Thursday, January 26, 2023

நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்." (எபிரே.10:39)

"நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்." (எபிரே.10:39)

''தாத்தா, ஊரோடு ஒத்துவாழ் என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது.

அப்படி வாழ்ந்தால் தான் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை, ஏற்படாது என்று சொல்லுவார்கள்.

ஆண்டவரது நற்செய்திப் போதனைப்படி வாழ்பவர்களால் இந்த பழமொழிப் படி வாழ முடிவதில்லை.

நாம் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

'"நீ கேட்பது "லூர்து சாமி, உன் பெயர் என்ன?"

 என்று கேட்பது போல் இருக்கிறது.

ஆண்டவரது நற்செய்திப் போதனைப்படி வாழ வேண்டும் என்ற பதில் உனது கேள்வியிலேயே இருக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நமது ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளும்படி விசுவாசத்தோடு வாழ வேண்டும்.

நம்மைச் சுற்றி வாழ்பவர்களைத்தான் ஊர் என்கிறோம்.

அவர்கள் இயேசுவின் போதனைப்படி தங்கள் ஆன்மாவை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் வாழ்ந்தால்,

நாம் அவர்களோடு ஒத்து வாழ வேண்டும்.

ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும் நோக்கம் ஒன்றே.

ஆனால் ஊரார் தங்கள் ஆன்மாவை பற்றி கவலைப்படாமல்,

தங்கள் உடல் சார்ந்த நோக்கத்தோடு மட்டும் வாழ்ந்தால் 

அவர்களோடு ஒத்து வாழக் கூடாது.

நமது ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு ஊரோடு ஒத்து வாழ வில்லை.

அப்படி வாழ்ந்திருந்தால் அவரை சிலுவையில் அறைந்து கொன்றிருக்க மாட்டார்கள்.

அவரைப் பின்பற்றி வாழ்ந்த அவரது சீடர்களையும் கொன்றிருக்க மாட்டார்கள்."

"நாம் இயேசுவைப் போல் வாழ்ந்தால் நமக்கும் இயேசுவுக்கு நடந்தது போல் தானே நடக்கும்!"

"'நிச்சயமாக.

நமக்கும் சிலுவைகள் வரும்.
நாமும் அவரைப் போல சிலுவைகளை சுமந்து தான் ஆக வேண்டும்.

அப்போதுதான் நாம் இயேசுவின் சீடர்கள்.

உலகம் நம்மை வெறுக்கும்.

இயேசுவுக்காக உலகத்தின் வெறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்."

"கடவுள் நம்மை ஆன்மாவோடும், உடலோடும் படைத்தார்.

நமது உடலை முதலில் படைத்து விட்டு தான் அதற்கான ஆன்மாவைப் படைத்தார்.

நமது உடல் நல்ல நிலைமையில் இருந்தால்தான் நமது ஆன்மா அதோடு வாழும்.

உடல்நிலை மோசமாகிவிட்டால் ஆன்மா உடலை விட்டு பிரிந்து விடும்.

ஆன்மா உடலோடு வாழ்ந்தால் தானே நம்மால் இறைவனுக்கு ஏற்ற புண்ணிய வாழ்வு வாழ முடியும்.

அப்படியானால் நமது உடலையும் பேண வேண்டியது அவசியம் தானே.

அப்படியானால் உடல் சார்ந்த காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு?"

"'அருவியில் குளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குற்றாலத்திற்குப் போக விரும்புகிறாய்.

குற்றாலத்திற்குப் போக கார் வேண்டும்.

குற்றாலத்திற்குப் போவதற்காகக் கார் வேண்டுமா?

அல்லது

காரில் பயணிக்க வேண்டும் என்பதற்காகக் குற்றாலத்திற்குப் போகிறாயா?"


"குற்றாலத்திற்குப் போவதற்காகத்தான் கார் வேண்டும்."

"'அதேபோல்  உலகில் நமது ஆன்மா வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நமக்கு உடல் தரப்பட்டிருக்கிறது.

உடல் வாழ வேண்டும் என்பதற்காக ஆன்மா படைக்கப்படவில்லை.

ஆன்மாவிற்காகத்தான் உடல்,
உடலுக்காக ஆன்மா இல்லை.

நாம் உலகில் படைக்கப்பட்டிருப்பது ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக மட்டுமே,

நமது ஆன்மீக வாழ்வில் உதவுவதற்காக மட்டுமே உடல் சார்ந்த வாழ்வு.

ஆகவே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமே.

அதற்காக மட்டுமே நமது உடலை பேண வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்காக உடலைப் பேணினால் அதுவும் ஆன்மீக வாழ்வு தான்.

நாம் உடல் நலம் உள்ளவர்களாக இருந்தால் தான் கோவிலுக்கு ஒழுங்காக போக முடியும்,

உழைத்து, பொருள் ஈட்டி அதைக் கொண்டு பிறருக்கு உதவ முடியும்.

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும்,

பிறருக்கு உதவுவதும் ஆன்மீக காரியங்கள்.

இது போன்ற ஆன்மீக காரியங்களை செய்வதற்காக மட்டுமே நாம் நமது உடல் நலனை பேண வேண்டும்.

சகலவித வசதிகளோடு வாழ வேண்டும் என்பதற்காக பொருள் ஈட்டுவதற்காக கோவிலுக்குப் போகாமல் உழைத்தால்,

உடல் சார்ந்த வாழ்வுக்காக ஆன்மீக வாழ்வைத் தியாகம் செய்கிறோம்.

ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக உடலைத் தியாகம் செய்ய வேண்டும்.

ஆனால் உடலைக் காப்பாற்றுவதற்காக ஆன்மாவைத் தியாகம் செய்யக்கூடாது.

நமது ஆண்டவர் இயேசு நமது ஆன்மாவை காப்பாற்றுவதற்காக 

அவரது உடலால் பாடுகள் பட்டு, 
அவரது உடலைச் சிலுவையில் அறைய அனுமதி கொடுத்தார்.

இதனால் அவரது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

நமக்காக அவர் மரணம் அடைந்தார்."

"அதாவது ஆன்மீக வாழ்வுக்காக நமது உடலைப் பேணலாம் அல்லது இழக்கலாம்.

ஆனால் லௌகீக வாழ்வுக்காக ஆன்மாவை இழந்து விடக்கூடாது.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? 

ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?"
(மத்.16:26)

"'Correct. ஆன்மாவை காப்பாற்ற வேண்டுமென்றால் நமது ஆண்டவரது நற்செய்தி போதனையை விசுவசித்து அதன்படி வாழ வேண்டும்.

பைபிளை வாசிப்பதின் மூலமும்,
சுவாமியாரது பிரசங்கங்களைக் கேட்பதின் மூலமும் நற்செய்தியை அறிந்தால் மட்டும் போதாது,

அதை விசுவசித்து அதன்படி வாழ வேண்டும்.

வசனங்களை மேற்கோள் காட்டுவதற்கும்,

வினாடிவினாத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவதற்கும் 

பைபிளை வாசிப்பதால் ஒரு பயனும் இல்லை.

உள்ளத்தில் இருக்கும் இறைவசனத்தை நமது வாழ்வாக மாற்றினால் தான் பைபிள் வாசித்ததின் பயனைப் பெறுவோம்."

"ஊரோடு ஒத்துப் போக முடியாவிட்டாலும் ஊரை நம்மோடு ஒத்துப் போக வைக்கலாம் அல்லவா?"

"'நீங்கள் உலகின் ஒளி என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஒளியால் யாருடைய கண்ணிலும் படாமல் இருக்க முடியாது.

நம்மைப் பார்ப்போர் நம்மில் வாழும் ஒளியாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

நம்மைப் போல் அவர்களும் இயேசுவைப் பின்பற்றி வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்வில் மற்றவர்கள் நம்மோடு இயேசுவைக் காண வரும்படி வாழ்வதுதான் உண்மையான விசுவாச வாழ்வு.

வாழ்வோம்.

வாழவைப்போம்.

அதுதான் விசுவாச வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment