Monday, January 9, 2023

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்." (மாற்கு.1:40)

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்."
(மாற்கு.1:40)

"தொழுநோயாளி கூட நமக்கு பாடம் சொல்லித்  தருகிறான், தாத்தா."

"'இதில் அதிசயம் என்ன இருக்கிறது?

நாம் கற்க தயாராக இருந்தால் ஒரு ஊமையால் கூட நமக்கு பாடம் சொல்லித் தர முடியும்."

"சொல்லித் தர முடியாது, தாத்தா, சொல்லாமல் தான் தர முடியும்.

நான் சொன்னதற்கு விளக்கம் கேட்கவில்லையே?"

"'கேட்டால் தான் கொடுப்பாயா?

சரி, கேட்கிறேன். எந்த தொழுநோயாளி உனக்கு பாடம் சொல்லித் தந்தான்?"

"நேற்று இரவில் செப நேரத்தில் இயேசுவிடம் ஒரு உதவி கேட்டேன். 

பகலில் நேர்காணலுக்குச் சென்று வந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைக்க ஆவன செய்யும்படி ஆண்டவரை கேட்டேன்.

கேட்டுவிட்டு வேதாகமத்தை திறந்து மாற்கு நற்செய்தியை வாசிக்க ஆரம்பித்தேன்.


"தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, "நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்."

"'வேண்டி விட்டு உன்னோடு பேசினானா?"

"பேசாமல் பேசினான்.

அவன் பேசியதை கேட்டு விட்டு இயேசுவிடம் திரும்பி,

"ஆண்டவரே ஒரு கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு, நேர் காணலுக்கும் சென்று வந்திருக்கிறேன்.

நீர் விரும்பினால் எனக்கு வேலை கிடைக்கும்."
 என்று வேண்டினேன்.

தொழுநோயாளி என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தான்."

"'ஒன்றும் சொல்லவில்லையா?"

"சொல்ல வேண்டியதை அவனது புன்முறுவலே சொல்லிவிட்டது."

"'என்ன சொன்னது?"

"Very good. என்னைப் பார்த்து பாடம் கற்றதற்கு எனது மனமார்ந்த நன்றி.

இப்படித்தான் செபிக்க வேண்டும்.

கேளுங்கள் தரப்படும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

நாம் கேட்ட பின்பு, 

"ஆண்டவரே உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாருங்கள்."
என்று சொல்ல வேண்டும்.

நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்கு நன்மை பயப்பதையே தருவார்.

நமக்கு எது  கிடைத்தாலும் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிடைக்காவிட்டாலும் நன்றி கூற வேண்டும்."
என்று கூறியது."

"'பரவாயில்லையே. அநேகர் நாம் பேசுவதையே கேட்பதில்லை.

உனக்கு புன்முறுவல் பேசுவது கூட கேட்டிருக்கிறது."

"ஒரு நாள் சமையல் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த அம்மாவிடம் சென்று,

"அம்மா பண்டம் வாங்க பத்து ரூபாய் தாருங்கள்" என்றேன்.

அம்மா ஒரு புன்சிரிப்பு சிரித்தார்கள்."

"'பணம் கிடைத்ததா?" 

"அதைத்தான் புன்சிரிப்பு கூறிவிட்டதே.

'இன்று அம்மாவிடம் பணம் இல்லை. நாளைக்கு பண்டம் வாங்க 20 ரூபாய் தருவார்கள்.

மகிழ்ச்சியோடு பள்ளிக்கூடம் சென்று வா."

"'நீ என்ன செய்தாய்?"

"பதிலுக்கு ஒரு புன்முறுவல் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன்."

"'ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தான்.

அவன் தினமும் வேலைக்குப் போகும்போது 

கோவிலுக்குச் சென்று நற்கருணைப் பேழையைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டுச் செல்வான்.

இதை  பல நாள் கவனித்துக் கொண்டிருந்த அவனுடைய பங்குக் குருவானவர் ஒரு நாள் அவனைப் பார்த்து,

"ஒவ்வொரு நாளும் காலையில் கோவிலுக்கு வந்து ஆண்டவரிடம் என்ன கேட்பாய்" என்றார். 

"நான் எதுவுமே கேட்க மாட்டேன்.

நான் அவரைப் பார்ப்பேன், அவரும் என்னை பார்ப்பார்.

எங்கள் பார்வைகள் தான் பேசிக்கொள்ளும்."

"அவரது பார்வை என்ன சொல்லும்?"

"மகிழ்ச்சியோடு சென்று வா. இயேசுவும் உன்னோடு தான் வருகிறார்."

"வருவாரா?"

"வருவார். நான் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எங்கள் மனங்கள் பேசிக்கொள்ளும்.

வயலாக இருந்தாலும் அவரது சன்னிதானத்தில் தான் நான் வேலை செய்வேன்."

''கோவிலுக்குள் வராவிட்டால் உன்னோடு வரமாட்டாரா?"

"சாமி, அவர் ஒவ்வொரு வினாடியும் என்னோடுதான் இருப்பார்.

பகலிலும் இரவிலும் என்னோடு தான் இருப்பார்."

"பிறகு எதற்காக அவரைப் பார்ப்பதற்கு கோவிலுக்கு வருகிறாய்?"

''சுவாமி உங்களுக்கு தெரியும், நீங்கள் தான் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறீர்கள். 

இறை மகனுக்கு இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

தேவ சுபாவத்தில் அவர் எங்கும் எல்லோரோடும் இருக்கிறார்.
அவரை மனதால் (சிந்தனையால்) மட்டுமே பார்க்க முடியும்,

மனித சுபாவத்தில் மோட்சத்திலும், திவ்ய நற்கருணைப்  பேழையிலும் இருக்கிறார்.

திவ்ய நற்கருணைப்  பேழையில் 

அவரது அன்னை மரியாளோடு இருந்தது போலவே, தனது ஆன்மாவோடும் சரீரத்தோடும் இருக்கிறார்.

ஆன்ம, சரீரத்தோடு வீற்றிருக்கும் இயேசுவைக் காணவே கோவிலுக்கு வருகிறேன்."

"மோட்சம் எங்கே இருக்கிறது?"

"நீங்கள் எனக்கு பரீட்சை வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களது பிரசங்கத்தில் கேட்டதையே சொல்கிறேன்.

மோட்சம் என்பது ஒரு பேரின்ப நிலை. இடம் அல்ல. அந்நிலையில்  இருப்பவர்களை நமது ஊனக் கண்ணால் பார்க்க முடியாது.

ஆனால் நற்கருணை பேழை ஒரு இடம். அதற்குள் ஆன்ம சரீரத்தோடு இருக்கும் ஆண்டவரை நமது கண்ணால் பார்க்கலாம்.

நீங்கள் அவரை எங்கள் வாயில் வைக்கும் போது அவரை ருசித்து உண்ணலாம்.

கண்ணால் பார்க்கக்கூடிய இயேசுவைப் பார்ப்பதற்குக் கோவிலுக்கு வருகிறேன்.

வசீகர வார்த்தைகளை கூறி அப்பத்தையும், ரசத்தையும் இயேசுவின் உடலாகவும், ரத்தமாகவும் மாற்ற வரம் பெற்ற நீங்கள் பாக்கியசாலி.

உங்களை எங்களது பங்குக் குருவாக பெற்ற நாங்கள் பாக்கியசாலிகள்.

உங்களால் தானே நாங்கள் இயேசுவைக் கண்ணால் பார்க்கவும்,

 நாவினால் சுவைக்கவும் முடிகிறது!"


"அந்த விவசாயி பிரசங்க நேரத்தில் முழுவதும் விழித்துக் கொண்டிருப்பார் போல் இருக்கிறது.

ஆனால் நம்மில் அநேகர் இயேசுவிடம் ஏதாவது கேட்கும் போது விழித்திருப்பார்கள்.

இயேசு அவரது பிரதிநிதி மூலம் பேசும் போது தூங்கி விடுவார்கள்."

"'பரவாயில்லை நீ அதை தூங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறாய்."

"தாத்தா நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

நான் குருவானவரின் பிரசங்கத்தை தான் கவனிக்கிறேன்.

தூங்குபவர்கள் என் கண்ணில் பட்டால் நான் என்ன செய்ய முடியும்?

நான் உங்களை பார்க்கும் போது நீங்கள் உட்கார்ந்திருக்கும் 
நாற்காலியும் எனக்குத் தெரிகிறது.

அதற்கு நான் என்ன செய்வேன்?".

"'நாம் இறைவனோடு மனதால் பேச முயலும் போது நமது கண்ணில் படும் உலகப் பொருள்கள் நமது சிந்தனையை கலைத்து விடக்கூடாது.

மனதை.ஒருமுகப்படுத்தி 
(With Concentration) இறைவனோடு பேசினால் உலக பொருள்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

பேரப்புள்ள,

மனதை ஒருமுகப்படுத்தி செபிப்போம்.

இறைவன் நமக்குத் தர வேண்டியதை அவர் கையிலேயே விட்டு விடுவோம்.

அவர் நமக்குத் தர வேண்டியதை   அதற்குரிய நேரம் வரும்போது தருவார்.

கேட்டதைத் தராமல் வேறு எதையாவது தந்தாலும் நன்றி கூறுவோம்."

"எதையும் தராவிட்டாலும் நன்றி கூறுவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment