Saturday, February 4, 2023

உலகிற்கு உப்பு நீங்கள்.""உலகிற்கு ஒளி நீங்கள்"(மத்.5:13,14)

"உலகிற்கு உப்பு நீங்கள்."

"உலகிற்கு ஒளி நீங்கள்"
(மத்.5:13,14)

இயேசு அவருடைய சீடர்களாகிய நாம்  சாரம் உள்ள உப்பைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

உப்பு நாம் உண்ணும் உணவிற்கு ருசியைக் கொடுக்கிறது.

உப்பு இல்லாத உணவை நம்மால் சாப்பிட இயலாது. உணவு எதற்காக சமைக்கப்பட்டதோ அது நிறைவேற வேண்டுமென்றால் அதோடு உப்பை கலக்க வேண்டும்.

உப்பு உணவுக்கு ருசியைக் கொடுக்கும், 

உணவு கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்,

கிருமிகளை அழிக்கும்.

மனித சமுதாயம் என்ற உணவு இறைவனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமென்றால் 

சாரம் உள்ள உப்பாக,

அதாவது ருசியைக் கொடுக்கக் கூடிய, 

சமுதாயத்தைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க கூடிய,

 தீமைகளாகிய கிருமிகளை நாசம் பண்ணக்கூடிய குணம் உடையவர்களாக 
சமுதாயத்தில் வாழ வேண்டும்.

உப்பில் சாரம் இல்லை என்றால்,

அதாவது உப்பிற்கு உரிய குணங்கள் அதில் இல்லை என்றால்,

அதை நாம் உண்ணும் உணவில் போட்டாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

நம்மில் இயேசுவின் சீடர்களுக்கு இருக்க வேண்டிய எல்லா குணங்களும் இருக்க வேண்டும்.

அதாவது,

நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

 நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழா விட்டால் நம்மால் நாம் வாழும் சமுதாயத்திற்கு ஆன்மீக ரீதியான எந்த பயனும் இல்லை.

ஆண்டவர் நீங்கள் உலகின் ஒளி என்று கூறியிருக்கிறார்.

ஒளி பிரகாசமாக இருப்பதால் அதனால் தன்னைத் தானே மறைக்க முடியாது.

அது பட்ட இடத்தை எல்லாம் பிரகாசம் உள்ளதாக மாற்றும்.

கிறிஸ்து நானே உலகின் ஒளி என்று கூறியிருக்கிறார்.

கிறிஸ்துவாகிய ஒளி நம்மிடம் இருந்தால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை சுற்றி வாழ்பவர்கள் மீது கிறிஸ்துவாகிய ஒளி பிரகாசிக்கும்.

உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மறைத்து வைத்திருக்க முடியாது.

சென்ற இடமெல்லாம் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுத்துக்கொண்டே செல்வார்கள்.

நல்ல கிறிஸ்தவர்கள் வாழும் இடத்தில் அவர்களை சுற்றி வாழும் அனைவரும் நல்ல கிறிஸ்தவர்களாக மாறுவார்கள்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வது ஒரு மிகச்சிறந்த நற்செய்தி பணி.

நம்மை சுற்றி வாழுவோரும் நற்செய்தியை அறிந்து அதன்படி வாழ ஆரம்பிப்பார்கள்.

ஆனால் நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழாவிட்டால் நம்மால் யாருக்கும் பயனில்லை.

பயனில்லாதது மட்டுமல்ல மற்றவர்களையும் நாம் நம்மைப் போல கெட்டவர்களாக மாற்றி விடுவோம்.

எப்படி கருப்பட்டி பட்ட பொருள் எல்லாம் இனிப்பாக  இருக்கிறதோ,

எப்படி வேப்பிலை கலந்த பொருள் எல்லாம் கசக்கிறதோ,

எப்படி மிளகாய் கலந்த உணவு உரைக்கிறதோ,

அதேபோல, நமது குணம் எப்படி இருக்கிறதோ அப்படியே நம்மோடு பழகுகிறவர்கள் குணமும் மாறும்.

உலகெங்கும் கிறிஸ்தவத்தை பரப்புவது நமது கடமை.

நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வதே இக்கடமையை நிறைவேற்றும்.

நாம் யாரிடமும் கிறிஸ்துவை பற்றி வாயால் பேசாவிட்டாலும் கூட,

நம்மை சுற்றி வாழ்பவர்கள் தங்களது கண்களால் நம்மை,

 நாம் பின்பற்றும் கிறிஸ்தவத்தை, உள்வாங்கிக் கொள்வார்கள்.

சாரம் உள்ள உப்பாய்,

கிறிஸ்தவ குணங்கள் உள்ள மனிதர்களாய்,

கிறிஸ்துவை தாங்கும் ஒளியாய் வாழ்வோம்,

உலகைக் கிறிஸ்துமிடம் கொண்டு வருவோம்.

இதுவே நமது மீட்பருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment