Friday, February 24, 2023

அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்."(லூக்.5:28)

"அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்."
(லூக்.5:28)

"இயேசு சுங்கத் துறையில் அமர்ந்திருந்த லேவி என்ற ஆயக்காரனைக் கண்டு, "என்னைப் பின் செல்" என்றார்.

 அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்."

இறைமகன் மனு மகனாய்ப் பிறந்தது மனிதர்களின் ஆன்மீக விடுதலைக்காக,

அரசியல்  விடுதலைக்காக அல்ல.

தான் பிறப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த இஸ்ராயேல் குலத்தை அந்நியர்கள் அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தியபோது 

அவர் அதைத் தடுக்கவில்லை.

இஸ்ராயேல் குலத் தந்தையாகிய யாக்கோபு வாழ்ந்து வந்தது கானான் நாட்டில்தான்.

அவர் அவரது மக்களோடு எகிப்தில் குடியேறிய போது கடவுள் அவர்களைத் 
தடுக்கவில்லை.

அவர்கள் அங்கு அடிமைப் படுத்தப்பட்டபோது மோயீசன் மூலம் அவர்களை விடுவித்து 

திரும்பவும் கானான் நாட்டிற்கே அழைத்து வந்தார்.

அவர்கள் அங்கே வாழ்ந்த போதும் பிற நாட்டவரால் அடிமைப் படுத்தப்பட்ட போதும் அதையும் அவர் தடுக்கவில்லை.

அவர்களது விடுதலைக்காக மெசியாவை அனுப்பப் போவதாக கடவுள் இறைவார்கினர்கள் மூலம் வாக்களித்தார்.

மெசியா தங்களுக்கு அந்நியர் களிடமிருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெற்றுத்தருவார் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.

மெசியா பிறந்த போது அவரால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் ரோமர்களின் அடிமைத் தனத்தில்தான் வாழ்ந்தார்கள்.

அந்த வகையில் இயேசுவும் ரோமர்களின் அடிமைத் தனத்தில்தான் பிறந்தார்.

ஆனால் தம் மக்களின் அரசியல் விடுதலைக்காக எதுவும் செய்யவில்லை.

ஏனெனில் அவர் பிறந்தது அனைத்துலக மக்களின் ஆன்மீக விடுதலைக்காக.

அவர் தன்னைச் சீடராகப் பின் பற்றும் படி அழைத்த லேவி (மத்தேயு) ரோமையர்களின் பணியாள்.

யூதர்களிடம் வரி வசூலித்து ரோமை அரசுக்குக் கட்டுபவர். 

இயேசு அவரை நோக்கி,

"என்னைப் பின்செல்"  

என்று சொன்னபோது

அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்.

நாம் வாழும் தவக் காலத்தில்
நாம் நாம் செய்ய வேண்டியதும் இதுதான்.

(நமது வாழ்வே தவம் செய்ய வேண்டிய காலம் தான்)

இயேசுவுக்காக ஆன்மீக வாழ்வு வாழ இந்த உலகத்தைச் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வில் இறைவனது கட்டளைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்,

இந்த உலகைச் சார்ந்த எதற்கும் நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

இவ்வுலகப் பற்றை முற்றிலும் விட்டால் தான் நம்மிடம் இறைப்பற்று வளர முடியும்.

இறைப்பற்று, 
இரைப்பற்று அல்ல.

இரைப்பற்று இருப்பவர்களிடம் 
இறைப்பற்று இருக்க முடியாது.

ஆகவேதான் நாம் நோன்பு இருக்க வேண்டும் என்று இறைவன் நம்மை வலியுறுத்துகிறார்.

வெள்ளிக்கிழமைகளில் உணவை ஒறுப்பதினால் மட்டும் நாம் நோன்பு இருக்கவில்லை.

மறுவுலக வாழ்வுக்காக இவ்வுலகைச் சார்ந்த அனைத்து ஆசைகளையும் விட்டொழிப்பதில்தான் 

உண்மையான நோன்பு இருக்கிறது.

TV யில் Serial பார்ப்பது, திரைப் படம் பார்ப்பது, நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்வது, அரட்டைபடிப்பது போன்ற ஆன்மீகத்துக்கு உதவாத காரியங்களை விட்டு விடுவது நமது ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது.

நமது ஐம்பொறிகளுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய சில காரியங்கள் பாவம் அற்றவைகளாக இருந்தாலும்,

அவற்றை ஆண்டவருக்காக தியாகம் செய்யும்போது புண்ணியம் சார்ந்த காரியங்களாக மாறி விடுகின்றன.

YouTube க்குள் சென்று ஒரு பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை வரும்போது,

அந்த ஆசையை அடக்கி,

அந்நிடங்களில் மனவல்லப ஒருவரி செபங்கள் சொல்லிக் கொண்டிருந்தால்

ஒரு பைசா செலவில்லாமல் நாம் விண்ணக வாழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்போம்.

ஒரு நாளைக்கு நாம் குடிக்கும் நான்கு கப் டீயில் ஒரு கப்பைத் தியாகம் செய்வதால் நமக்கு நட்டம் ஒன்றும் வந்து விடாது,

ஆனால் அளவிட முடியாத ஆன்மீக நலன் நம்மை வந்தடையும்,

ஆன்மீகம் சாராத அனைத்தையும் தியாகம் செய்து ஆன்மீக வாழ்வில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment