Wednesday, January 4, 2023

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்."(1அரு.3:13)

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்."
(1அரு.3:13)

"அண்ணாச்சி, உங்களைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக. இருக்கிறது.

 எப்போதும் மகிழ்ச்சியாக, சிரித்த முகத்தோடனே இருக்கிறீர்களே,

அது உங்களால் எப்படி முடிகிறது?"

"'நீங்கள் கேட்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

மகிழ்ச்சி இல்லாமல் வருத்தமாக இருப்பதற்குத்தான் காரணம் வேண்டும்.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு எதற்குக் காரணம்?"

"புரியவில்லை."

"'சவுளிக்கடையில் புதிதாக ஒரு வேட்டி எடுத்திருக்கிறீர்கள். அது எப்படி இருக்கும்?"

"சுத்தமாக இருக்கும்."

"'யாராவது புது வேட்டி ஏன் சுத்தமாக இருக்கிறது என்று கேட்பார்களா?

அழுக்கானால்தான் ஏன் அழுக்காயிற்று என்று கேட்பார்கள்.

ஒரு தம்ளரில் பால் ஊற்றி மேசையில் வைக்கிறீர்கள்.

யாராவது உங்களிடம்

"தம்ளரில் உள்ள பால் ஏன் சிந்தவில்லை என்று கேட்பார்களா?"

"கேட்டால் அவர்கள் பைத்தியமாக தான் இருக்க வேண்டும்.

சிந்தியிருந்தால் மட்டுமே,

" ஏன் சிந்தியது, எப்படிச் சிந்தியது?" என்று கேட்பார்கள்.

"'கடவுள் மனிதனை மகிழ்ச்சி உள்ளவனாகத்தான் படைத்தார்.

படைத்தபோது இருந்த மகிழ்ச்சி துக்கமாக மாறினால் தான்

 ஏன் மகிழ்ச்சி துக்கமாக மாறியது என்று கேட்க வேண்டும்.

மகிழ்ச்சியாக படைக்கப்பட்டவன்
மகிழ்ச்சியாக இருந்தால் 

"அது எப்படி?" என்று கேட்பவன்.."

"பைத்தியம் என்கிறீர்கள், "

"'நான் சொல்லவில்லை, நீங்க சொன்ன வார்த்தை.

நம்முடைய முதல் பெற்றோருக்கு இரண்டு பிள்ளைகள், காயின், ஆபேல்.

ஆபேல் நல்லவன். காயின் கெட்டவன்.

கெட்டவனாகிய காயின் நல்லவனாகிய ஆபேலைக் கொன்றான்.

கெட்டவன் நல்லவனை ஏன் கொன்றான் என்று கேள்வி கேட்கத் தேவையில்லை.

நல்லவர்களுக்கு தீங்கு விளைவிப்பது கெட்டவர்களுடைய இயல்பு.

முதல் நூற்றாண்டில் நற்செய்தியை அறிவித்து கொண்டிருந்த அப்போஸ்தலர்களை அக்காலத்திய மன்னர்கள் வெறுத்தார்கள்.

அப்போஸ்தலர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

நற்செய்தி அறிவிக்கும் பணியை ஒழுங்காக செய்தார்கள்.

அவர்களை வெறுத்த மன்னர்கள்
அவர்களைக் கொன்று போட்டார்கள்.

கொல்லும் போதும் அவர்கள் கவலைப்படவில்லை.

இயேசுவின் சீடர்கள் என்ற மகிழ்ச்சியுடன் மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

புனித அருளப்பர் சொல்கிறார்,

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்."

இவ்வுலகை சார்ந்தவர்கள் மறு உலகை சார்ந்து வாழ்பவர்களை வெறுப்பது  இயல்பு.

இவ்வுலகை சார்ந்தவர்கள் நம்மை வெறுக்கிறார்களே என்று

மறுவுலகிற்காக வாழ்பவர்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை.

தங்கள் கடமையை ஒழுங்காக செய்தால் போதுமானது."

"அண்ணாச்சி, நீங்கள் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று தான் கேட்டேன்.

அதற்கு இவ்வளவு விளக்கமா?"

"'அதற்கு இவ்வளவு விளக்கமில்லை.

என் மனதில் உள்ளதை சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்லிவிட்டேன்.
 அவ்வளவுதான்."

"அதாவது நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்,

 சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிவித்து விட வேண்டும்.

நான் கூட சில சமயங்களில் நினைப்பதுண்டு,

நம் நாட்டில் உள்ள ஒரு சிலருக்கு கிறிஸ்தவர்களை கண்டால் ஏன் பிடிப்பதில்லை என்று.

சமீபத்தில் கூட வட இந்தியாவில்
ரெய்ப்பூரில் உள்ள  நமது கோவிலுக்குள் ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் நுழைந்து

அங்குள்ள பொருட்கள் எல்லாம் உடைத்து நொறுக்கிப் போட்டிருக்கிறது.

நமது கோயில் அவர்களுக்கு என்ன தீங்கு செய்தது?

ஒரு தீங்கும் செய்யவில்லை.
அவர்கள் அவர்களது இயல்புப் படி இயங்கியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் உலக ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஆன்மீக ரீதியில் நமது ஆண்டவராகிய இயேசுவுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது.

அவர்கள் பாக்கியசாலிகள்.

இயேசு யூதர்களால் வெறுக்கப்பட்டார், அடிக்கப்பட்டார், உதைக்கப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.

அவருக்கு நேர்ந்தது தான் அவரை வழிபடும் இடமாகிய கோவிலுக்கு நேர்ந்திருக்கிறது.

அங்கு வழிபாடு செய்த மக்கள் பாக்கியவான்கள்.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தங்களை வெறுத்த மன்னர்களைப் பற்றி கவலை படவில்லை.

நற்செய்தியை அறிவித்தார்கள், அனுசரித்தார்கள்,

அதற்காக துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் இப்பொழுது விண்ணுலகில் நமது ஆண்டவர் இயேசுவுடன் நித்திய பேரின்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்."

"'நீங்க உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லி விட்டீர்கள்.

மிகுந்த மகிழ்ச்சி.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நமது கடமைகளை நாம் ஒழுங்காக செய்ய வேண்டும்.

நமது உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய அவசியம் இல்லை.

கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட உரிமையை யாராலும் பறிக்க முடியாது.

பறிக்க முயல்வோரால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நமக்கு விண்ணக நிலை வாழ்வை பெற்றுத்தரும்.

துன்பம் பேரின்பமாக மாறும்.

மரணம் நித்திய மோட்சத்திற்குள் அழைத்துச் செல்லும்.

உலகம் நம்மை வெறுக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம்.

நமது ஆண்டவரையும் அது வெறுத்தது,

இன்றும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்தும் ஆண்டவருடன் 

நமது கடமைகளை ஒழுங்காக செல்வோம்.

நற்செய்தியை அறிவிப்போம்.

நற்செய்தியை அனுசரிப்போம்.

நல்ல கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment