Monday, February 27, 2023

"இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்." (மத். 26:2)

"இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்." (மத். 26:2)

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட அன்று  உண்ட பாஸ்கா உணவின் ஞாபகமாக 

கானான் தேசத்துக்கு வந்த பின்னும் பாஸ்கா விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடினார்கள்.

இயேசுவும் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா விழாவில் கலந்து கொண்டார்.

இயேசு தனது மக்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து  மீட்பதற்காகப் படப்போகும் பாடுகளுக்கும்,

 அடையப் போகும் மரணத்திற்கும் முந்திய நாள் தனது சீடர்களோடு 

பாஸ்கா விருந்தில் கலந்து கொள்ள  ஆவலாக இருந்தார்.

பழைய ஏற்பாட்டு யூதர்கள் ஆட்டுக்குட்டியை பாஸ்கா உணவாக உண்டார்கள்.

இயேசுவோ ஆட்டுக்குட்டிக்கு பதில் தன்னையே தனது சீடர்களுக்கு உணவாக அளிக்கத் தீர்மானித்தார்.

 பாஸ்கா விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
இயேசு சீடர்களிடம்,

பாஸ்கா  உணவு முடிந்தவுடன்

"மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்."

பாஸ்கா உணவு உண்ணப்போவது வியாழக்கிழமை அன்று இரவு.

அன்று இரவோடு இரவாக இயேசு கைது செய்யப்படுவார்.

மறுநாள் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வார்கள்.

தனது பாடுகள் பற்றிய செய்தியை இதற்கு முன்பே இயேசு தனது சீடர்களிடம் பல முறை கூறியிருக்கிறார்.

தனது மரணத்தைப் பற்றியும் உயிர்ப்பை பற்றியும் அவர் தனது சீடர்களிடம் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

அதற்காக தங்களை தயார் படுத்தி கொண்டதாகவும் தெரியவில்லை.

புரிந்து கொண்டிருந்தால் வியாழன் அன்று கெத்சமனி தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்து செபித்துக் கொண்டிருந்தபோது 

முக்கியமான மூன்று சீடர்கள் தூங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

அவரைக் கைது செய்த போது சீடர்கள் அவரை விட்டு ஓடிப் போயிருக்கவும் மாட்டார்கள்.

இவ்வளவுக்கும் அவர்கள் மூன்று ஆண்டுகளாக இரவும் பகலும் இயேசுவோடு தங்கி அவருடைய போதனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள்.

அவர் செய்த எல்லா புதுமைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.

வியாழன் இரவு இயேசு அப்பத்தையும், ரசத்தையும் தன்னுடைய உடலாகவும் இரத்தமாகவும் மாற்றி அவர்களுக்கு கொடுத்த போது

முழு அறிவோடும் உணர்வோடும் தான் இயேசுவை உணவாக உண்டவர்கள். 

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் "  என்ற  இயேசுவின் வார்த்தைகளால் குருப் பட்டம் பெற்றவர்கள்.

வசீகர வார்த்தைகளைக் கூறி அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் சடங்குக்கு அவர்கள் வைத்திருந்த பெயர்

"அப்பம் பிட்குதல்."

திருச்சபையின் முதல் திருப்பலியை நிறைவேற்றியவர் நமது ஆண்டவராகிய இயேசு,

அவருக்குப் பின் அவருடைய அப்போஸ்தலர்கள்,

தொடர்ந்து அவர்களுடைய வாரிசுகள்.

திருப்பலி நிறைவேற்றி, நற்கருணை விருந்தை அளித்த பின்பு தான் 

 இயேசு உலக மீட்பிற்கான தனது  பாடுகளை ஆரம்பித்தார்.

அப்போஸ்தலர்கள் இயேசுவோடு இருந்தபோது அவர்களுக்குப் புரியாதிருந்த அநேக விசயங்கள் பரிசுத்த ஆவியின் வருகையின்போது புரிந்திருக்கும்.

நமக்கும் ஒன்று புரிய வேண்டும்.

நித்திய காலமாக சர்வ வல்லமையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமகன்

அன்னை மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்து

 33 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தது

33வது ஆண்டில் புனித வியாழன் அன்று தனது உடலையும், இரத்தத்தையும்

தனது சீடர்களுக்கு உணவாக கொடுத்துக் கொண்டாடிய பாஸ்கா திரு விருந்துக்காகவும்,

மறுநாள் அவர் பட்ட பாடுகளுக்காகவும், சிலுவை மரணத்திற்காகவும்தான்.

எங்கே திருப்பலியும்,

 திவ்ய நற்கருணையும்,

திரு விருந்தும்,

அதை பரிசுத்தமான உள்ளத்தோடு அருந்த உதவும் பாவ சங்கீர்த்தனமும்,

 உள்ளனவோ அங்கேதான் இயேசு நிறுவிய திருச்சபை இருக்கிறது.

யார்  பரிசுத்தமான உள்ளத்தோடு இயேசுவின் திரு உடலையும் திரு ரத்தத்தையும், உணவாக உண்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment