http://lrdselvam.blogspot.com/2023/02/720.html
"மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்."
(மாற்கு.7:20)
"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?"
(மாற்கு.7:5)
என்று பரிசேயரும் மறைநூல் அறிரும் அவரைக் கேட்ட கேள்விக்கு,
இயேசு கூறிய நீண்ட பதிலில்,
"அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்துகொள்ளுங்கள்.
15 புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை.
மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்.
16 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" (மாற்கு.7:14-16)
என்று கூறுகிறார்.
கையைக் கழுவி விட்டுச் சாப்பிட்டாலும்,
கழுவாமல் சாப்பிட்டாலும்
வாய் வழியே உண்ட உணவு
நமது ஆன்மாவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அது பயணிப்பது உணவு குழல் வழியே தான்.
உணவு குழலுக்கும், ஆன்மாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இயேசு போதித்துக் கொண்டிருந்தது ஆன்மீக நலனுக்கு வேண்டிய நற்செய்தியை,
உடல் ஆரோக்கியத்துக்கான சுகாதாரத்தை அல்ல.
வெளியிலிருந்து வாய்வழியே மனிதனுக்குள்ளே செல்வது எதுவும் அவனை ஆன்மீக ரீதியாக மாசுபடுத்த முடியாது.
வாய் இரண்டு வித வேலைகளை செய்கிறது.
உடலுக்கு தேவையான உணவை உட்கொள்ளுகிறது.
உள்ளத்தின் எண்ணங்களை வெளியிடுகிறது.
முதல் வேலை உடல் சம்பந்தப்பட்டது.
இரண்டாவது வேலை ஆன்மா சம்பந்தப்பட்டது.
ஆன்மீகத்தை பொருத்தமட்டில் இரண்டாவது வேலை தான் முக்கியமானது.
ஏனென்றால் இயேசு போதிக்கும் நற்செய்தியில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்களிடையே இயேசு ஏற்படுத்த விரும்பிய சமாதானம் உள்ளத்தைச் சார்ந்தது.
நல்ல உள்ளம் உள்ளவர்கள்தான் சமாதானமாக வாழ முடியும்.
நல்ல எண்ணங்கள் உள்ள உள்ளம் நல்ல உள்ளம்.
எண்ணங்கள் வாய் வழியே தான் சொல் வடிவில் வெளி உலகத்திற்கு வருகின்றன.
எண்ணங்கள் நல்லபடியாக இருந்தால் சொற்களும் நல்லபடியாக இருக்கும்,
நல்லதை நினைத்து நல்லதைப் பேசுபவரின் செயல்களும் நல்லவைகளாக இருக்கும்.
ஆனால் உள்ளத்தில் மோகம்,
களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு சம்பந்தப்பட்ட தீய எண்ணங்கள் இருந்தால்
அவை அவற்றை எண்ணுபவனது ஆன்மாவை மாசுபடுத்துவதோடு,
அவன் அவற்றை வாய் வழியே வெளியே விடும் போது அவற்றை கேட்பவனையும் மாசுபடுத்தும்.
ஆகவேதான் இயேசு
"புறத்தேயிருந்து
மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை.
மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்." என்கிறார்..
புறத்தேயிருந்து வாய் வழியே உள்ளே போவது உணவு. உணவுக்கும் ஆன்மாவுக்கும் சம்பந்தம் இல்லை.
மனிதனுள்ளிருந்து வெளிவருவது நமது எண்ணங்கள்.
எண்ணங்கள்தான் ஆன்மாவின் பரிசுத்த நிலையையும், பாவநிலையையும் தீர்மானிக்கின்றன.
இப்போது ஒன்றை மனதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்டவரின் வார்த்தைகள்
."கை கழுவாமல் ஏன் சீடர்கள் உண்கிறார்கள்?"
என்ற கேள்விக்குப் பதிலாய் சொல்லப்பட்டவை.
நமது ஐம்பொறிகளுள் நான்கு தலையில் உள்ளன.
கண், காது, மூக்கு , வாய்.
இவற்றில் மூக்கு நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது.
நமது கண்களும், காதுகளும் வெளியே இருந்து நல்லதையோ, கெட்டதையோ உள்ளத்திற்குள் அனுப்புகின்றன.
நல்லதையே பார்ப்பவனும், நல்லதையே கேட்பவனும் நல்லதையே எண்ணுவான்.
கெட்டதையே பார்ப்பவனும் கெட்டதையே கேட்பவனும் கெட்டதையே எண்ணுவான்.
ஆகவே கண்களும், காதுகளும் நமது ஆன்மாவை பாதிக்கலாம்.
ஆனால் வாய் வழியே உணவு மட்டும்தான் உள்ளே செல்லும்.
உணவினால் ஆன்மாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
இப்பொழுது கேட்கலாம்,
அதிக உணவைச் சாப்பிடுவது வாய் தானே.
போசனப் பிரியம் பாவம் அல்லவா?
அதிக போசனம் வாய் வழியே தானே உள்ளே நுழைகின்றது.
அதை ஏன் ஆண்டவர் சொல்லவில்லை? என்று.
இந்தக் கேள்வி புரியாமல் கேட்கப்படும் கேள்வி.
உணவை அளவோடு உட்கொண்டால் புண்ணியம்.
மட்டசனம் தலையான புண்ணியங்கள் ஒன்று.
மட்டு + அசனம் = அளவோடு சாப்பிடுதல்.
போசனப் பிரியம் என்ற தலையான பாவத்துக்கு எதிரான புண்ணியம்.
போசனம் என்றால் உணவு,
உணவு பாவம் இல்லாதது,
பிரியம் என்றால் ஆசை. மனதில் ஏற்படும் அதிக பிரியம்தான் பாவம்.
ஆகவே , உணவைச் சாப்பிடுவது பாவமல்ல.
அளவுக்கு மீறி சாப்பிடுவது தான் பாவம்.
அளவுக்கு மீறுவது வாய் அல்ல, நமது மனது.
வாய் வழியே உள்ளே போவது உணவு மட்டும்தான்.
உணவை அளவோடு சாப்பிட வேண்டும்.
கை கழுவாமல் சாப்பிடுவது சுகாதாரம் சம்பந்தப்பட்டது,
ஆன்மீகம் சம்பந்தப்பட்டது அல்ல.
வாய் வழியே வெளியே வருவது வார்த்தைகள்.
வார்த்தைகள் நல்லவையா, கெட்டவையா என்பது நமது உள்ளத்தை பொறுத்தது.
நமது உள்ளத்தை அதாவது மனதை சுத்தமாக வைத்துக் கொள்வோம்.
மனது சுத்தமாக இருந்தால் சொல்லும், செயலும் சுத்தமாக இருக்கும்.
நமது சிந்தனையும், சொல்லும், செயலும் சுத்தமாக இருந்தால் நாம் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்கள்.
கடவுளை நேருக்கு நேர் பார்த்து அனுபவிக்க ஏற்றவர்கள்.
"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."
(மத்.5:8)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment