Thursday, February 16, 2023

தாலாட்டு படுத்தும் பாடு.

தாலாட்டு படுத்தும் பாடு.

எல்லோருமே ஒரு காலத்தில தொட்டிலில் படுத்திருந்தவர்கள்தான்.

தொட்டிலில் படுத்து அழும்போது நம்மைத் தூங்க வைப்பதற்காக அம்மா பாடிய பாட்டு ஞாபகத்தில் இருக்கிறதா?

உண்மையில் பாட்டைக் கேட்டு இரசிக்க வேண்டும் என்பதற்காக அம்மா பாடவில்லை, நம்மைத் தூங்க வைப்பதற்காகத்தான் பாடினார்கள்.

"ஆராரோ,

யார் இவரோ?

யார் ஆவாரோ?

ஆராரோ."

இது தாலாட்டு பாடலில் பல்லவி.

தாயின் திறமையைப் பொறுத்தும்,

 குழந்தை தூங்க ஆரம்பிப்பதைப் பொறுத்தும் சரணங்கள் தொடரும்.

பாடலின் பொருளைப் பற்றி தாயும் கவலைப்படுவதில்லை,

 தொட்டில் குழந்தையும் கவலைப்படுவதில்லை.

தாலாட்டு பாடும் போது குழந்தை தூங்க வேண்டும் என்பது மட்டுமே தாயின் கவலை.

தமிழில் ஒரு பழமொழி உண்டு,

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்."

தொட்டிலில் ஏற்படுகின்ற பழக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் போதித்து கொண்டிருக்கும் போது மாணவன் தூங்குவதும்,

கோவிலில் சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போது பக்தர்கள் தூங்குவதும்

தொட்டிலில் ஏற்பட்ட பழக்கம்தான்.

குழந்தை தூங்க வேண்டும் என்பதற்காக தாய் பாடுகிறாள்.

ஆனால் மாணவன் தூங்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் போதிக்கவில்லை.

பிரசங்கத்தின் போது பக்கர்கள் தூங்க வேண்டும் என்பதற்காக சுவாமியார் போதிக்கவில்லை.

அப்படியானால் தொட்டில் பழக்கம் மோசமானதா?

தாய் செய்தது தப்பா?

இல்லவே இல்லை.

நல்ல பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதால் பொருள் கெட்டதாக மாறிவிடாது.

தாலாட்டு பாடலின் பல்லவியில் வரும் இரண்டு கேள்விகளுக்கு தாய் சரணங்களில் விடை கொடுத்துப் பாட வேண்டும்.

குழந்தை அதை கேட்டுக் கொண்டே தூங்க வேண்டும்.

"யார் இவரோ?

யார் ஆவாரோ?"

"தொட்டிலில் படுத்திருக்கும் இவர் யாரோ?

 இவர் யாராக மாறுவாரோ?"

தொட்டிலில் படுத்திருப்பது தனது குழந்தை என்று தாய்க்குத் தெரியும்.

ஆனாலும் அந்த கேள்வியைக் குழந்தையின் காதில் போடுகிறாள்.

குழந்தை யாராக மாற வேண்டும் என்ற ஆசையும் தாயிடம் இருக்கும்.

இரண்டு கேள்விகளுக்குமான பதிலைத் தாய் சரணங்களில் போட வேண்டும்.

போடுகிறார்களா என்பது கேள்விக்குறி.

"குழந்தாய் நீ என் வயிற்றில் பிறந்ததால் என் குழந்தை தான்.

ஆனால் பிறக்கு முன்பே நீ கடவுளால் படைக்கப்பட்டதால் உண்மையில் நீ கடவுளின் குழந்தை. (யார் இவரோ?)

விண்ணகத்தில் வாழும் இறைவனே உனது தந்தை.

நீ தந்தை இறைவனின் மகனாகிய இயேசுவைப்போல் மாற வேண்டும்.

என் வயிற்றில் பிறந்தாலும் நீ இயேசுவாக வளர வேண்டும்."
(யார் ஆவாரோ?)

இந்த தாயின் ஆசை சரணங்களில் இருந்தால் அது குழந்தையின் காதுகளில் விழுந்து கருத்துக்குள் செல்லும்.

அதை நினைத்துக் கொண்டே குழந்தை தூங்கும்.

குழந்தை வளரும்போது

 நான் யார்?

 நான் யாராக மாற வேண்டும்? என்ற கேள்விகளுடனும்

 அவற்றுக்கான பதில்களுடனும் வளரும்.

அப்படி வளர்ந்தால்

ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தும் போதும்,

கோவிலில் சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போதும் தூங்காது.

தொட்டில் பழக்கத்தை ஆரம்பித்து வைக்கும் தாய்மார் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

*             *        *           *               *

"தாத்தா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

"'என்ன செய்து கொண்டிருப்பது போல் தெரிகிறது?"

"ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. என்ன சிந்தனை என்று தெரியவில்லை.''

"'எல்லோரும் ஏதாவது சிந்தித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

யாராலும் சிந்திக்காமல் இருக்க முடியாது."

"தூங்குபவர்கள்?"

"'நீ தூங்கும்போது கனவுகளே கண்டதில்லையா?"

"கனவுகள் வந்தால்தான் நான் தூங்குவதாக அர்த்தம். 

இரவில் தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வராவிட்டால் தூங்குவதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்."

"'தந்தை, மகன், தூய ஆவியின் பெயராக ஆமென் என்று சொல்லிவிட்டு,

ஒரு செபமாலை சொல்ல ஆரம்பி.

முதல் 10 மணிகள் சொல்லி முடிப்பதற்குள் தூங்க ஆரம்பித்து விடுவாய்"

"செபம் சொல்லும் போது தூங்குவது தப்பில்லையா?"

"'நான் உன்னை செபம் சொல்லும் போது தூங்கச் சொல்லவில்லை.

தூங்கும்போது தான் செபம் சொல்லச் சொன்னேன்.

எப்போது வேண்டுமென்றாலும் தூங்க முடியாது.

ஆனால் எப்போது வேண்டுமென்றாலும் செபம் சொல்லலாம்.

 செபமாலைதான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இறைவனைப் பற்றியாவது, புனிதர்களைப் பற்றியாவது உனக்கு தெரிந்ததைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும்.

அப்படியும் தூக்கம் வராவிட்டால் கவலைப்பட வேண்டாம்.

நமது செபத்தினால் ஏராளமான ஆன்மீகப் பலன்கள் கிடைக்கும்." 

"திருப்பலியின் போது பிரசங்க நேரத்தில் தூங்காமல் இருக்க என்ன செய்யலாம்?"

'"காதுக்கு கொடுக்கும் வேலையை விட கண்ணுக்கு அதிக வேலை கொடு.

திவ்ய நற்கருணை பேழையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இரு.

ஆண்டவரும் தெரிவார், பிரசங்கமும் காதில் விழும்."

"சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போது எனது அம்மா தாலாட்டுப் பாடுவது போல் இருக்கிறது.

முதல் கால் மணி நேரத்துக்கு தூக்கம் வராது. அதற்குப் பிறகுதான் பிரச்சனை."

"'அதனால்தான் சில குருக்கள் சொல்ல வேண்டிய செய்தியை கால் மணி நேரத்துக்குள் முடித்து விடுகிறார்கள்.

உனது அம்மா தாலாட்டு பாடும் போது என்ன சொல்லி பாடினார்கள் என்று ஞாபகத்தில் இருக்கிறதா?"

"குழந்தைக்கு அம்மாவின் முகம் தெரியும், குரல் கேட்கும். வார்த்தைகள் எப்படி, தாத்தா, தெரியும்?

அம்மாவின் நோக்கம் குழந்தையை தூங்க வைப்பது. நானும் தூங்கியிருப்பேன்.

மற்ற எதுவும்  ஞாபகத்தில் இல்லை."

"'ஆனாலும் நீ அறியாமலேயே அம்மாவின் வார்த்தைகள் உனது காது வழியே உள்ளே சென்று உனது மூளையில் பதிவாகி இருக்கும்.

நீ அறியாமலேயே உன்னை வழி நடத்தியிருக்கும்.

திருப்பலி நிறைவேற்றும் குருவின் பிரசங்கமும் அப்படித்தான்.

அவர் முன்னால் அமர்ந்திருக்கும் அத்தனை பேர்களுடைய காதுகளிலும் நுழைந்திருக்கும்.

அனைவருக்கும் பலன் தரும்.

பலனின் அளவு அவர்களுடைய கவனிப்பை பொறுத்து கூட குறைய இருக்கலாம்.

மனித பலகீனத்தின் காரணமாக பக்தர்கள் தூங்கியிருக்கலாம்.

நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட கடவுளுக்கு அதிகம் தெரியும்.

நமது மனதில் ஆசை இருந்தால் கடவுள் நமது பலகீனத்தை மன்னிப்பார்.

கடவுளுக்காக எதைச் செய்தாலும் நல்ல மனதுடன் செய்வோம்.

நாம் பலகீனர்கள் என்பது அவருக்கு தெரியும்.

நமது நல்ல மனதை பார்த்து,

நமது பலகீனத்தைச் சரி செய்து,

நம்மை ஏற்றுக் கொள்வார்.

நல்ல மனதுடன் செயல்பட்டால் இறைவனது சமாதானம் நமக்கு கட்டாயம் கிடைக்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment