Thursday, January 19, 2023

பாவ மன்னிப்பு. (தொடர்ச்சி)

பாவ மன்னிப்பு. (தொடர்ச்சி)

.
"தாத்தா,  உலகில்  இன்னும் பாவம் இருக்கிறதே.

அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"'மனிதனைக் கடவுள் முழுமையான  சுதந்திரத்தோடு படைத்தார்.

மனிதன் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் இறைவன் குறுக்கிடுவதில்லை.

உலகம் முடியும் மட்டும் மனிதர்கள் இருப்பார்கள்.

அவர்களுடன் சுதந்திரமும் இருக்கும்.

ஆகவே மனிதன் பாவம் செய்வதை நம்மால் தடுக்க முடியாது.

ஆகவேதான் பாவங்களை மன்னிப்பதற்கென்றே மனிதனாகப் பிறந்த இறைமகன் 

 அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

அவர் கத்தோலிக்க திருச்சபையை ஏற்படுத்தியதன் நோக்கமே 

நாம் பாவ மன்னிப்பு பெற்று, பரிசுத்தமாய் வாழ்ந்து விண்ணகத்திற்குச் செல்ல நம்மை தயார் படுத்தி கொள்வதற்காகத்தான்.

ஞானஸ்நானம் பெற்றால் தான் திருச்சபையின் அங்கத்தினர் ஆக முடியும்.

ஞானஸ்நானத்தின் நோக்கம் என்ன?

நமது சென்மப் பாவத்தை மன்னிப்பது. .

பாவ மன்னிப்பு பெறும்போதுதான் நாம் திருச்சபைக்குள் நுழைகிறோம்.

அதிலிருந்து பாவமன்னிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட மற்ற தேவத் திரவிய அனுமானங்களும்  

பாவ மன்னிப்பையே மையமாகக் கொண்டிருக்கிறன.

பாவ மன்னிப்பு பெற்ற பின்பு தான் உறுதிப்பூசுதல் பெற முடியும்.

அது நாம் பாவத்தில் திரும்ப விழாதிருக்கவும்,

நமது விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும்,

பரிசுத்தத்தனத்தில் வளரவும் போதுமான உறுதியைத் தருகிறது.

பாவ சங்கீர்த்தனம் பாவங்களை மன்னிப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது.

பாவ மன்னிப்பு பெற்றவர்கள் தான் திவ்ய நற்கருணை விருந்தில் கலந்து கொள்ள முடியும்.

பாவத்தில் விழாதிருக்கவும், ஆன்மீகத்தில் தொடர்ந்து வளரவும் போதிய சக்தியைத் தர நமது ஆண்டவரே நமது ஆன்மீக உணவாக நமக்குள் வருகிறார்.

குருத்துவம் பாவப் பரிகாரப்பலி நிறைவேற்றவும், நமது பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் கொண்ட குருக்களை நமக்கு தருகிறது.

அவஸ்தைப் பூசுதல் நமது இறுதி பயணத்தில் நமது பாவங்களை மன்னித்து விண்ணக வாழ்வுக்குள் அனுப்புகிறது.

பாவ மன்னிப்பு பெற்ற பின் தான் திருமண வாழ்வுக்குள் நுழைய முடியும். 

உடல் ரீதியாக காலையில் எழுந்தவுடன் கழிவுப் பொருட்களை வெளியேற்றிவிட்டு,

குளித்து உடலில் உள்ள வியர்வை அழுக்கை போக்காமல் பகலில் பணி செய்ய முடிகிறதா?

அதேபோல் தான் பாவ அழுக்கைப் போக்காமல் ஆன்மீக வாழ்வு வாழ முடியாது.


அப்போஸ்தலர்கள் இயேசு 
சொன்னதையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு, 

தைரியம் பெற்று, 

நற்செய்தியை போதிக்க ஆரம்பிக்க 

பரிசுத்த ஆவி வருவதற்காக 

பெந்தேகோஸ்து திருநாள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

"தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்: நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்." (அரு.14:20)

ஆனால் பாவ மன்னிப்பை கொடுக்கும் அதிகாரத்தை அப்போஸ்தலர்களுக்கு கொடுக்க 

இயேசு உயிர்த்து அவர்களுக்கு காட்சி கொடுக்கும் போதே பரிசுத்த ஆவியைக் கொடுத்து விட்டார். 


"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:

 எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்."
(அரு.20:23)

இதிலிருந்து பாவ மன்னிப்புக்கு இயேசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது தெரிய வருகிறது.

பாவ மன்னிப்புப் பெறாவிட்டால் நற்செய்தியை அறிந்தும் பயனில்லை..

நற்செய்தியை அறிந்த பின்பும்

  பாவங்களோடு வாழ்ந்து மரித்தால்  மோட்சத்திற்குப் போக முடியாது.

" போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."
(மாற்.16:15,16)

எல்லோருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமை.

நற்செய்தியை அறிவதால் மட்டும் ஒருவன் மீட்பு பெற முடியாது.

அதை விசுவசித்து, ஞானஸ்நானத்தின் மூலம் பாவ மன்னிப்பு பெறுபவர்களே மீட்பு பெற முடியும்.

இயேசுவை விசுவசிப்போம்.

அவரிடமிருந்து பாவ மன்னிப்பு பெறுவோம்.

நமது விசுவாசத்தை வாழ்வோம்.

என்றென்றும் அவரோடு விண்ணகத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.








.

No comments:

Post a Comment