிறிஸ்தவ வாழ்வே இல்லை.

கிறிஸ்து அன்பு மயமானவர்.

அவரால் நம்மை அன்பு செய்யாமல் இருக்க முடியாது. 

அவர் நமக்காக பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தது நம் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகத்தான்.

நாமும் இறை அன்பிலும் பிறர் அன்பிலும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

நமது வாழ்நாள் முழுவதும் இறையன்புப் பணியிலும், பிறரன்புப் பணியிலும் ஈடுபட வேண்டும்.

ஈடுபட்டால் நாம் ஆண்டவருடைய அருளில் வளர்ந்து கொண்டிருப்போம்."


"அதாவது நல்ல கிறிஸ்தவர்கலாக வாழ்ந்து கொண்டிருப்போம்.

புத்தாண்டில் இருந்ததை விட ஆண்டின் முடிவில் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருப்போம்."

"இப்போது நான் கேட்க போகிற கேள்வியைக் கேட்டு நீங்கள் கோபப்படக்கூடாது.

திவ்ய நற்கருணை மீது நமக்குள்ள பக்தி

 வளர்ந்திருக்கிறதா?
 தளர்ந்திருக்கிறதா?"

"'இந்த கேள்விக்குரிய பதிலை நீயே சொன்னால் 

உனக்கு திவ்ய நற்கருணையைப் பற்றி எவ்வளவு தூரம் புரிந்திருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்வேன்."

"ஒரு காலத்தில் 

திவ்ய நற்கணையில் இயேசு தனது உடலோடும் ஆன்மாவோடும் முழுமையாக இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொண்ட மக்கள்,

அவரது சர்வ வல்லமையையும், அளவு கடந்த மேன்மையையும் உணர்ந்து,

திவ்விய நற்கருணை பேழையைப் பார்த்தவுடனே தங்களது ஆராதனையை அவருக்கு செலுத்தும் விதமாக முழங்கால் படியிட்டு எழுவார்கள்.
(Genuflect)

(They bent one knee to the ground, typically in worship)

கொஞ்ச நாள் கழிந்தது.
திவ்விய நற்கருணைப் பேழையைப் பார்த்தவுடன் முழங்கால் படியிடுவதை நிறுத்திவிட்டு,

நட்டமாய் நின்று கொண்டு,
தலையை மட்டும் குனிந்தார்கள்.


கொஞ்ச நாள் கழிந்தது.

தலையைக் குனிவதற்கு நேரம் கிடைக்கவில்லை, 

தலையைக் கொஞ்சம் ஆட்டிவிட்டு போனார்கள்.

பக்தி வளர்ந்திருக்கிறதா? தேய்ந்திருக்கிறதா?


"'உள்ளரங்க பக்தியின் அடையாளம் தான் வெளி செயல்கள்.

அதை வைத்துப் பார்த்தால் பக்தி
தேய்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆசிரியரைப் பார்த்தவுடன் நின்று வணக்கம் சொன்ன மாணவன் உட்கார்ந்து சொல்ல ஆரம்பித்தது போல இதுவும்."

"இன்னும் கேளுங்கள். ஒரு காலத்தில் நற்கருணை விருந்தில் கலந்து கொண்டவர்கள் 

முழந்தாள்ப் படியிட்டு,

தாயிடமிருந்து உணவை வாங்குவது போல,

வாயை திறந்து திவ்ய நற்கருணையை நாவில் வாங்கினார்கள்.

கொஞ்ச காலம் சென்றது.

 முழந்தாள்ப் படியிடுவதை நிறுத்திவிட்டு, 

நட்டமாய் நின்று,

திவ்ய நற்கருணையை நாவில் வாங்கினார்கள்.

இன்னும் கொஞ்ச காலம் சென்றது.

நாவில் வாங்குவதை நிறுத்திவிட்டு கையில் வாங்க ஆரம்பித்தார்கள்.

கையில் வாங்கும் போது திவ்ய நற்கருணையின் சில துகள்கள் கையில் விழும்.

ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

கையைத் தட்டி ஆட்டிவிட்டு, இயேசுவை உதறி தரையில் போட்டு,

வருவோர் போவோரிடமெல்லாம்   மிதி படும்படி விட்டுவிட்டார்கள்.

இப்போ சொல்லுங்கள், திவ்ய நற்கருணை பக்தி வளர்ந்திருக்கிறதா? தேய்ந்திருக்கிறதா?"

"'அன்று சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான்.

அவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு 

அவரது விரோதிகளால்

 மிதிக்கப்பட்டார்

 அடிக்கப்பட்டார்,

 உதைக்கப்பட்டார்,

 துப்பப்பட்டார்.

இப்போது அதே சாத்தான் நமது மக்களுக்குள்ளும் புகுந்திருக்க வேண்டும்.

இயேசு இன்னமும் தினமும் நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்.

ஐயோ பாவம், ஆண்டவர்!

 நம்மை படைத்து பராமரித்து வருவதற்காக நம்மிடமிருந்து பெறும் பயங்கரமான நன்றி!"

"இந்த ஆண்டிலாவது மக்கள் திருந்துவார்களா?"

"'இயேசுவே, எங்கள் ஆண்டவரே,

எங்களை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வரும் நீர் உம்மை உமது மக்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளக்கூடாதா?"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment