.*பாவிகளின் கூடாரம்.*
நாம் இயேசுவால் புனித இராயப்பர் மேல் கட்டப்பட்ட ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையின் மக்கள்.
நண்பர் ஒருவர் கேட்டார்,.
" உங்கள் திருச்சபையை *பரிசுத்த* திருச்சபை என்கிறீர்களே, அதில் பாவிகளே இல்லையா?"
நான் அவருக்கு அளித்த பதில்,
" பாவிகள் மட்டும் தான் இருக்கிறோம்."
அவர் மறுபடியும் கேட்டார்,
"பாவிகள் மட்டும் இருக்கிற திருச்சபையை ஏன் பரிசுத்த திருச்சபை என்கிறீர்கள்?"
நான் சொன்னேன்,
'' திருச்சபை பரிசுத்தமானது. அதில் இருக்கும் நாங்கள் பாவிகள்."
அவருக்குப் புரியவில்லை.
மருத்துவமனையில் நோயாளிகள்இருக்கிறார்கள்.
மருத்துவம் பார்க்கக் கூடிய மனை மருத்துவமனை,
நோய் உள்ள ஆள் நோயாளி.
மருத்துவம் + மனை.
நோய் + ஆள்
நோய் உள்ள ஆள் மருத்துவம் இருக்கிற மனையில் சேருகிறான்.
மருத்துவத்தில் நோய் இல்லை,
மருந்து இருக்கிறது.
நோயாளியிடம் நோய் இருக்கிறது மருந்து இல்லை.
நோயாளி தன் நோய் நீங்க மருந்து பெறுவதற்காக மருத்துவம் பார்க்கிறான்.
நோய் உள்ள ஆள்,
தன் நோய் நீங்க
நோய் இல்லாத
மருத்துவம் பெறுகிறான்.
திருச்சபை, பாவ நோய் நீக்கும் பாவம் இல்லாத பரிசுத்த சபை.
நாம், பாவ நோய் நீங்க அதில் இருக்கும் பாவிகள்.
திருச்சபை பாவிகள் வாழும் பரிசுத்தமான கூடாரம்.
*பாவிகளின் கூடாரம்.*
பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் இயேசுவை
"எனக்கு அவரைத் தெரியாதம்மா"
என்று மறுதலித்து மூன்று முறை பாவம் செய்த ஒரே ஆள் இராயப்பர் மட்டுமே.
இராயப்பர் இப்படி பாவம் செய்வார் என்று இயேசுவுக்கு முன்னாலேயே தெரியும்.
பாவத்திற்காக மனம் நொந்து அழுவார் என்றும் இயேசுவுக்கு தெரியும்.
தெரிந்தும் அவரையே திருச்சபையின் தலைவர் ஆக்குகிறார்.
இதில் ஒரு பெரிய உண்மை மறைந்து கிடக்கிறது.
நாம் தலைகீழாக நின்றாலும் ஒரே ஒரு விஷயத்தில் இயேசுவைப் போல் வாழ முடியாது
இயேசுவால் பாவம் செய்ய முடியாது.
பாவத்தில் பிறந்த நாம் இந்த விஷயத்தில் இயேசுவைப் போல் எப்படி இருக்க முடியும்?
ஆகவேதான் நாம் பின்பற்றக்கூடிய ஒருவரை நமது தலைவராக தந்திருக்கிறார்.
நாம் பாவத்தில் விழும் பொழுது நமது தலைவராகிய இராயப்பரை நினைத்தால்
அவரைப்போலவே நாமும் பாவத்திற்காக மனம் வருந்தி அழ ஆரம்பித்துவிடுவோம்.
இயேசு பரிசுத்தமானவர். அவரால் நிறுவப்பட்ட திருச்சபை என்னும் அமைப்பு பரிசுத்தமானது.
ஆனால் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட இராயப்பர் ஒரு பாவி, மனம் திரும்பிய பாவி.
நாமும் பாவிகள் தான். மனம் திரும்ப வேண்டிய பாவிகள்.
ஆகவே துணிந்து சொல்லலாம்:
பரிசுத்தராகிய இயேசுவின் பரிசுத்தமான திருச்சபையில் இருப்பவர்கள் அனைவரும்,
அடிமட்ட கிறிஸ்தவன் முதல் உச்சியில் இருக்கும் பாப்பரசர் வரை,
பாவிகளே.
பாவிகளாகிய நம்மை மீட்கவே பரிசுத்தராகிய இயேசு விண்ணகம் விட்டு மண்ணகம் வந்தார்.
திருச்சபையில் உள்ளவர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக இருக்க
நமது ஆண்டவர் 7 தேவ திரவிய அனுமானங்களைத் தந்திருக்கிறார்.
இவை இல்லாவிட்டால் எதற்காக இயேசு திருச்சபையை அமைத்தாரோ அந்த நோக்கத்தை அடைய முடியாது.
விண்ணகம் நோக்கம் என்றால் ஏழு தேவ திரவிய அனுமானம் நம்மை அங்கு ஏற்றிச் செல்லும வாகனங்கள்.
7 தேவ திரவிய அனுமானங்களில்
ஞானஸ்நானம், ஒப்புரவு அருட்சாதனம், அவஸ்தை பூசுதல்
ஆகிய மூன்றும் பாவ மன்னிப்புக்கு என்றே ஏற்படுத்தப்பட்டன.
பாவங்களை மன்னிப்பதற்காக குருத்துவம் ஏற்படுத்தப்பட்டது.
நற்கருணை வழிபாடாகிய திருப்பலி, பாவப் பரிகாரப் பலி.
ஆக ஏழில் ஐந்து தேவ திரவிய அனுமானங்கள் பாவ மன்னிப்பு சம்பந்தப்பட்டவை.
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் பரிசுத்தமான திருச்சபை பாவிகளுக்கு என்றே இயேசுவால் நிறுவப்பட்டது என்று.
நம்மைச் சாராத சில நண்பர்களுக்கு
நாம் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பயன்படுத்துவது, அதாவது, பாவசங்கீர்த்தனம் செய்வது புரிவதில்லை.
"கடவுளுக்கு மட்டும் தானே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.
ஆனால் கத்தோலிக்கர்கள் தங்கள் பாவங்களை சுவாமியாரிடம் சொல்லுகிறார்களே.
நேரடியாக கடவுளிடமே சொல்ல வேண்டியதுதானே." என்று கேட்கிறார்கள்.
பாவசங்கீர்த்தனம் என்ற தேவ திரவிய அனுமானம் நம் ஆண்டவராகிய இயேசுவால் நிறுவப்பட்டது.
அவர்தான் அப்போஸ்தலர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.
"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:
எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்."
(அரு. 20:22, 23)
அப்போஸ்தலர்களுடைய இந்த அதிகாரம் அவர்களுடைய வாரிசுகள் ஆகிய குருக்களுக்கும் தொடர்ந்து வருகிறது.
இயேசுவே நமது பாவங்களை குருக்கள் மூலமாக மன்னிக்கிறார்.
நமது பாவங்களுக்காக நமது மனவருத்தத்தை முதலில் இயேசுவிடம் தெரிவித்த பின்புதான் நாம் பாவசங்கீர்த்தனம் செய்கிறோம்.
பாவங்களுக்காக வருத்தப்படாமல் அவற்றைக் குருவானவரிடம் சொல்வதால் ஒரு பயனும் இல்லை.
பாவசங்கீர்த்தனம் செய்ய குருவானவர் கிடைக்காவிட்டால் நமது உத்தமனஸ்தாபமே நமக்கு பாவ மன்னிப்பை பெற்று தந்து விடும்.
ஆனாலும் குருவானவர் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் பாவசங்கீர்த்தனம் செய்துவிட வேண்டும்.
"ஏன் இந்த அதிகாரத்தை இயேசு குருக்களுக்குக் கொடுத்தார்?"
என்பதற்கான விளக்கத்தை இயேசுவிடம்தான் கேட்க வேண்டும்.
அப்போஸ்தலர்கள் எந்த அதிகாரத்தையும் கேட்டுப் பெறவில்லை.
அப்போஸ்தலர்கள் ஆவதற்கு அவர்கள் யாரும் விண்ணப்பிக்கவே இல்லை.
இயேசு தான் அவர்களை அழைத்தார்.
பாடுகளுக்கு முந்திய இரவு உணவின் போது இயேசு அப்போஸ்தலர்களை நோக்கி,
"நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை,
நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்:
நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும்,
அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன்."
இயேசு தான் அவர்களை அழைத்தார்.
இயேசு தான் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்.
இயேசு தான் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
இயேசு தான் அவர்களை அனுப்பினார்.
இயேசு தான் அவர்களோடு இருந்து, அவர்கள் மூலமாகச் செயல்படுகிறார்.
நாம் குருக்களிடம் பாவங்களைச் சொன்னாலும் இயேசு தான் பாவங்களை மன்னிக்கிறார்.
நாம் எல்லோருமே பாவிகளாக இருப்பதால் மற்றவர்களைப் பற்றி தவறாக நினைப்பதில் அர்த்தமே இல்லை.
சிலர் மனம் திருந்த வேண்டிய பாவிகளாய் இருக்கலாம்,
அல்லது
மனம் திரும்பிய பாவிகளாய் இருக்கலாம்,
நமக்குள் யார் மனம் திரும்பியவர்கள், யார் மனம் திரும்பாதவர்கள் என்று நமக்குத் தெரியாது.
மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு கூற நமக்கு எந்த உரிமையும் இல்லை.
ஒருவர் ஒருவருக்காக வேண்டிக் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.
எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள்.
அந்த உணர்வுடன் தான் மற்றவர்களை பற்றி நினைக்க வேண்டும்..
இப்பொழுது ஒரு கேள்வி எழும்:
இயேசுவைப் பெற்ற அன்னை மரியாள் சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்தாள்,
வாழ்நாள் முழுவதும் எந்தவித பாவமும் செய்யாமல் பரிசுத்தமாக வாழ்ந்தாள்.
அவளும் பாவிகளின் கூடாரமாகிய நமது திருச்சபையைச் சேர்ந்தவள் தானே.
நாம் பாவிகள் என்றால்,
மரியாள் யார்?
பரிசுத்தராகிய நமது ஆண்டவர் இயேசு தன்னை பெறப் போகும் தாயும் பரிசுத்தமானவளாக இருக்க வேண்டும் என்பதற்காக,
தன்னுடைய நித்திய கால திட்டப்படி,
அவளைப் படைக்கும் போதே பாவ மாசு மரு இன்றி,
அருள் நிறைந்தவளாய் படைத்தார்.
அவள் பரிசுத்தரின் தாய், பரிசுத்தமானவள்.
பரிசுத்தமான தனது தாயை நமக்கும் தாயாக இயேசு தந்திருக்கிறார்.
அன்னை மரியாள் பாவிகளாகிய நமது தாய்.
ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையின் தாய்.
பரிசுத்த கூடாரத்தில் வாழும் நாம்,
நமது பரிசுத்த தாயின் செப உதவியோடு,
இயேசுவின் அருளால்
பரிசுத்தம் அடைந்து,
பரிசுத்தரோடு நித்திய காலம் வாழத் தகுதி பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment