Sunday, February 12, 2023

"போ பின்னாலே, சாத்தானே.''(மத்.16:23)

"போ பின்னாலே, சாத்தானே.''
(மத்.16:23)

இயேசு தனது சீடர்களிடம், 

"மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?"

என்று கேட்டபின்,

"நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" என்று  கேட்டார்.

இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.

அதற்கு இயேசு, 

"யோனாவின் மகன் சீமோனே,

 நீ பேறுபெற்றவன். 

ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று,

 வானகத்திலுள்ள என் தந்தையே.

மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்.

 உன் பெயர் "பாறை." 

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."

என்று அவரைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

இந்த வார்த்தைகளின் மூலம் இராயப்பர்தான் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் படவிருக்கும் செய்தியை இயேசு தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து,

தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதையும் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழப்போவதையும் தெரிவித்தார்.

இராயப்பருக்கு இயேசுவின் மேல் பாசம் அதிகம். தனது பாசத்துக்கு உரியவர் கஷ்டப்பட போவதை அவர் விரும்பவில்லை. 

ஆகவே இயேசுவைப் பார்த்து 

 பாடுகள் பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இது அன்பின் மிகுதியால் கேட்டுக்கொண்டது.

ஆனாலும் அது இறைவனுடைய சித்தத்திற்கு எதிரானது.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மனிதனாகப் பிறந்த இயேசு,
   
இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய்." என்றார்.

எந்த அளவுக்கு இயேசு தனது தந்தையையும், மனுக் குலத்தையும் நேசிக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

 இராயப்பர் இயேசுவைப் மெசியா என்று கூறிய போது அவரைப் பற்றி பெருமையாக பேசிய இயேசு,

அவர் பாடுகள் பட வேண்டாம் என்று சொன்னபோது அவரை "சாத்தானே" என்று அழைத்தார்.

மனிதர்களை பாவத்தில் விழத் தாட்டிய சாத்தான்தான் அவர்கள் மீட்பு பெறுவதை விரும்பாது.

ஆகவேதான் பாடுகளை விரும்பாத இராயப்பரை இயேசு சாத்தானே என்று அழைத்தார்.

இது இயேசுவுக்கும், இராயப்பருக்கும் இடையே நடந்த உரையாடல்..

ஆனாலும் இயேசு யாரோடு பேசினாலும் அந்த இடத்தில் நம்மையும் வைத்து 

 அவர் பேசிய வார்த்தைகள் நமக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை தியானிக்க வேண்டும்.

 எதிரிகளை நேசியுங்கள் என்று அவர் காலத்தில் அவரைப் பின் தொடர்ந்த மக்களை மட்டும் பார்த்து சொல்லவில்லை.

அவரது வார்த்தைகளை வாசிக்கும் நம் ஒவ்வொருவரை பார்த்தும் சொல்கிறார்.

இராயப்பரிடத்தில் நம்மை வைத்துக்கொண்டு இயேசுவின் வார்த்தைகளை தியானிப்போம்.

இயேசு தான் பாடுகள் படப்போவதைப் பற்றி சொல்லும் போது இராயப்பர் பேசிய வார்த்தைகளை வாசித்தோம்.

நம்மையும் உள்ளடக்கி இயேசு பேசிய வார்த்தைகள்,

"தன்னுடைய சிலுவையை சுமந்து கொண்டு என் பின்னே வராதவன் என்னுடைய சீடனாக இருக்க முடியாது."

இது இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பும் அனைவருக்கும் பொருந்தும்.

நமது சிலுவையைச் சுமந்து இயேசுவின் நடக்க வேண்டும் என்பது இயேசுவின் சித்தம்.

சிலுவையைச் சுமந்து,
 அதில் அறையப்பட்டு
 மரிக்கவிருப்பதைத்தான் இயேசு பாடுகள் என்று அழைத்தார்.

தாயைப் போல பிள்ளை. குருவைப் போல சீடன்.

சிலுவையை சுமப்பது பற்றி இயேசு கூறிய வார்த்தைகளைப் பொருள்படுத்தாமல்,

நாம் நமது சிலுவையை சுமக்க விரும்பாவிட்டால்,

இயேசுவின் வார்த்தைகளின்படி

நாம் யார்?

இராயப்பருக்குக் கிடைத்த அதே பட்டம்தான் நமக்கும் கிடைக்கும், 

சாத்தான், சிலுவைக்கு எதிரி.

நிச்சயமாக அந்த பட்டத்திற்கு நாம் ஆசைப்பட மாட்டோம்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்.

நமக்கு சிலுவைகள் வரும் போது அவற்றை வேண்டாம் என்று சொல்லாமல் 

முழு மனதோடு அவற்றை ஏற்று இயேசுவுக்காக சுமக்க வேண்டும்.

நமக்கு வரும் துன்பங்கள் தான் நாம் சுமக்க வேண்டிய சிலுவைகள்.

நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தது இயேசு சுமந்த சிலுவை.

அதைப் பெற நமக்கு உதவும் நாம் சுமக்கும் சிலுவை

துன்பங்கள் வரும்போது அவற்றை ஏற்றுக் கொள்கிறோமா,

'அல்லது அவற்றிலிருந்து நமக்கு விடுதலை தரும்படி

சிலுவையை அனுமதித்த இயேசுவையே கேட்கிறோமா?

அதற்குரிய விடையை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

புனித பிரான்சிஸ் அசிசி சிலுவை மீது மட்டற்ற பற்று வைத்திருந்தார்.

அதற்குற்குப் பரிசாக நம் ஆண்டவர் சிலுவையில் பெற்ற ஐந்து திருக்காயங்களையும் அவருக்குக் கொடுத்தார்.


அன்னை மரியாள் முதல் 
 அனைத்து புனிதர்களும் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவின் பின் சென்றவர்கள் தான்.

இயேசுவின் பின் செல்ல விரும்பும் நாமும் 

நமக்கு வரும் சிலுவைகளை ஏற்று 

சுமந்து 

இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment