Thursday, February 2, 2023

செல்லலாமா?

"கத்தோலிக்கர் கத்தோலிக்கர் அல்லாத பிரிவினை சபையாரின் செபக் கூட்டங்களுக்குப் போகலாமா?''

போய்?"

"செபிக்கலாமா?"

"'ஏன்? செபிப்பதற்கு நமது ஆலயங்கள் இல்லையா? நம்மவர்கள் கூட்டங்கள் நடத்தவில்லையா?"

"அவர்கள் ஆட்டம் பாட்டத்தோடு செபிப்பது நம்மவர்கள் செபிப்பதைவிட அதிக கவர்ச்சிகரமாக உள்ளது."

"'உங்கள் அம்மா சமைப்பதை விட பக்கத்து வீட்டு அம்மா சமைப்பது ருசியாக இருந்தால் உங்கள் வீட்டை விட்டு பக்கத்து வீட்டுக்குப் போவீர்களா?

அப்படிப் போனால் உங்கள் அம்மா மகிழ்ச்சி அடைவார்களா?"

''மகிழ்ச்சி அடைவார்களோ இல்லையோ, நன்றாக சமைக்க கற்றுக் கொள்வார்கள்.

மற்றவர்களைப் பார்த்து நம்மவர்களும் ஆட்டம் பாட்டத்தோடு செபிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே, நீங்கள் கவனிக்கவில்லையா?"

"'அது நீங்கள் மற்ற சபையினர் நடத்தும் ஜெபக்கூட்டங்களுக்குப் போவதைத் தடுப்பதற்காக.

அது உங்களுக்கு புரியவில்லையா?"

"அவர்களை ஏன் மற்றவர்கள் என்கிறீர்கள்?  அவர்களும் இயேசுவைத் தானே தங்கள் மீட்பராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்."

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
( மத்.12:30)
என்று இயேசு சொன்னது உங்களுக்கு தெரியுமா?"

''தெரியுமே.

அவர்களும் இயேசுவோடு தானே இருக்கிறார்கள்.

அவருக்கு எதிரிகளாக இல்லையே."

"'தந்தையோடு அவர் இருக்கும் வீட்டில் தங்காமல் தனியாகச் சென்று இருப்பவர்களை

எப்படி தந்தையோடு இருப்பதாக சொல்லலாம்?

இயேசு இராயப்பர் என்ற பாறையின் மீது கட்டிய வீடு எது?"

"கத்தோலிக்கத் திருச்சபை."

"'ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க  திருச்சபை.

அது தலைவர் இராயப்பரின் வாரிசாகிய பாப்பரசர்.

பாப்பரசரைத் தலைவராக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் கத்தோலிக்க திருச்சபை தான் இயேசு தன்னை பின்பற்றுபவர்களுக்காக கட்டிய வீடு.

அங்கு இருப்பவர்கள் தான் இயேசுவோடு இருக்கிறார்கள்.

அந்த வீட்டை விட்டு வெளியேறியவர்கள் இயேசுவை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

அதாவது இயேசுவோடு இல்லை.

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்."

என்று இயேசு சொன்னதைத் திரும்பவும் ஞாபகப்படுத்துகிறேன்."

"அவர்கள் இயேசுவை மட்டுமே வழிபடுகிறார்கள்,

அவர் பெயரால் வியாதிகளை குணமாக்குகிறார்கள்,

அவர் பெயரால் பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்களின் கடன் தொல்லைகளை நீக்குகிறார்கள்."

"' எந்த இயேசுவின் பெயரால்?

நமது பாவங்களை மன்னிப்பதற்காக தன்னைத் தானே கல்வாரி மலையில் சிலுவையில் பலியாக்கிய,

தன்னுடைய குருக்கள் மூலம் நமது பாவங்களை மன்னிக்கின்ற,

திவ்ய நற்கருணையில் இன்றும்  நம்மோடு வாழ்கின்ற,

திவ்ய நற்கருணை மூலம் தன்னையே நமக்கு உணவாக தருகின்ற இயேசுவை வழிபடுகிறார்களா?

வேறு வார்த்தைகளில்,

அவர்கள் கிறிஸ்து உலகெங்கும்  நற்செய்தியை அறிவிக்க அனுப்பிய அப்போஸ்தலர்களின் நேரடி வாரிசுகளா?

அவர்கள் திருப்பலி நிறைவேற்றுகிறார்களா?

பாவ சங்கீர்த்தன மூலம் மக்களது பாவங்களை மன்னிக்கிறார்களா?

திவ்ய நற்கருணையை மக்களுக்கு உணவாகத் தருகிறார்களா?

அவர்களது ஆலயங்களில் திவ்ய நற்கருணை பேழையில் இயேசு  ஆண்டவர் எப்போதும் வாழ்கிறாரா?"

"அங்கு செப வழிபாடு நடத்துகிறவர்கள் அப்போஸ்தலர்களின் நேரடி  வாரிசுகள் இல்லை என்பது எனக்கு தெரியும்.

அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவது இல்லை என்பது எனக்குத் தெரியும்.

பாவ சங்கீர்த்தனமூலம்  அவர்களால் பாவ மன்னிப்பு அளிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

இயேசு மெய்யாகவே வாழும் திவ்ய நற்கருணை அவர்களிடம் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.

நானும் ஒரு கத்தோலிக்கன்தான்.

நமது ஆலயத்தில் திருப்பலியில் கலந்து கொள்கிறேன்,

திவ்ய நற்கருணை உட்கொள்கிறேன்,

பாவ சங்கீர்த்தனம் செய்கிறேன்.

செப வழிபாட்டுக்கு மட்டும்தான் பிரிவினை சபையார் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்கிறேன்.

வீட்டில் சாப்பிடுபவன் ஹோட்டலில் சாப்பிடக்கூடாதா?"

"'ஹோட்டல் சாப்பாடு உடலுக்குக் கெடுதி என்பது தெரியாதா?"

"Ecumenism என்ற பெயரில் நமது குருக்களே பிரிவினை சபையாரோடு கூட்டங்களை நடத்துகிறார்களே, நீங்கள் கவனிக்கவில்லையா."

"'ஏறக்குறைய 40,000 பிரிவினை சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரே மெய்ப்பன், ஒரே மந்தை என்பதுதான் கத்தோலிக்கத்தின் நோக்கம்.

பிரிவினை சபையாரை கத்தோலிக்க திருச்சபையை ஏற்றுக்கொள்ளச் செய்து,

அவர்களைக்  கத்தோலிக்கத் திருச்சபைக்குள் கொண்டு வருவது தான் Ecumenismன் நோக்கம்.

அந்த நோக்கம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது,

முழு வெற்றியை எப்போது பெறும் என்பதெல்லாம் இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

கத்தோலிக்கத் திருச்சபையின் நோக்கம் முழு வெற்றி பெற இறைவனிடம் வேண்டுவோம்.


பிரிவினை சபையார் கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொண்டுள்ள விசுவாச சத்தியங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நீங்கள் தொடர்ந்து அவர்களது செபக் கூட்டங்களுக்குச் சென்றால்,

அவர்களது நச்சுக் கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குள்ளும் ஏற்றி விடுவார்கள்.

அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான்

கத்தோலிக்கர்கள் பிரிவினை சபையார் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது.

நான் மற்றவர்களுக்குத் 

துர்மாதிரிகையாய் இருக்கக் கூடாது."

"நீங்கள் சொல்வது புரிகிறது. இனி பிரிவினை சபையார் நடத்தும் செபக் கூட்டங்களுக்குச் செல்ல மாட்டேன்."

"' நன்றி.''

லூர்து செல்வம்

No comments:

Post a Comment