Friday, January 13, 2023

கடவுள் சித்தம்.

கடவுள் சித்தம்.

"தாத்தா, கடவுளை ஆதி காரணர் என்கிறார்களே அதன் பொருள் என்ன?"

"'முதல் காரணர். 

உலகில் காரணம் இன்றி விளைவு இல்லை.

ஒவ்வொரு காரணமும் இன்னொரு காரணத்தின் விளைவு.

நீ  உலகில் பிறக்க காரணமாக இருந்தவர்கள் உன்னுடைய பெற்றோர்.

அவர்கள் உலகில் பிறக்க காரணமாக இருந்தவர்கள் அவர்களுடைய பெற்றோர்.

இப்படி சொல்லிக் கொண்டே போனால் மனுக் குலம் நமது முதல் பெற்றோரிடமிருந்து பிறந்தது புரியும்.

ஆனால் நமது முதல் பெற்றோர் தாங்களாகவே தோன்றியவர்கள் அல்ல.

அவர்களைப் படைத்தவர் கடவுள்.

கடவுளுக்கு காரணர் கிடையாது.

அவர் தோன்றியவர் அல்ல.

தாமாக இருப்பவர்.

நாம் வாழும் பிரபஞ்சத்திற்கும், நமக்கும் முதல் காரணர் அவர் தான்.

ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு துவக்கம் உண்டு.

கடவுள் விளைவு அல்ல.

எல்லா விளைவுகளுக்கும் அவர்தான் முதல் காரணர்.

ஆகவே அவருக்கு துவக்கம் இல்லை.  முடிவும் இல்லை."

"அனைத்துக்கும் காரணர் அவர் என்றால் நாம் செய்கிற பாவத்திற்கும் காரணம் அவர்தானே."

"'கடவுளால் படைக்கப்பட்ட  மனிதன்தான் பாவம் செய்தான்.

ஆகவே பாவத்திற்கும் முதல் காரணர் அவர்தான்.

ஆனால் மனிதன் செய்த பாவத்திற்கு அவர் பொறுப்பு இல்லை."

"விளங்கவில்லை."
 
"'உன்னை பெற்றது யார்?"

"என்னுடைய பெற்றோர்."

"' உன்னுடைய உடனடி காரணர்
(Immediate cause) உன்னுடைய
பெற்றோர்.

பெற்றோர் சொற்படி நடக்க வேண்டியது உன்னுடைய கடமை.

இரவு 10 மணி வரை உனது பாடங்களைப் படி என்று அம்மா சொல்லியிருக்கிறார்கள்.

நீ  10 மணி வரை TV பார்த்துக் கொண்டிருந்தால் அதற்கு பொறுப்பு அவர்களா?"

"என்னை பெற்றது அவர்கள்தான். வீட்டில் TV வாங்கி வைத்திருப்பதும் அவர்கள் தான்.

அவர்களது சொல்லுக்கு கீழ்ப்படியாமல் TV பார்த்ததற்குப் பொறுப்பு நான் தான்."

"'கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைத்து,

சிங்கார வனத்தில் வாழவைத்து,

ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்ற கட்டளையும் கொடுத்தார்.

அவர்களைப் படைத்தது அவர்தான்.

விலக்கப்பட்ட களிதரும் மரத்தை படைத்ததும் அவர்தான்.

உண்ணக்கூடாது என்று கட்டளை கொடுத்திருந்த கனியை உண்டது நமது முதல் பெற்றோர்.

கட்டளையை மீறியதற்கும் கனியைத் தின்றதற்கும் அவர்கள் தான் பொறுப்பு.

கடவுள் அல்ல.

ஆனாலும் தின்றவர்களின் காரணர் அவர்.

விலக்கப்பட்ட கனிக்கும் காரணர் அவர்.

ஆகவே முதல் காரணர் எறை வகையில் நமது முதல் பெற்றோர் செய்த பாவத்திற்கு முதல் காரணராக 
இருந்தாலும, '

பொறுப்பாளர் அல்ல."

"அவரன்றி அணுவும் அசையாது என்பார்கள்.

அவருடைய சித்தமின்றி எதுவும் நடக்காது.

அப்படியானால் நமது முதல் பெற்றோர் பாவம் செய்தது அவரது சித்தப்படியா?"

"'உலகம் உண்டாகுக என்றார், உலகம் உண்டாயிற்று.

கடவுளின் சித்தப்படி உலகம் உண்டாயிற்று.

மனிதனை படைப்போம் என்றார். படைத்தார்.

கடவுளின் சித்தப்படி மனிதன் படைக்கப்பட்டான்.

கடவுள் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை
Active will of God. என்போம்.

மனிதனுக்கு கட்டளைகள் கொடுத்து அவற்றின்படி நடக்கச் சொன்னார்.

மனிதனைப் படைக்கும் போது பரிபூரண சுதந்திர உணர்வோடு படைத்தார். 

அதாவது கடவுள் சொன்னபடி நடப்பதற்கும், மீறி நடப்பதற்கும் அவனுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார்.

சொன்னபடி நடந்தால் புண்ணியம்,

மீறி நடந்தால் பாவம்.

மனிதனுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்திருந்தபடியால்  மனிதன் பாவம் செய்தபோது அவனைத் தடுக்கவில்லை.

தடுக்காது அனுமதித்ததும் அவரது சித்தம் தான்.
இதை Permissive Will of God. என்போம்.

உலகில் நடப்பவை அனைத்தும் ஒன்று கடவுளின் Active will படி நடக்கும்., 
'
அல்லது Permissive Will படி நடக்கும்."

"அப்போ உலகில் நாம் காணும் தீமைகள் எல்லாம் கடவுளின்  Permissive Will படி நடக்கின்றன.

சரியா?"

"'முதலில் தீமை என்ற சொல்லின் பொருளை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளின் Permissive Will ஐப் பயன்படுத்தி கடவுளின் கட்டளைகளை மீறி நடப்பது தான் தீமை.

பாவம் மட்டுமே தீமை என்ற சொல்லின் பொருளுக்குள் அடங்கும்.

நமது ஆண்டவர் நமக்கு செபம் சொல்ல கற்றுத் தந்த போது 

"தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்"

என்று செபிக்கும்படி சொன்னார்.

"தந்தையே, நாங்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி  எங்களைக் காப்பாற்றும்.

 செய்த பாவங்களை மன்னித்து எங்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை தாரும்"

என்பது அதன் பொருள்.

நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்கே

 இறைமகன் மனு மகனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு

 சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

உலகில் நமக்கு வரும் துன்பங்கள் தீமைகள் அல்ல.

இயேசு நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்கு துன்பங்களை அனுபவித்தார்.

இயேசு அனுபவித்த துன்பங்களைத் தீமைகள் என்று சொல்ல முடியுமா?

யூதர்கள் அவரைக் கொன்றது அவர்களுக்கு தீமை, அதாவது, பாவம்.

அவர்களது பாவத்தை மன்னிக்கும் படி இயேசு தனது தந்தையிடம் வேண்டினார்."

"தாத்தா, தந்தை மகனின் வேண்டுதலைக் கேட்டிருப்பாரா?

அதாவது அவரது மரணத்திற்கு காரணமானவர்களை, யூதாஸ் உட்பட, தந்தை மன்னித்திருப்பாரா?"

"'இந்த கேள்வியைக் கேட்கும் போது ஒரு மறுக்க முடியாத உண்மையை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்.

தந்தை மகனுள்ளும், மகன் தந்தையுள்ளும் இருக்கிறார்கள்.

இயேசுவின் வார்த்தைகள் ஒப்புக்காக சொல்லப்பட்டவை அல்ல.

பாவப் பரிகாரமாக சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது மனதார சொன்ன வார்த்தைகள்.

கடவுளாகிய இயேசு, தான் சொன்ன வார்த்தைகளைத் தானே மீறுவாரா?

கடவுளால் பாவம் செய்ய முடியாது. 

கடவுளின் வார்த்தைகளை மீறுவது தான் பாவம்.

அவரே தனது வார்த்தைகளை மீற முடியாது.

இப்போது சொல்லு, கடவுள்  தனது பாடுகளுக்கும், சிலுவை மரணத்திற்கும் காரணமானவர்களை மன்னித்திருப்பாரா?"
 

"கடவுள் தான் சொன்ன வார்த்தைகளை மீறமாட்டார் என்பது நமது அசைக்க முடியாத விசுவாசம்.

ஆனால் பாவம் செய்தோர் தங்களது பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு 

கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமே,

அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் இதைச் செய்திருப்பார்களா?"

"'செய்திருக்க மாட்டார்கள் என்று உங்களிடம் யார் சொன்னது?"

"பைபிளில் ஆதாரம் இல்லையே."

"'இயேசுவின் வார்த்தைகளே ஆதாரம்.

இயேசுவால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை 
விசுவசிக்கிறாயா?"

"விசுவசிக்கிறேன்."

"'அவரால் புதுமைகள் செய்ய முடியும் என்பதை விசுவசிக்கிறாயா?"

"விசுவசிக்கிறேன்."

"' பாவிகளை மனம் திருப்ப அவரால் முடியும் என்று 
விசுவசிக்கிறாயா?"

"விசுவசிக்கிறேன்."

"'இயேசு தன்னைக் கொன்றவர்களை மனம் திருப்பியிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நோக்கும்போது 

அவர் தன்னை கொன்றவர்களை மனம் திருப்பியிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இயேசு தந்தையை நோக்கி சொன்ன செபமே இதற்கு ஆதாரம்.

வேறு ஆதாரம் அவசியமில்லை 


"நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, 

"உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
(மத்27:54)

என்ற பைபிள் வசனத்தை வாசித்திருக்கிறாயா?"

"வாசித்திருக்கிறேன்."

"'இதிலிருந்து உனக்கு என்ன உண்மை புரிகிறது?".

"நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும்

இயேசு இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்டார்கள் என்ற உண்மை புரிகிறது."

(தொடரும்)

லூர்து செல்வம்,

No comments:

Post a Comment