(மாற்கு.9:5)
இயேசு இராயப்பரையும், யாகப்பரையும், அருளப்பரையும் அழைத்துக் கொண்டு ஒரு மலை மேல் ஏறுகிறார்.
அவர்கள் முன் உருமாறுகிறார்.
அவரோடு மோயீசனும்,
எலியாசும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இராயப்பர் இயேசுவைப் பார்த்து,
"நாம் இங்கே இருப்பது,
எத்துணை நன்று.
உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்."
இராயப்பர் நாம் இங்கே இருப்பது நன்று என்கிறார்.
'நாம்' என்றால் எத்தனை பேர்?
ஆறுபேர்.
அமைக்க ஆசைப்படுவது மூன்று கூடாரங்கள்.
ஆண்டவருக்கும், எலியாசுக்கும்,
மோயீசனுக்கும் மட்டும்.
தாங்கள் எங்கே தங்குவது என்பதைப் பற்றி அவர் கவலைப் படவேயில்லை.
இதற்குப் பெயர்தான்
தன்னலமற்ற அன்பு.
அதிகமான அன்பு சில சமயங்களில் தான் நேசிக்கும் ஆளை பற்றி மட்டுமே கவலைப்படும்,
மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாது.
ஆண்டவரை இராயப்பர் அதிகம் நேசிக்கிறார். அவருக்கு ஒரு கூடாரம்.
அவரால் நேசிக்கப்படும் மற்ற இருவருக்கும் ஆளுக்கு ஒரு கூடாரம்.
எதைப் பற்றி கவலைப்படவில்லை?
மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஆளுக்கொரு கூடாரத்தில் தங்கினால் எப்படி பேசிக் கொண்டிருக்க முடியும்?
மூவரும் ஒரே கூடாரத்தில் தங்கினால் தானே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்க முடியும்!
அதைப் பற்றி கவலைப்பட இராயப்பருக்கு நேரமில்லை.
இராயப்பர் கணக்கில் weak ஆ?
சிந்திப்பதில் weak ஆ?
தெரியவில்லை.
ஆனால் அன்பில் Strong.
அது உறுதியாகத் தெரிகிறது.
அந்த அதிகமான அன்பின் காரணமாகத்தான் தந்தை இறைவன்
"இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்"
என்ற தனது செய்தியை அவர்களுக்குக் கொடுக்கிறார்.
கடவுள் நல்ல தந்தை.
தன்னை நேசிக்கின்றவர்களின்
weak points களை கடவுள் பெரிது படுத்த மாட்டார்,
அன்பை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களை ஆசீர்வதிப்பார்.
நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்திருக்கும் ஒரே கட்டளை "அன்பு செய்."
கடவுள் செய்கின்ற ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.
மற்ற வேலைகள் எல்லாம் அன்புக்குள் அடங்குபவை.
நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.
நம்மைப் படைத்த இறைவனையும்,
அவரால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களையும்
அன்பு செய்ய வேண்டியது மட்டுமே நமது பணி.
புனித அகுஸ்தீனார் சொல்கிறார்:
நேசி, இஷ்டம் போல் செயல்படு.
Love, and do what you like.
அன்பு செய்து கொண்டு நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.
"எப்படி வேண்டுமானாலும் வாழலாம்." என்று சொன்னவுடனே
"பாவம் செய்தும் வாழலாமோ?"
என்று கேட்கத் தோன்றும்.
ஆனால் கடவுளை அன்பு செய்து கொண்டே பாவம் செய்யவும் முடியாதே!
இறையன்பும், பிறர் அன்பும் அனுமதிக்கும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
இயேசுவின் சீடர்களாகிய நாம்
அவரது விருப்பப்படி மீட்புப் பெற வேண்டுமென்றால்
நாம் செய்ய வேண்டியது எல்லாம்
விசுவசிக்க வேண்டும்,
விசுவாசத்தின் படி வாழ வேண்டும்.
எதை விசுவசிக்க வேண்டும்?
கடவுள் அன்பு நிறைந்த தந்தை என்பதை விசுவசிக்க வேண்டும்.
விசுவசித்தபடி அன்புள்ள தந்தைக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.
பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தேவ சாஸ்திரம் படித்த அறிஞர்களாக இருந்தாலும்,
சின்ன குறிப்பிடம் மட்டுமே படித்து அதில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும்,
எதுவுமே படிக்கத் தெரியாமல் பங்கு குருவானவர் வைக்கிற பிரசங்கத்தை மட்டும் கேட்டு அதன்படி வாழக்கூடியவர்களாக இருந்தாலும்
எல்லோருமே விசுவசிக்க வேண்டும்,
விசுவசித்தபடி வாழ வேண்டும்.
இயேசு மலை மீது அழைத்துச் சென்ற மூன்று சீடர்களின் குறைகளைப் பற்றி கவலைப்படாமல்,
அவர்களுடைய அன்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தந்தை இறைவன் அவர்களோடு பேசியது போல,
நாம் பலகீனர்களாக இருந்தாலும்,
அறிவிலிகளாக இருந்தாலும்,
எழுதவாசிக்க தெரியாதவர்களாக இருந்தாலும்
அதையெல்லாம் கடவுள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்.
நமது அன்பை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்.
வார்த்தை அலங்காரங்களைப் பயன்படுத்தி மணிக்கணக்காக செய்யும் செபங்களை விட,
"ஆண்டவரே நான் பாவி, என்னை மன்னியும்."
என்ற ஒரு வாக்கிய செபத்துக்கு சக்தி அதிகம்.
விசுவாசத்தோடும் அன்போடும் வாழும் நமக்கு இறைவன் நித்திய பேரின்ப வாழ்வைத் தருவார் என உறுதியாக நம்ப வேண்டும்.
அவரை அன்பு செய்யும் நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து ஆன்மீக வாழ்வில் நம்மை விண்ணகம் நோக்கி நம் இறைவன் நடத்திச் செல்வார் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அன்போடும் வாழ வேண்டும் என்பது
திருச்சபையின் தலைவர் பாப்பரசர் முதல்,
அடிமட்ட கிறிஸ்தவன் வரை அனைவருக்கும் பொதுவானது.
ஆகவே நாம் அதிகம் படிக்காதவர்கள்,
பலகீனமானவர்கள்,
பைபிள் வசனங்கள் நமக்கு புரியவில்லை
என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
மொத்த பைபிளும் ஒரே வசனத்தில் அடங்கும்.
"அன்பு செய்யுங்கள்."
எதைச் செய்தாலும் அன்பினால் ஏவப்பட்டு செய்வோம்.
நமது அன்பு அன்பு மயமான கடவுளோடு நம்மை என்றென்றும் ஐக்கியப்படுத்தும்.
அன்பு அன்போடு இணையும்.
அதுவே நிலை வாழ்வு.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment