Monday, February 6, 2023

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது." (மாற்கு.7:6)(தொடர்ச்சி)

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது." (மாற்கு.7:6)
(தொடர்ச்சி)

செபம் என்றாலே இறைவன் உள்ளமும், நமது உள்ளமும் இனணவதுதான்.

ஆனால் உள்ளத்தை எங்கேயோ விட்டுவிட்டு உதட்டினால் மட்டும் இறைவனைப் புகழும் வார்த்தைகளைச் சொன்னால் அது செபம் அல்ல, வெளி வேடம்.

மனிதர்களின் வெளிவேடத்தால் மனிதர்கள் ஏமாறலாம்,

 இறைவன் ஏமாறுவாரா?

மனிதர்களாகிய நாம் மற்றொருவரின் புகழ்ச்சி வார்த்தைகளை கேட்டு நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது,

ஏனெனில் நமக்கு பேசுபவரின் உள்ளம் தெரியாது.

உள்ளொன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசுபவரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் இறைவனுக்கு நமது அடிமனதில் உள்ள எண்ணங்கள் கூட தெரியும்.

உள்ளத்தில் வேறு எதையாவது நினைத்துக் கொண்டு உதட்டினால்,

"ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம், புகழ்கிறோம், வாழ்த்துகிறோம்." 

என்று சொன்னால் அவர் ஏமாந்து விடுவாரா?

அப்படி செபிக்கிற மக்களை பார்த்து தான் இயேசு,

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது."

என்று சொல்கிறார். 

இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானிக்கும்போது இயேசுவும் அவர் பட்ட பாடுகளும் மட்டும்தான் நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.

"இயேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக"

என்று வாயினால் சொல்லிக் கொண்டு,

"இன்று மதிய உணவிற்கு சிக்கன் எடுப்போமா, மட்டன் எடுப்போமா" என்று நினைத்துக் கொண்டிருந்தால்

நமது உள்ளத்தை பார்க்கும் இறைவனுக்கு சிரிப்பு வரும்.

சப்தமாகச் சொல்லும் செபம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு உதடுகள் வழியாக வெளியே வரவேண்டும்.

உதடுகளில் இருந்து மட்டும் வந்தால் அதற்கு பெயர் செபம் அல்ல.

திருப்பலியின் போது 

"ஒருவருக்கொருவர் நமது சமாதானத்தை தெரிவித்துக்கொள்வோமாக"

என்று குருவானவர் சொல்லும் போது,

சுவர் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் 

இடது பக்கம் இருக்கும் ஆளை பார்த்து "சமாதானம்" என்று சொல்லிவிட்டு,

 வலது பக்கம் இருக்கும் சுவரைப் பார்த்தும் "சமாதானம்" என்று சொன்னால்

 அவர் சொல்லிய சமாதானத்திற்கு என்ன அர்த்தம்?

யாரோடாவது சமாதானம் இல்லாமல் இருப்போமானால் அவரிடம் சென்று சமாதானம் என்று சொல்வது தான் முறை.

கோவிலில் அவர் நமது அருகே இல்லாவிட்டால் மனதிற்குள் அவரோடு சமாதானம் செய்து கொண்டு 

திருப்பலி முடிந்தவுடன் அவரிடம் சென்று அவரோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் வீட்டிலே சண்டை போட்டுவிட்டு,

பூசைக்கு வந்து அருகில் இருப்பவர்களோடு சமாதானம் செய்துவிட்டு,

 திரு விருந்திலும் கலந்து விட்டு,

இயேசுவோடு வீட்டுக்குத் திரும்பிய பின்,

அவரை சாட்சியாக வைத்துக்கொண்டு,

திருப்பலிக்கு முன் போட்ட சண்டையைத் தொடர்வார்கள்.

இவர்களைப் பற்றி இயேசுவிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?

"இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்,

 அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.

அவர்கள் என்னை வழிபடுவது வீண்." என்று தான் சொல்லுவார்.

திரு விருந்தின் போது திவ்ய நற்கருணையை உட்கொண்ட பின் நமது உள்ளத்திற்குள் வந்திருக்கும் இயேசுவோடு பேச வேண்டும்.

எதைப் பற்றி பேச வேண்டும்?

இயேசுவோடு எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.

நண்பர்கள் சந்திக்கும்போது இதைப்பற்றி தான் பேச வேண்டும் என்று திட்டமிடுவதில்லை.

ஆனாலும் மணிக்கணக்காய்ப் பேசுவார்கள்.

அதுபோல இயேசுவிடமும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் இயேசுவை உள்ளத்தில் அமர்த்தி விட்டு நாம் வேறு எதையாவது கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடாது.

அல்லது வேறு யாரோடும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

திருப்பலி முடியுமுன் கோவிலை விட்டு வெளியேறக்கூடாது.

இவையெல்லாம் நாம் இயேசுவுக்குச் செய்யும் அவ மரியாதை.

உயிர் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்திருக்கும் போது அவனோடு பேசாமல் வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்போமா?

செபம் என்றாலே இறைவனோடு இணைவது தான்.
(Our union with God.)

இறைவன் பரிசுத்தமானவர்.

 அவரோடு நாம் இணைய வேண்டும் என்றால் நமது ஆன்மாவும் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

பாவ நிலையில் இருக்கும் ஆன்மா பரிசுத்த இறைவனோடு இணைய முடியாது.

ஆகவேதான் திருப்பலியில் ஆரம்பத்திலேயே பாவ மன்னிப்பு வழிபாடு செய்கிறோம்.

சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் திருப்பலி ஆரம்பிக்கும் முன்பே பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்.

இறையன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறரன்பும்.

அதனால் தான் திருப்பலியின் போது நமது அயலானோடு சமாதானம் செய்து கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

சமாதான நிலையில் ஒப்புக் கொடுக்கும் செபம் தான் இறைவனுக்கு ஏற்ற செபம்.

பரிசுத்தமான உள்ளத்தோடும், சமாதானத்தோடும் திருப்பலியை ஒப்புக்கொடுத்தால் தான் 

திரு விருந்தின் போது இறைமகன் மகிழ்ச்சியோடு நமது உள்ளமாகிய கோவிலுக்குள் வருவார்.

பரிசுத்தராகிய இயேசு சமாதானத்தின் தேவன்.

அவரோடு இணைந்து வாழ்வதுதான் செப வாழ்வு.

இவ்வுலகில் நாம் வாழும் செப வாழ்வுதான் விண்ணுலகிலும் தொடரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment