Sunday, February 19, 2023

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிட்டு."(மாற்கு.9:43)

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிட்டு."
(மாற்கு.9:43)

"'விடுமுறை நாட்களில் tour போகப் போவதாக சொன்னீர்களே, ஏன் போகவில்லை?"

"Tour திட்டத்தைக் கைவிட்டு விட்டோம்."

"'அதுதான் ஏன் என்று கேட்கிறேன்."

"பயணிக்க போவதாக இருந்த இடங்களில் கொரோனா நோய் பரவியிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால் பயண திட்டத்தைக் கைவிட்டு விட்டோம்."

"'அங்கு கொரோனா நோய் பரவியிருப்பதற்கும், பயணத் திட்டத்தைக் கைவிடுவதற்கும்
என்ன சம்பந்தம்?"

"என்ன சார் தெரியாதது மாதிரி கேட்கிறீங்க. அது தொற்று நோய் இல்லையா?

 நம்மைத் தொற்றிக் கொண்டால் என்ன ஆவது?"

"'என்ன ஆகும்?"

"அந்த நோயினால் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?"

"'மோசமான சினிமாக்கள் பார்ப்பதுவும், உங்கள் Smart phone ல் அசிங்கமான காட்சிகளைக் கண்டு ரசிப்பதும்

உங்கள் கண்களையும் கருத்துகளையும் கெடுத்து விடும் என்றும்,

ஆதலால் சிந்தனை, சொல், செயல் சம்பந்தப்பட்ட பாவங்கள் செய்ய நேரிடும் என்றும் 

நீங்கள் ஞானோபதேச வகுப்பில் படித்ததில்லையா?

ஆனாலும் அவற்றையெல்லாம் பார்க்கிறீர்களே, ஏன்?"

"..........."

"'ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்? 

அவற்றால் உங்கள் உடலுக்கு எந்தவித நோயும் வராது, மரணமும் வராது என்பதால் தானே பார்க்கக்கூடாத காட்சிகளை எல்லாம் பார்த்து ரசிக்கிறீர்கள்.

பாவங்கள் ஆன்மாவைத் தொற்றக்கூடிய நோய்கள் என்றும்,

 அவற்றால் ஆன்மீக மரணம் ஏற்படுகிறது என்றும் உங்களுக்குத் தெரியாதா?"

"தெரியும். ஆனாலும் செலவு இல்லாமல் பாவ சங்கீர்த்தனம் செய்து அவற்றுக்கு மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம்.

உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தால் டாக்டருக்கு நம்முடைய வருமானத்தை முழுவதும்  அள்ளிக் கொடுக்க வேண்டுமே." 

"'செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெற 
பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவசங்கீர்த்தனம் இருக்கிறது என்பதற்காக பாவம் செய்யக்கூடாது.

காயங்களை ஆற்ற வீட்டில் மருந்து இருக்கிறது என்பதற்காக யாரும் வேண்டுமென்று கீழே விழுவார்களா?

நமது ஆன்மாவை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமென்றால்,

பாவம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆழமான, தண்ணீர் வேகமாக ஓடக்கூடிய ஆற்றில் இறங்கி அக்கரைக்கு செல்ல முயன்றால் 

ஆற்றோடு செல்ல நேரிடும் என்று தெரிந்த பின்பும்

 யாராவது ஆற்றில் இறங்குவார்களா?

உலக காரியங்களில் நமக்கு இருக்கும் விவேகம் ஏன் ஆன்மீக காரியங்களில் இல்லை?

இரவில் வெகு நேரம் விழித்தெருந்து விட்டு படுக்கச் சென்றால்,

 மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு நேரத்தோடு போக முடியாது என்பது தெரிந்தும் 

இரவில் வெகு நேரம் தூங்காமல் விழித்திருக்கலாமா?

சீக்கிரம் படுத்து,
சீக்கிரம் தூங்கி,
சீக்கிரம் எழுந்து,
சீக்கிரம் பூசைக்குப் புறப்பட வேண்டும்.

ஆறு மணிக்கு சினிமா என்றால் நான்கு மணிக்கே புறப்படுகின்ற மக்கள்,

எட்டு மணி பூசைக்கு எட்டு மணிக்கு தான் எழுந்திருப்பார்கள்.

திவ்ய நற்கருணை கொடுக்கும்போது வந்துவிட்டு,

ஏதோ சுண்டல் கொடுப்பதை வாங்குவது போல கையில் வாங்கி வாய்க்குள் போட்டுவிட்டு,

ஞாயிறு பூசை கண்ட திருப்தியோடு,
வந்தது போலவே போய்விடுவார்கள்.

ஆன்மீக காரியங்களுக்கு இடைஞ்சலாக இருப்பது எதுவாக இருந்தாலும் அதை விட்டுத் தள்ள வேண்டும்.

வாசிக்கின்ற கதைப் புத்தகம் நமது பரிசுத்தமான எண்ணங்களை கெடுப்பது போல் தெரிந்தால் புத்தகத்தை தூர எறிந்து விட வேண்டும்.

ஆன்மீக காரியங்களில் ஆர்வம் இல்லாதவர்களோடு நட்பு கூடாது.

அவர்களை வெறுக்க கூடாது.

 அவர்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்.

 ஆனால் நண்பர்களாய் ஏற்றுக் கொண்டால் நம்மையும் ஆன்மீக காரியங்களில் அக்கறை இல்லாதவர்களாக மாற்றி விடுவார்கள்.

அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான் அவர்களோடு பழகுகிறேன் என்று சொல்பவர்கள் 

தங்கள் ஆன்மீகத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

உண்மையான ஆன்மீகவாதிகள்:

1. பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

2. ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் சந்தர்ப்பங்களைத் தேடி போக வேண்டும்.

3. தங்கள் ஆன்மீகத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment