(எபி.12:6)
"ஐயா, வணக்கம்."
"'வணக்கம், உட்காருங்கள். நேற்று நடத்திய பாடத்தை வீட்டில் எல்லோரும் படித்துக் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
படிக்கும்போது ஏதாவது சந்தேகங்கள் வந்திருந்தால் இப்போது அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நான் கேள்வி கேட்பதற்கு முன் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் முதலில் கேளுங்கள்."
"சார், ஒரு சந்தேகம். "
"'கேளு."
"ஆசிரியர் என்றால் கட்டாயம் கையில் பிரம்பு வைத்திருக்க வேண்டுமா?"
"'கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
என் கையில் பிரம்பு இல்லையே. மேஜையின் மேல்தான் இருக்கிறது.
தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.
நாளை காலையில் நல்லொழுக்க வகுப்பில் .
பிரம்பின் பெருமைகளைப் பற்றி பேசலாம்."
மறுநாள்:
"'மகேஷ், எழுந்திரு. என் கையில் என்ன இருக்கிறது?"
"பிரம்பு, சார்."
"'நேற்று ஆசிரியர் என்றால் கட்டாயம் கையில் பிரம்பு வைத்திருக்க வேண்டுமா? என்று நீ கேட்டது ஞாபகத்தில் இருக்கிறதா?"
"இருக்கிறது, சார்."
"'எதற்காக என் கையில் பிரம்பு?"
"படிக்காதவர்களையும், சேட்டை செய்கிறவர்களையும் தண்டிப்பதற்கு."
"'தவறான பதில். யாருக்காவது சரியான பதில் தெரியுமா?"
"எல்லோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால் அடிபடுகிறோம்.
அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசிக் கொண்டிருந்தால் அடிபடுகிறோம்.
வகுப்புக்குப் பிந்தி வந்தால் அடிபடுகிறோம்.
பிரம்பை பார்த்தவுடன் பயமாக இருக்கிறது.
அதனால்தான் அதைத் தண்டிக்கும் கருவி என்று நினைக்கிறோம்."
"'பிரம்பு தண்டிக்கும் கருவி அல்ல. தவறு செய்கிறவர்களை திருத்தும் கருவி.
ஊசி போட்டால் வலிக்கிறது, நோயாளிகளைத் தண்டிப்பதற்காகவா மருத்துவர் ஊசி போடுகிறார்?"
''இல்லை, சார். நோயாளிகளைக் குணமாக்குவதற்காக ஊசி போடுகிறார்."
"தவறுகள் செய்வது ஆன்மா சம்பந்தப்பட்ட நோய்.
அந்த நோயிலிருந்து தவறு செய்தவர்களைக் குணமாக்கவே ஆசிரியர் வகுப்பில் பிரம்பைப் பயன்படுத்துகிறார்.
பிரம்பை எடுக்காதவன் பிள்ளையைப் பகைக்கிறான்.
பிரம்பை எடுப்பவன் பிள்ளையை நேசிக்கிறான்.
மாணவர்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்காகத் தான் ஆசிரியர் பிரம்பை பயன்படுத்துகிறார்.
ஆசிரியர் உங்களை அடிப்பதற்குக் காரணம் அவருக்கு உங்கள் மேல் உள்ள அன்பும், அக்கரையும்தான்.
உலகில் மனிதர்களுக்கு துன்பங்களும் நோய் நொடிகளும் வருவதற்கு காரணம் என்ன?
தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள்."
எல்லோரும் உயர்த்துகிறார்கள்.
"'ராஜ், என்ன காரணத்தினால் துன்பங்கள் வருகின்றன?"
"பிரம்பை பற்றி நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கும் போது,
கடவுள் மனிதர்களை திருத்துவதற்காகத் தான் துன்பங்களை அனுப்புகிறார் என்று நினைக்கிறேன்."
"'கடவுள் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக கட்டளைகளை கொடுத்திருக்கிறார்.
மனிதர்களுக்கு பரிபூரண சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்.
சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி மனிதர்கள் பாவம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக துன்பங்களை அனுப்புகிறார்.
நமக்கு துன்பங்கள் வரும்போது
அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு விரும்புவதற்கு முன்னால்,
தங்களை தாங்களே ஆன்மீக பரிசோதனை செய்ய வேண்டும்.
தாங்கள் செய்த பாவங்கள் நினைவுக்கு வந்தால் அவற்றுக்காக வருத்தப்பட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்."
"சார் நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றனவே.
நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டால் துன்பங்கள் போய்விடுமா?"
"'நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றன.
பாவமே செய்யாமல் வாழ்பவர்கள் தங்களுக்கு வரும் துன்பங்களை இறைவனுக்காக ஏற்றுக்கொண்டு அவருக்கு அவற்றை பலியாக ஒப்புக்கொடுத்தால்
விண்ணக வாழ்வில் அவர்களுடைய பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.
நம் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் கடவுள் நமக்கு துன்பங்களை அனுப்புகிறார்.
அவற்றைக் கொண்டு பாவிகள் மனம் திரும்ப வேண்டும்,
பரிசுத்தர்கள் தங்கள் விண்ணக வாழ்வின் பேரின்பத்தை அதிகரிக்க வேண்டும்.
துன்பங்கள் பாவிகளை மனம் திருப்பும்,
பரிசுத்தர்களை புனிதர்களாக மாற்றும்.
ஆகவே நமக்கு துன்பங்கள் வரும்போதெல்லாம் நாம் இறைவனது அன்பை நினைத்து அவருக்கு நமது நன்றியை கூற வேண்டும்.
துன்பங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.
எப்படி உலகியலில் மாதா மாதம் சம்பளம் வாங்குபவர்கள் தங்களுக்கு Bonus கிடைத்தால் மகிழ்கின்றார்களோ,
அதே போன்று தான் ஆன்மீகத்தில் நாம் நமக்கு வரும் துன்பங்களைக் கண்டு மகிழ வேண்டும்.
நமது துன்பங்களை நமது பாவங்களுக்கு பரிகாரமாக மட்டுமல்ல,
மற்றவர்கள் மனம் திரும்பவும் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
மோட்சத்தில் வாழும் புனிதர்கள் எல்லாம் உலகில் வாழும் போது துன்பங்களை அனுபவித்தவர்கள் தான்.
நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர் நமது ஆண்டவராகிய இயேசு.
அவர் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக வாழ்நாள் முழுவதும் துன்பங்களை அனுபவித்தார்.
நமக்காக துன்பங்களை அனுபவிப்பதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.
அதற்கு அவர் நம் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பே காரணம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment