Monday, February 20, 2023

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)

 "மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)

"தாத்தா, இன்று உங்களிடம் கேள்விகள் எதுவும் கேட்கப் போவதில்லை."

"'ரொம்ப சந்தோசம்."

"ரொம்ப சந்தோசப் பட்டு விடாதீர்கள்.

கேள்விகள் கேட்கப் போவதில்லை என்று தான் சொன்னேன்.

ஒன்றுமே கேட்க போவதில்லை
 என்று நான் சொல்லவில்லை.

தாத்தா என்று சொல்லும்போதே இரண்டு முறை கேட்டு விட்டேனே!"

"'எதற்காக இந்த முன்னுரை?" 

"நான் ஒரு புத்தகம் வாசித்தேன்.

அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை எனக்குப் புரியவில்லை.

அதைப் புரிந்துதானோ என்னமோ ஆசிரியர்,

 "புத்தகத்தை முழுவதும் 
வாசியுங்கள்.

 முன்னுரை புரியும் என்று முன்னுரையை முடித்திருந்தார்.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதாவது நம்மைப் பற்றி கடவுள் எழுதிய புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?"

"'புத்தகத்தை முழுவதும் வாசித்த பிறகு தான் முன்னுரையே புரியும் என்று சொல்லிவிட்டாய்.

ஆகவே இப்போது "புரிகிறதா?" என்று நீ கேட்பது தவறு."

"நமது வாழ்க்கை என்னும் புத்தகத்தின் முன்னுரையைக் கூறுங்கள்."

'"கடவுள் 

அவரை அறிந்து, 

அவரை அன்பு செய்து,

 அவருக்காக வாழ்ந்து 

அவரோடு நித்திய காலம் விண்ணகத்தில் வாழ்வதற்காக

 நம்மை இவ்வுலகில் படைத்தார் படைத்தார்."

"அதாவது கடவுள் நம்மை படைத்தது 

அவரைப் பற்றி அறிய,

 அவரை நேசிக்க,

 அவருக்காக வாழ, 

அவரோடு நித்திய காலம் வாழ. 

நாம் படைக்கப்படுமுன் ஒன்றுமில்லாமையாக இருந்தோம்.

ஒன்றுமில்லாமல் இருந்த நம்மை ஏன் அவருக்காக படைத்தார் என்பது உங்களுக்குப் புரிகிறதா?"

"'அதை நீ ஏற்கனவே சொல்லிவிட்டாய்,

 நமது வாழ்வின் முடிவில் தான் அது புரியும் என்று.

 இப்போது அதை என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?

நான் இன்னும் வாழ்ந்து முடிக்கவில்லையே!"

"தாத்தா, முள் குத்தினால் வலிக்கும் என்று நமது அனுபவத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியாதா?

நமக்கு முன் பிறந்து, வாழ்ந்து, விண்ணகம் சென்றுவிட்ட புனிதர்களைப் பற்றி நிறைய வாசித்திருக்கின்றோமே.

 அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாமே."

"'இவ்வுலகில் பிறந்து கடவுளுக்காகவே வாழ்ந்த புனிதர்கள் இப்போது கடவுளோடு நித்திய பேரின்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

''அப்படியானால் நாமும் அவரோடு நித்தியமாக பேரின்ப வாழ்க்கை வாழ்வதற்காகவே நம்மை படைத்தார்.

அதாவது நமது பேரின்ப வாழ்க்கைக்காக நம்மை படைத்தார்."

"'அப்போ நம்மை அவருக்காக படைக்கவில்லையா?" 

"அவருக்காக வாழ்ந்து, அவரோடு 'நாம் வாழ' நம்மை படைத்தார்.

தாத்தா இவ்வுலகில் அவருக்காக வாழப்போவது குறுகிய காலம்தான்.

ஆனால் அவரோடு நாம் பேரின்பத்தில் வாழப்போவது நித்திய காலம்.

இதன் அடிப்படை என்ன?"

"'நீயே சொல்லிவிடு."

"கடவுள் நம் மீது வைத்திருக்கும் நிபந்தனை அற்ற அன்பு தான் இதன் அடிப்படை.

(God's unconditional love for us.)

கடவுள் தன்னிலே நிறைவானவர்.

(By nature God is perfect.)

 நிறைவை அதிக நிறைவாக முடியாது.

(Perfection cannot be made more perfect.)

ஆகவே அவரது நன்மைக்காக நம்மை படைக்கவில்லை.

அவரது தன்னிகரற்ற அன்பின் காரணமாக நமது நன்மைக்காகவே நம்மை அவரது சாயலில் படைத்தார்."

"'அப்படியானால் நம்மை ஏன் அவருக்காக வாழச் சொன்னார்?"

"தாத்தா, கிணறு நிறைய தண்ணீர் இருக்கிறது.

 நமது கையில் ஒரு தம்ளர் இருக்கிறது, அதற்குள் ஒன்றுமே இல்லை.

 ஒன்றுமே இல்லாத தம்ளருக்குள் தண்ணீரைக் கொண்டு வர நாம் என்ன செய்ய வேண்டும்?"

"'நமது வெற்றுத் தம்ளரை கிணற்றுக்குள் முக்கி எடுத்தால் அதற்குள்ளும் தண்ணீர் வந்து விடும்."

"இந்த தத்துவம் தான் நாம் கடவுளுக்காக வாழ வேண்டியதன் தத்துவம்.

நாம் ஒன்றும் இல்லாதவர்கள்.

கடவுள் எல்லாவித நன்மையும் அளவில்லாத விதமாய் கொண்டிருப்பவர்.

அளவற்ற அன்பு, அளவற்ற இரக்கம், அளவற்ற நீதி அளவற்ற வல்லமை .... இப்படியாக எல்லா பண்புகளிலும் அளவற்றவர்.

அன்பு, இரக்கம், நீதி போன்ற அவரது பண்புகளோடு நாமும் வாழ்ந்து

நாம் பெற்றுள்ள அவரது சாயலை பழுதின்றி காப்பாற்ற 
 வேண்டும் என்பதற்காகத்தான்

 நாம் அவருக்காக, அவருக்குள் வாழ வேண்டும் என்று நம்மைக் கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்காகத்தான் நாம் இவ்வுலகில்

 கடவுளை அறிய வேண்டும்,

 அவரை நேசிக்க வேண்டும்,

 அவருக்காக வாழ வேண்டும்.

இவ்வுலகில் அவரை மையமாக வைத்து வாழ்ந்தால்

மறுவுலகிலும் அவரை மையமாக வைத்து பேரின்ப வாழ்வு வாழ்வோம்."

"'வெற்றுத் தம்ளருக்குள் தண்ணீர் வர 

அதை முழுமையாக கிணற்றுக்குள் முக்கி எடுப்பது போல,

 நாம் இறைவனோடு நித்தியகாலம் ஒன்றிக்க,

அவர் நம்மோடு பகிர்ந்துள்ள அவரது பண்புகளில் முழுமையாக வாழ 

 இவ்வுலகில் நம்மை முழுவதும் அவருக்குள் முக்கி எடுக்க வேண்டும். 

நாம் அவருக்குள் வாழ்ந்தால்தான் அவரது அன்பு நமக்குள் நிறைய இருக்கும்.

அந்த அன்பு தான் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

இவ்வுலகில் முழுக்க முழுக்க கடவுளுக்காக வாழ்ந்தால் தான், மறு உலகில் முழுக்க முழுக்க கடவுளோடு வாழ்வோம்.

இவ்வுலகில் முழுக்க முழுக்க நமக்காக, நமது பெருமைக்காக, வாழ்ந்தால் விண்ணுலகில் கிடைக்க வேண்டிய பேரின்பம் கிடைக்காது.

கடவுளை அன்பு செய்ய வேண்டும், அவருக்காக.

நமது அயலானை அன்பு செய்ய வேண்டும், கடவுளுக்காக.

நமது அயலானுக்கு உதவி செய்ய வேண்டும், கடவுளுக்காக.

நாம் நோன்பு இருக்க வேண்டும், கடவுளுக்காக.

நமது தற்பெருமைக்காக நாம் எதையும் செய்யக்கூடாது.


இயேசு சொல்கிறார்,

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."

நாம் நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

அவற்றை செய்யும் போது மற்றவர்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.

மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் தானே நற்செயல்கள்.

ஆனால் அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நற்செயல்களைச் செய்யக்கூடாது.

நாம் நற்செயல்கள் செய்வதை மற்றவர்கள் பார்க்கும்போது

 யாருக்காக அவற்றை செய்கிறோமோ 

அவரை பற்றி அறிய மற்றவர்கள் ஆசைப்படுவார்கள்.

அதாவது நமது நற்செயல்களில் இயேசு பிரதிபலிக்க வேண்டும்.

நாம் இயேசுவுக்காக வாழும் போது மற்றவர்கள் நம்மை பார்த்து இயேசுவுக்காக வாழ்வார்கள்.

செயலை விட நோக்கம் தான் முக்கியம்.

நோக்கம் தவறாக இருந்தால் செயல் மதிப்பை இழந்து விடும்.

பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக நாம் நற்செயல் செய்தால் 

உண்மையில் அது நற்செயல் அல்ல, வெறும் செயல்."

.(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment