Thursday, February 9, 2023

"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள்.''(மாற்கு. 8:2)

"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள்.''
(மாற்கு. 8:2)

கடவுள் மாறாதவர்.

தன்னால் படைக்கப் பட்டவர்களை நித்திய காலமும் நேசிக்கிறார்.

படைக்கப் பட்டவர்கள் அவரது அன்பை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் அன்பு செய்வதில் மாற்றம் இல்லை.

அனைவர் மீதும் நித்திய காலமாக இரக்கமாக இருக்கிறார்.

அவரது இரக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டாலும்,
 ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரது இரக்கத்தில் மாற்றம் இல்லை.

தற்பெருமையால் சாத்தானாக மாறிவிட்ட லூசிபெரையும் இன்னும் அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்.

மாறாத அவரது அன்பையும், இரக்கத்தையும் 

ஏற்றுக் கொள்வதும்,

 ஏற்றுக் கொள்ளாததும்

 நமது கையில்தான் இருக்கிறது.

அவரது விருப்பப்படி நாம் வாழ்ந்தால் அவரது அன்பையும், இரக்கத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள தகுதி உள்ளவர்கள் ஆகிறோம்.

தங்கள் உணவைப் பற்றி கவலைப்படாமல் 

விடாமல் மூன்று நாட்களாக அவருடன் இருந்து,

அவரது போதனையை கேட்டுக் கொண்டிருந்த நாலாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இயேசுவின் இரக்கத்திற்கு தங்களை தகுதி ஆக்கிக் கொண்டார்கள்.

ஆகவே தான் ஆண்டவர் சொல்கிறார் 

"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். 

ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள்.

 இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே!" என்று.

சொல்வது மட்டுமல்ல,

ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் கொண்டு அனைவருக்கும் வயிறார உணவு அளிக்கிறார்.

அவர்கள் வயிறார உண்டபின் ஏழு கூடை உணவுத் துண்டுகள் மீதம் இருந்தன.

வேறொரு சமயத்தில் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு உணவளித்தார்.

மீதம் 12 கூடைகள் இருந்தன.

இந்த புதுமைகளை எத்தனையோ முறை நாம் வாசித்திருக்கிறோம்,

பிரசங்கங்களில் கேட்டிருக்கிறோம்.

ஆனால் அன்று அவரது இரக்கத்திற்குத் தங்களை தகுதி ஆக்கிக் கொண்ட மக்களது இடத்தில் நம்மை வைத்து தியானித்திருக்கிறோமா?

பிரார்த்தனைகள் கூறும்போது,

"ஆண்டவரே இரக்கமாயிரும், கிறிஸ்துவே இரக்கமாயிரும்"

என்று எத்தனை ஆயிரம் முறை சொல்லியிருப்போம்? 

ஒவ்வொரு திருப்பலியிலும் இந்த மன்றாட்டை எத்தனை முறை சொல்லியிருப்போம்?

நமக்குத் தெரியும் ஆண்டவர் இயல்பிலேயே இரக்கம் உள்ளவர் என்று.

பானை நிறைய நீர் உள்ளது.

பானை மேல் ஒரு தம்ளர் உள்ளது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் பானையில் அருகில் சென்று தம்ளரை எடுத்து தண்ணீரை மொண்டு குடிக்க வேண்டியது தான்.

அதற்கு மனம் இல்லாவிட்டால் பானையில் தண்ணீர் இருந்தும் நமக்கு பயனில்லை.

கடவுளிடம் இரக்கம் அளவில்லாத விதமாய் உள்ளது.

அதற்கு ஏற்றவர்களாய் நம்மை மாற்றிக்கொள்ள அவரது சித்தத்தை ஏற்று அதன்படி செயல்பட வேண்டும்.

செயல்பட ஆரம்பித்தால் ஆண்டவருடைய  இரக்க மழை நம் மேல் பொழியும்.

அவரது இரக்கத்தின் உதவியால் அவரது சித்தத்தை நிறைவேற்றி ஆன்மீக வாழ்வில் வேகமாக முன்னேறுவோம்.

அவரது சித்தத்தைப் பற்றி கவலைப்படாமல் நாம் நமது இஷ்டப்படி வாழ்ந்து கொண்டு,

"ஆண்டவரே இரக்கமாயிரும்" என்று வேண்டினால்,

நமது இஷ்டப்படி வாழ எப்படி அவர் இரங்கி உதவுவார்?

அவரது சித்தப்படி வாழ நமக்கு இரங்கி உதவும்படி அவரிடம் மன்றாட வேண்டும்.

"ஆண்டவரே, என் மீது இரங்கி நான் தினசரி திவ்ய பலி பூசைக்கு போக வசதி உள்ள ஒரு ஊரில் எனக்கு வேலை கிடைக்கும் படி அருள் புரியும்."

இந்த செபத்தில் இறைவன் விருப்பப்படி நடக்க உதவி செய்ய இரக்கம் காட்டும்படி வேண்டுகிறோம்.

இந்த வேண்டுதலுக்கு இறைவன் கட்டாயம் செவி சாய்ப்பார்.

யாருக்கும் உதவி செய்யும் மனப் பக்குவம் இல்லாதவர்கள்,

"ஆண்டவரே, மனம் இரங்கி எனக்கு அதிக சம்பளம் கிடைக்க உதவி செய்யும்."

இந்த மன்றாட்டு இறைவன் முன் பொருள் அற்றது. .

"ஆண்டவரே, மனம் இரங்கி மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தை எனக்குத் தரும்படி கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்."

இது ஆண்டவருக்கு ஏற்ற மன்றாட்டு.

இறைவனை அறிந்து,

 அவரை அன்பு செய்து,

 அவருக்கு சேவை செய்து,

 அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக 

நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோமோ அதன்படி வாழ நமக்கு வேண்டிய உதவி செய்யும்படி 

அவருடைய இரக்கத்தை கேட்டு தினமும், ஒவ்வொரு வினாடியும் மன்றாட வேண்டும்.

 "ஆண்டவரே, நான் பாவி. என் மீது மனமிரங்கி என் பாவங்களை மன்னித்தருளும்."

"ஆண்டவரே, என் மீது இரக்கமாயிரும். பராக்குக்கு இடமின்றி, பக்தியுடன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டிய வரம் தாரும்."

"இயேசுவே, நாங்கள் வாழும் நாட்டின் மீது இரக்கமாயிரும்.

உமது விருப்பப்படி நாட்டை ஆளுகின்ற தலைவர்களை எங்களுக்குத் தாரும்."

"இயேசுவே, நீர் அளிக்கும் திருவிருந்தில் கலந்து கொள்ளும் உமது மக்கள் மீது இரக்கமாயிரும்.

கையில் உம்மை வாங்குவதை கைவிட்டு நாவில் உம்மை வாங்கி பலன் அடைய அவர்களுக்கு அருள் புரியும்."

இத்தகைய மன்றாட்டுக்களுக்கு இறைவன் உறுதியாக செவி சாய்ப்பார்.

"இறைவா, எங்கள் மீது இரங்கி,

உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாய் நாங்கள் வாழ எங்களுக்கு வேண்டிய அருள் புரியும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment