Thursday, February 23, 2023

"மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா?"(இசை.58:5)

"மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா?"
(இசை.58:5) 

"தாத்தா, தவக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்  நோன்பு இருக்க வேண்டும் என்று சாமியார் சொன்னார்.

நோன்பு நாட்களில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு விட்டு

மீதி நேரமெல்லாம் எதுவும் சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சாப்பிடாமல் இருப்பதுதான் நோன்பு என்றால் 

உணவு கிடைக்காமல் சாப்பிடாமல் இருப்பவர்கள் எல்லாம் நோன்பு இருக்கிறார்களா? அவர்களது பட்டினி தவ முயற்சியா?"

"'மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்குப் போகிறார்கள்.

பள்ளிக் கூடத்துக்குப் போகிறவர்கள் எல்லாம் மாணவர்களா?"

"இல்லை. ஆசிரியர்களும் பள்ளிக் கூடத்துக்குப் போகிறார்களே."

"'அது போல் தான் நோன்பு இருப்பவர்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.

ஆனால் சாப்பிடாமல் இருப்பவர்கள் எல்லாம் நோன்பு இருக்கவில்லை.

சாப்பிட எதுவும் கிடைக்காதவர்களை மட்டும் நான் சொல்லவில்லை.

 நோன்பு இருப்பதற்காகவே சாப்பிடாமல் இருப்பவர்களில் கூட அநேகர் நோன்பு இருக்கவில்லை."

''புரியவில்லை."

'''நோன்பு ஒரு தவ முயற்சி, இறைவனுக்குப் பிடித்தமான செயல்.

ஒரு செயல் இறைவனுக்குப் பிடித்தமான செயலாக இருக்க வேண்டுமென்றால் 

இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற இரண்டு கட்டளைகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்,   

எதிராக இருந்துவிடக் கூடாது.

அதாவது இறைவனை அன்பு செய் என்ற கட்டளைக்கும், 

உனது பிறனை அன்பு செய் என்ற கட்டளைக்கும்

ஏற்றதாக இருக்க வேண்டும்.

இறையன்புக்கும், பிறரன்புக்கும் எதிரான எந்த செயலும் நற்செயல் அல்ல.

நாம் இருக்கும் நோன்பு இறைவனுக்காகவும், பிறனுக்காகவும் இருந்தால் மட்டுமே அது உண்மையான  நோன்பு."

"பிறனுக்காக நோன்பு என்றால் எப்படி?"

"'நீ இன்று நோன்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டு நேர சாப்பாட்டை நீ முற்றிலும் ஒறுத்து விட்டால் உனக்கு எவ்வளவு மிச்சமாகும்?"

"50 + 50,  தின்பண்டங்கள் சாப்பிடாமல் இருந்தால்  40 

ஆக 140 ரூபாய் மிச்சமாகும்."

"' அதை என்ன செய்வாய்?"

"வேறு செலவுக்கு வைத்துக் கொள்வேன்."

"'அப்படியானால் நீ எதையும் ஒறுக்கவில்லை.

மொத்த ரூபாயையும் நீயே உனக்காகவே செலவழித்து விட்டாயே."

"இரண்டு நேர சாப்பாட்டை 
ஒறுத்திருக்கிறேனே."

'''சாப்பாட்டுச் செலவைக் குறைத்து   சட்டை வாங்கியிருப்பாய்.

இதில் ஒறுத்தல் எங்கே இருக்கிறது?"

"அப்போ நான் என்ன செய்ய வேண்டும்?"

"'சாப்பாட்டில் பிடித்த மிச்சத்தை சாப்பிட எதுவும் கிடைக்காத ஒரு ஏழை அயலானுக்கு கொடுத்து உதவ வேண்டும்.

இப்படி செய்தால் இறைவனுக்கும் திருப்தி, உனது அயலானுக்கும் திருப்தி.

இறைவனையும்  அயலானையும்
திருப்திப் படுத்தும் செயலே நற்செயல்.

தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது மட்டும் நோன்பு அல்ல.

"மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா?

பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு,

 ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு:

 ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து:

 உன் இனத்தானை அவமதிக்காதே: 

இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு?

அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்: 

பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து,

 துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால்,

 உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும்,

 உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும்."

என்று ஆண்டவர் இசையாஸ் இறைவாக்கினர் மூலமாக நமக்குச்  சொல்கிறார்."

"அப்போ நம்மிடம் இருப்பதை நமது அயலானோடு பகிர்ந்து கொள்வது தான் தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய நோன்பு என்கிறீர்கள். சரியா?"

"'40 நாட்கள் கொண்ட தவக்காலத்தில் மட்டுமல்ல,

நமது வாழ்க்கை முழுவதுமாக தவக்காலத்திலும் இப்படித்தான் செய்ய வேண்டும்.

குருவை போலத் தானே சீடனும் இருக்க வேண்டும்.

நாம் இறை மகன் இயேசுவின் சீடர்கள்.

இயேசு எதற்காக நம்மை படைத்தார்?

அன்பு முதலிட்ட தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தானே.

விண்ணுலக வாழ்வையும் நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தானே 

அவர் நம்மைப் போல மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.''

"இப்போ நன்கு புரிகிறது.

இல்லாமையை இல்லாமையாக்க இருப்பதைப் பகிர்ந்து வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment