Sunday, February 5, 2023

"அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்." (மாற்கு. 6:56)

"அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்." (மாற்கு. 6:56)

''தாத்தா, இயேசுவைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர், என்று புனித மாற்கு எழுதி வைத்துள்ளார்.

அவரது வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டால் உலகில் நோயுள்ள யாருமே இருக்க மாட்டார்களே.

ஏனெனில் கடவுள் எங்கும் இருப்பதால் அவரை எல்லோரும் தொட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள்."

"'உன்னை போல அரைகுறையாக வாசிப்பவர்களால்தான் பிரச்சனைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

புனித மாற்கு எழுதிய வசனத்தில் கடைசி வரியை மட்டும் வாசித்து விட்டு உன் மனதில் தோன்றியதைக் கேட்கிறாய்.

அந்த முழு வசனத்தையும் வாசி. "

"அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும்,

 பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி

 அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். 

அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்."

"'உனது கேள்வியில் நீ சொன்னதற்கும் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"


"கொஞ்சம் பொறுங்கள். இன்னொரு முறை வாசித்து விட்டுச் சொல்கிறேன்.

நிறைய வித்தியாசம் இருக்கிறது, தாத்தா.

குணம் பெற வேண்டுமென்று விரும்புவோர் அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். 

அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்."

அதாவது இயேசு சர்வ வல்லமை உள்ளவர்.

அவர் மக்களிடையே வருகிறார்.

ஆனாலும் குணம் பெறுவதற்கு முதல் முயற்சியை மக்கள் தான் எடுக்கிறார்கள்.

அவர்கள் தான் இயேசுவினுடைய போர்வையின் விளிம்பையாவது தொட அனுமதி கேட்கிறார்கள்.

அவரும் அனுமதி அளிக்கிறார்.

தொட்டவர்கள் அனைவரும் குணம் அடைகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள கடவுள் எங்கும் இருக்கிறார்.

நம்மைப் படைத்து பராமரித்து வருபவர் அவர்தான்.

அவரது பராமரிப்பின் முழு பயனையும் நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் முயற்சி எடுத்து அவரிடம் நம்மை காப்பாற்றும்படி வேண்ட வேண்டும்."

"'கொஞ்சம் பொறு. நாம் படைக்கப்பட்ட நாம் முயற்சி எடுக்கவில்லை.

முயற்சி எடுக்க நாமே இல்லை.

அவர் நம்மை பராமரிக்க நாம் முயற்சி எடுக்கவில்லை.

படைக்கப்பட்ட அனைத்தையும் படைத்தவர் பராமரித்துக் கொண்டு வருகிறார்.

சரி, சொல்லு."

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னவர் இயேசு.

நமக்கு வேண்டியதை நாம் கேட்டு பெற வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்."

"'நாம் கேளாமலே நம்மைப் படைத்தவர் தானே இயேசு.

ஏன் நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்?"

"நம்மை உயிரற்ற பொம்மைகளாகப் படைக்கவில்லை.  

அவை நாம் வைத்த இடத்தில் இருக்கும். அவை நம்மோடு ஒத்துழைக்காது.

நம்மை கேளாமல் அவர் படைத்தது உண்மைதான்.

ஆனால் நம்மை முழுமையான சுதந்திரத்தோடு படைத்தார்.

சுயமாக இயங்கக்கூடிய திறனோடு நம்மைப் படைத்தார்.

ஆகவே இறைவனின் பராமரிப்பு செயல்களில் நாம் சுயமாக ஒத்துழைக்க வேண்டும்..

நமக்கு தருவதற்கு ஒவ்வொரு வினாடியும் காத்துக் கொண்டிருக்கும் அவரிடம் 

நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற வேண்டும்.

அப்போதுதான் நாம் பெற்றதன் அருமை புரியும்."

"'அப்போ உனது கேள்விக்கு உரிய பதில் உனக்கு தெரிந்திருக்கிறது.

பிறகு ஏன் என்னிடம் கேட்டாய்?"

''உங்களோடு பேச வேண்டும் என்பதற்காகத்தான். 

உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு,

"தாத்தா, என்னிடம் கேள்வியும் பதிலும் இருக்கிறது. ஆகவே உங்களிடம் எதுவும்  அமைதியாக உங்களது அருகில் உட்கார்ந்து கொள்கிறேன்." என்று எதையும் சொல்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால்,

நம்மை பார்ப்பவர்கள் ஏதோ இரண்டு பொம்மைகள் அருகருகே இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

காதலித்து கல்யாணம் செய்துகொண்ட இருவர்

 கல்யாணத்திற்கு பின்னும் ஏன் ஒருவரை பார்த்து ஒருவர்

 "I love you" என்று அடிக்கடி சொல்கிறார்கள்?

நாம் இயேசுவை நேசிக்கிறோம் என்று அவருக்குத் தெரியும்.

ஆனாலும் நாம் அடிக்கடி, கிடைக்கும் போதெல்லாம்

"Jesus, I love you." என்று சொல்கிறோமே, ஏன்?"

"'நான் உன்னிடம் கேள்வி கேட்டால் நீ பதிலுக்கு என்னிடம் கேள்வி கேட்கிறாய்.

அருகில் இருப்பதாலோ, பார்த்து ரசிப்பதாலோ உறவு நாம்  ஆசைப்படுகிற அளவு வளராது.

உள்ளங்கள் பேசும்போது தான் உறவு வளரும்.

மனித உள்ளங்கள் வாய்மொழி மூலம் பேசும்.

இறைவனோடு பேசுவதற்கு உள்ளங்கள் மட்டுமே போதும், வாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைவனோடு பேசுவதை செபம் என்கிறோம். உள்ளத்தில் மட்டும் இறைவனோடு பேசுவதற்கு தியானம் என்ற பெயரும் உண்டு.

  இறைவனுக்கு அனைத்தும் தெரியும். நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவருக்கும் நமக்கும் உள்ள உறவை வளர்க்கும் வகையில் நாம் உரையாடல் செய்யும்போது அவருக்கு தெரிந்ததையே திரும்ப திரும்ப அவரிடம் சொல்கிறோம்.

நமது உள்ளம் அவருடைய உள்ளத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்பது ஒன்றே செபத்தின் நோக்கம். 

கடவுள் நம்மீது எப்போதும் இரக்கமாக இருப்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆனாலும் "இயேசுவே என் மீது இரக்கமாயிரும்." என்று அடிக்கடி சொல்கிறோம்..

நமது செபத்தை கடவுள் கேட்பார் என்பது நமக்குத் தெரியும். 

ஆனாலும் "ஆண்டவரே, எங்கள் மன்றாட்டை கேட்டருளும்" என்று அடிக்கடி சொல்கிறோம்.

இயேசு நம்மை மீட்பதற்காகத்தான் உலகிற்கு வந்தார் என்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆனாலும் "இயேசுவே இரட்சியும்" என்று அடிக்கடி சொல்கிறோம்.

சுருக்கமாக,

 இறைவனோடு எதைப் பேசினாலும்,

 எப்படி பேசினாலும் 

அது அவரோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதற்கே.

வேறு நோக்கம் இல்லை."

"அதெப்படி, தாத்தா, வேறு நோக்கம் இல்லை என்று சொல்லலாம்.

ஒவ்வொரு செபத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறதே.

சிலர் குழந்தை வரம் கேட்டு செபிப்பார்கள்.

 சிலர் நோய் நொடிகள் நீங்க செபிப்பார்கள்.

சிலர் வேலை கிடைக்க செபிப்பார்கள்.
.
ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்திற்காக செபிப்பார்கள்.

நீங்கள் உறவை வளர்ப்பதுதான் நோக்கம் என்கிறீர்கள்."

"'My dear man,  நீ எதற்காக வேண்டினாலும் இறுதி நோக்கம் இறுதியில் இறைவனோடு என்றென்றும் விண்ணகத்தில் நிரந்தர உறவோடு வாழ்வதற்காகத்தான்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே இறைவனோடு உள்ள  உறவை வளர்ப்பதற்காகத்தான்."

"தாத்தா, இயேசு அவரது பொது வாழ்வின் போது கேட்டவர்களை மட்டுமா குணமாக்கியிருக்கிறார்?

கேளாதவர்களுக்கும் அவராக  சென்று குணமாக்கியிருக்கிறாரே.''

"'அது மட்டுமல்ல. சிலரைத் தொட்டும் குணமாக்கியிருக்கிறார்,

சிலரைத் தொடாமலேயே குணமாக்கியிருக்கிறார்.

அது அவரது விருப்பம்.

ஆனாலும் நாம் அவருடைய உதவியின்றி சுயமாக எதையும் செய்ய முடியாது என்பதை 

நாம் உணர்ந்திருக்கிறோம் என்பதை அவருக்கு தாழ்ச்சியோடு தெரியப்படுத்தும் வகையில் 

நமக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் அவரிடம் கேட்க வேண்டும்.

நமக்கு வேண்டிய அனுதின உணவையும் கூட தந்தையிடம் கேட்க வேண்டும் என்று இயேசு நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்.

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நாம் மீட்பு பெறுவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்றால் அது அவருடைய உதவியோடு செய்யப்பட வேண்டும்.

நம்மால் முடியும் என்று நினைத்துக் கொண்டு இஷ்டம் போல் செயல்பட்டால் அது நமது மீட்புக்கு உதவாது.

ஆகவே எதை செய்தாலும் இறைவனின் உதவியோடு செய்வோம்.

நடப்பது நாமாக இருந்தாலும் நடத்துவது அவர்தான்.

வாழ்வது நாமாக இருந்தாலும் வாழ வைப்பது அவர்தான்.

நமக்கு எல்லாம் இயேசு தான்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment