பரிசேயரும் மறைநூல் அறிரும்
இயேசுவிடம்,
"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" என்று கேட்டார்கள்.
அதற்கான மறுமொழியை இயேசு,
"வெளிவேடக்காரராகிய உங்களைப் பற்றி" என்று ஆரம்பிக்கிறார்.
ஏன்?
சுகாதார விதிகளின்படி சாப்பிடுமுன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதில்
பிரச்சனை ஒன்றும் இல்லை.
ஆனால் பரிசேயர்கள் முன்னோர் பரம்பரையின்படி என்று அவர்களது கேள்வியை ஆரம்பித்ததில் தான் பிரச்சனை.
ஒரு செயலை எதற்காக செய்கிறோம் என்பதை பற்றி பரிசேயர்களுக்குக் கவலை இல்லை.
பரம்பரையின்படி செய்கிறோமா என்பதுதான் கவலை.
பரம்பரையின்படி மட்டும் செயல்படுபவர்கள் செயலின் நோக்கத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
நாம் பெரியவர்களைப் பார்க்கும்போது கையெடுத்துக் கும்பிடுகிறோம்.
நமக்கு பெரியவர்கள் மீது இருக்கும் உண்மையான மரியாதையை காண்பிப்பதற்காக கும்பிடுகிறோமா?
அல்லது,
கும்பிடுவது பழக்கம் என்ற அடிப்படையில் கும்பிடுகிறோமா?
உண்மையிலேயே மரியாதையோடு கும்பிட்டால் அது சரி.
நோக்கத்தைப் பற்றி நினைக்காமல் பழக்கம் என்ற அடிப்படையில் மட்டும் கும்பிட்டால் அது வெறும் வேடம்.
மனதில் மரியாதை இல்லை, ஆனால் மரியாதை உள்ளவர்கள் போல் நடிக்கிறோம்.
ஆகையினால் தான் பரம்பரையின் அடிப்படையில் மட்டும் ஒரு செயலை நோக்கும் பரிசேயர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்று அழைக்கிறார்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.
காலையில் திருப்பலி முடிந்து மாணவர்கள் தங்கும் இடத்திற்கு வந்து விட்டோம்.
வந்து துணி மாற்றுவதற்காக சட்டையைக் கழற்றப் போகும்போதுதான்,
அனைவரின் சட்டைகளின் முன்புறத்தில் மை தெளிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தோம்.
கோவிலுக்குள் போகும்போது சுத்தமாக இருந்த சட்டையில் வரும்போது மை தெளித்தவர்கள் யார்?
இதைப் பற்றி மாணவர்களை கவனிக்கும் குருவிடம் சென்று புகார் அளித்தோம்.
அவர் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் கோவிலுக்குச் சென்று,
வாசலில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த தொட்டியை கவனித்தார்.
உள்ளே தீர்த்தத்திற்குள் மை ஊற்றப்பட்டிருந்தது.
உடனே அவர்கள் நாங்கள் அமர்ந்திருந்த Study Hall க்கு வந்து, எல்லோருடைய சட்டைகளையும் காண்பிக்க சொன்னார்.
ஒரு மாணவனுடைய சட்டையை தவிர மற்ற அனைவரின் சட்டைகளிலும் மை தெளிக்கப்பட்டிருந்தது.
உடனே சாமியார் மை தெளிக்கப்படாத சட்டைக்காரனை நோக்கி,
"தீர்த்த தொட்டிக்குள் மை ஊற்றியது யார்?" என்று கேட்டார்.
அவன் எவ்வித பயமும் இன்றி,
"நான்தான், சுவாமி." என்றான்.
சுவாமியாருக்குக் காரணம் புரிந்து விட்டது. இருந்தாலும் அதை உறுதி செய்து கொள்வதற்காக மாணவனை நோக்கி,
"ஏன் ஊற்றினாய்?" என்று கேட்டார்.
மாணவன் சொன்னான்,
"சுவாமி தீர்த்த தொட்டியில் தீர்த்தம் ஊற்றி வைத்திருப்பதின் நோக்கம்
கோவிலுக்குள் செல்லும்போதும், வெளியே வரும் போதும்
தீர்த்தத்திற்குள் விரலை விட்டு,
"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்."
என்று செபித்துக்கொண்டு சிலுவை அடையாளம் போட வேண்டும் என்பது தானே.
சிலுவை அடையாளம் போடும் போது
நெற்றியிலும், நெஞ்சிலும், இரு தோள்பட்டைகளிலும் விரலை வைக்க வேண்டும்.
மாணவர்களை முதலில் பார்த்துவிட்டு, சட்டைகளை வாங்கிப் பாருங்கள்.
யாருடைய நெற்றியிலாவது, நெஞ்சிலாவது, தோள்பட்டைகளிலாவது மை இருக்கிறதா என்று பாருங்கள்.
இருக்க வேண்டிய இடங்கள் தவிர மற்ற இடங்களில் மை தெளிக்க பட்டிருக்கும்.
தீர்த்தத்தை தொட்டு செபிப்பதை விட்டுவிட்டு சட்டையை மேல் தெளித்திருக்கிறார்கள்.
கோவிலில் சென்று பார்த்தல் தெரியும் தரையிலும் மை தெளிக்கப்பட்டிருக்கும்.
அவர்களைத் திருத்த விரும்பினேன், அதற்காகத்தான் மையை ஊற்றினேன்.
அது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றான்.
சாமியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மாணவர்களுக்கு சிலுவை அடையாளம் போடும் முறையை விளக்கி விட்டுச் சென்றார்.
நெற்றி விண்ணகம்.
நெஞ்சு பூமி.
"இறைமகன் விண்ணிலிருந்து
பூமிக்கு மனிதனாய்ப் பிறந்து இறங்கி வந்து,
நமது பாவங்களுக்கு பரிகாரமாகத் தனது தோள்பட்டைகளில் சிலுவையைச் சுமந்து சென்று, அதில் மரித்தார்"
என்று தியானித்துக் கொண்டு சிலுவை அடையாளம் போட வேண்டும்.
நம்மில் எத்தனை பேர் அவ்வாறு செய்கிறோம்.
அவ்வாறு செய்தால் அது செபம். இல்லாவிட்டால் நடிப்பு.
நாம் இயேசுவின் சீடர்களா, அல்லது, வெறும் நடிகர்களா?
சிந்தித்துப் பார்ப்போம்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment