Friday, February 10, 2023

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."(மாற்கு. 8:16)

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."
(மாற்கு. 8:16)

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கு உணவளித்து, மீதியான
துண்டுகளை ஏழு கூடைகளில் எடுத்து வைத்த அப்போஸ்தலர்கள்

இயேசுவோடு படகில் பயணித்த போது 

அவர்களிடம் ஒரே ஓர் அப்பம்தான் இருந்தது.

"நம்மிடம் அப்பம் இல்லையே"

 என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."

படகில் பயணம் செய்த  அப்போஸ்தலர்கள் 12 பேர்.

அவர்களிடம் இருந்தது ஒரு அப்பம்.

அவர்களோடு இருந்தவர் ஏழு அப்பங்களைப் பலுகச் செய்து 4000 பேருக்கு உணவளித்த இயேசு.

அவர்களிடம் இல்லாதது நம்பிக்கை.

அதனால்தான் இயேசு அவர்களை நோக்கி,

 "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்?

 இன்னுமா உணரவில்லை?
'
 இன்னுமா விளங்கவில்லை?

 உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? 

கண்ணிருந்தும் காண்பதில்லையா? 

காதிருந்தும் கேட்பதில்லையா?

 உங்களுக்கு நினைவில்லையா?"

என்று அவர்களுடைய நம்பிக்கை இன்மையை குத்திக் காட்டுகிறார்.

ஏழு அப்பங்களைக் கொண்டு 4000 பேருக்கு உணவு ஊட்டிய இயேசுவால்,

ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேருக்கு உணவு ஊட்டிய இயேசுவால்

ஒரு அப்பத்தை கொண்டு 12 பேருக்கு உணவு ஊட்ட முடியாதா?

இந்த எண்ணம் கூட

அப்பங்களை பலுகச் செய்தபோது அவரோடு இருந்த அப்போஸ்தலர்களுக்கு வரவில்லை.

அப்பங்களைப் பலுகச் செய்ததையும்,

அப்போஸ்தலர்கள் பேசியதையும் பல முறைகள் வாசித்து, தியானித்த நம் நிலை என்ன?

அப்போஸ்தலர்களோடு இருந்த
அதே இயேசுதான் இன்று நம்மோடும் இருக்கிறார்.

கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கிய அதே இயேசு, 

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கு உணவு ஊட்டிய அதே இயேசு, 

ஐந்து அப்பங்களை கொண்டு 5000 பேருக்கு உணவு ஊட்டிய அதே இயேசு, 

அப்பத்தை தனது உடலாகவும்,
ரசத்தை தனது ரத்தமாகவும் மாற்றித் தனது அப்போஸ்தலர்களுக்கு உணவாகக் கொடுத்த  அதே இயேசு,

 இன்று நமக்கும்  தன்னையே உணவாகத் தந்து கொண்டிருக்கும் அதே இயேசு

இப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.

ஒவ்வொரு வினாடியும் நம்மோடுதான் இருக்கிறார்.

விசுவசிக்கிறோம்,  விசுவசிக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கும் நாம்,

'அது இல்லையே, இது இல்லையே'

என்று எத்தனை தடவை சொல்லுகிறோம்?

கணக்கில் அடங்காது.

"விசுவசிக்கிறேன்"

என்று சொல்லும் வாயிலிருந்து

 "இல்லையே"

என்ற வார்த்தை வரலாமா?.

எல்லாம் இருப்பவர் நம்மோடு இருக்கும் போது நாம் இல்லை என்று சொல்வது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை.

"கேள், நான் தருகிறேன்." என்று அவர் சொன்ன வாக்கு  நம்மோடு இருக்கும் போது நம்மிடம் எல்லாம் இருக்கிறது.

இருப்பதை இல்லையே என்று நாம் சொன்னால்,

"கண்ணிருந்தும் காண்பதில்லையா?"

என்று அப்போஸ்தலர்களிடம் கேட்ட அதே கேள்வியை நம்மிடமும் கேட்பார்.

Bank Account ல் பணமும், கையில் ATM Card ம் வைத்துக் கொண்டு "செலவுக்குப் பணமில்லையே"

என்று புலம்புபவர்கள் எவ்வளவு அறிவிலிகளோ,

அவ்வளவு அறிவிலிகள்

 இயேசு தங்களோடு இருக்கும் போது 

"வாழ்வதற்கு வழி இல்லையே" என்று புலம்புபவர்கள்.

இயேசு நம்மோடு இருக்கும் போது நம்மிடம் எல்லாம் இருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்றில் குடிதண்ணீர் காலியாகி விட்டது.

உடனே கப்பல் Captain SOS கொடியை ஏற்றினார்.

கொடியைப் பார்த்து அருகில் வந்த படகில்  இருந்தவர்கள்,

"என்ன பிரச்சினை?" என்று கேட்டார்கள்.

கப்பல் Captain, "குடிதண்ணீர் காலியாகி விட்டது." என்றார்.

படகில் இருந்த ஒருவர்,

"நாம் இப்போது இருப்பது கடல் அல்ல. தேம்ஸ் நதி.   நதி முழுவதும் நல்ல தண்ணீர்தான். வேண்டிய அளவு எடுத்து கொள்ளலாமே." என்று சொன்னார்.

எங்கும் நிறைந்த கடவுளுக்குள் நாம் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

எதிர்பாராத சில கஷ்டங்கள் வருகின்றன.

நாமும் உடனே,

"SOS கொடியை ஏற்றுகிறோம்.

கப்பலுக்குள் இருந்து ஒரு குரல் கேட்கிறது,

"நான் உங்களோடு எப்போதும் இருக்கும்போது யாருக்கு SOS கொடியை ஏற்றுகிறீர்கள்?"

குரல் வந்த திசையைப் பார்த்தால் இயேசு நிற்கிறார்.

அவர் நம்மிடம் கேட்கிறார்,

"நீங்கள் விசுவசிப்பது உள்ளத்திலிருந்தா? 

உதட்டிலிருந்தா?"

நமது அறியாமையைக் கண்டு நமக்கே வெட்கம் வருகிறது.

உள்ளத்தில் உள்ள  விசுவாசம்தான் 

நமது நற்செய்தி  அறிவிப்புக்கும், 

நல்ல செயல்களுக்கும்

பிறப்பிடமாய் இருக்க வேண்டும்.



"எல்லாம் இயேசுவே,

எனக்கு எல்லாம் இயேசுவே,

இயேசு என்னிடம் இருக்கயிலே,

இல்லை என்று ஒன்றில்லையே,

என் வாழ்விலே எப்போதுமே."

லூர்து செல்வம்.



.

No comments:

Post a Comment