Wednesday, February 22, 2023

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)(தொடர்ச்சி)

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)
(தொடர்ச்சி)

''தாத்தா, இறைமகன் 
நமக்காக மனுவுரு எடுத்து, 
நமக்காக வாழ்ந்து,
 நமக்காக நற்செய்தி அறிவித்து, நமக்காகப் பாடுகள் பட்டு, 
நமக்காக மரித்தார்.

 நாம் அவருக்காக வாழ வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்திருக்கும் இறைவன்,

நமக்காக வாழ்ந்து 
நமக்காக மரித்திருப்பது
 எதைக்  காட்டுகிறது?"

"'அன்பர்கள் ஒருவர் ஒருவருக்காக வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

அவர் நமக்காக வாழ்ந்து    நமக்காக மரித்திருப்பது போல 

நாமும் அவருக்காக வாழ்ந்து அவருக்காக மரிக்க வேண்டும்."

" நாம் இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுவது போலவே அவர் மரித்த நாளையும் கொண்டாடுகிறோம்.

பிறந்தநாளை மகிழ்ச்சியுடனும் மரித்த நாளை துக்கத்துடனும் கொண்டாடுகிறோம்.

இப்போது நாம் இயேசுவின் மரித்த நாளை கொண்டாடுவதற்கான ஆயத்த காலத்தில் இருக்கிறோம்.

அந்த நாளுக்காக நாம் நம்மை எப்படி ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்."

'''மரித்த விழாவுக்கான ஆயத்த
காலத்தை தவக்காலம் என்று அழைக்கிறோம்.

அதாவது நாம் தவம் செய்ய வேண்டிய காலம்.

நம்மை நாமே ஒறுத்து வாழ வேண்டிய காலம்."

"தாத்தா, தவக்காலத்தில் மட்டும்தான் ஒறுத்து வாழ வேண்டுமா?

மற்ற நாட்களில் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

"'திருமண நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்ற நாட்களில் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று கேட்கக் கூடாது.

ஒரு வகையில் நமது வாழ்க்கை முழுவதும் தவக்காலம்தான்.

இப்போது இயேசுவின் மரண விழாவிற்காக நம்மை தயாரிப்பது போல,

நமது வாழ்க்கை முழுவதும் நமது மரணத்திற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் எதைச் செய்தாலும் இயேசுவுக்காகச் செய்ய வேண்டும்.

இயேசு நமக்காக வாழ்ந்து மரித்தது போல 

நாம் இயேசுவுக்காக வாழ்ந்து மரிக்க வேண்டும்."

"இயேசுவுக்காக ஒறுத்து வாழ்வது எப்படி?"

"'நமது இயல்பான ஆசைகளை ஒறுத்து வாழ்வதுதான் ஒறுத்தல் வாழ்வு.

இயல்பாக நமது மகிழ்ச்சிக்காக செயல் புரிவோம்.

அதை ஒறுத்து இயேசுவின் மகிழ்க்காக செயல் புரிவதுதான் ஒறுத்தல் வாழ்வு.

நம்மிடம் இருக்கும் தின் பண்டத்தை நாம் தின்னாமல் நமது நண்பனுக்குக் கொடுத்து மகிழ்வது போல,

நமது மகிழ்ச்சியை இயேசுவுக்காகத் தியாகம் செய்வதுதான் தவம்.

பிறர் நம்மைப் பார்த்து புகழ வேண்டும் என்பதற்காக நல்ல செயல்களை புரியாமல்,

இறைவனை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஒறுத்தல் தான்.

நமது வலது கை செய்யும் உதவி நமது இடது கைக்கு தெரியக்கூடாது என்று இயேசு சொல்கிறார்.

அந்த அளவுக்கு நமது மகிழ்ச்சியை ஒறுக்க வேண்டும்.

நாம் செபம் சொல்வது கூட  இறைவனுக்கும் நமக்கும் மட்டும் தெரிந்தால் போதும்.

மற்றவர்கள் நம்மை பக்தியுள்ளவர்கள் என்று சொல்வதற்காக செபம் சொல்லக்கூடாது. 

செபக் கூட்டங்களில் மற்றவர்களின் முன்னால் செபம் சொல்பவர்கள்,

தயாரிக்கப் பட்ட அலங்கார வார்த்தைகளைப் பயன்படுத்தி

 மற்றவர்கள் தங்கள் செபத்தைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கோடு சொல்லக் கூடாது.

"நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்: ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர்."
(மத்.6:5)

தவக்காலத்தில் நோன்பு இருக்க  வேண்டும்.

இயேசுவே தனது பொது வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பு 40 நாட்கள் எதுவும் உண்ணாமல் நோன்பு இருந்தார்.

தவக்காலத்தில் வரும் விபூதி புதன் அன்றும், எல்லா வெள்ளிக்கிழமைகளும் சுத்த போசனத்தோடு, ஒரு சந்தியும் கடைபிடிக்க வேண்டுமென்பது திருச்சபையின் கட்டளை.

நாம் தவக்காலம் முழுவதுமே சுத்த போசனத்தை கடைபிடிக்கலாம்.
நோன்பும் இருக்கலாம்"

"இயேசுவுக்காக என்று சொல்கிறீர்கள்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக தவ முயற்சிகள் செய்ய வேண்டாமா?"

'"இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தான் பாடுகள் பட்டு மரித்தார்.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக தான் செய்கிறோம்.

நமது சம்பளத்தை வாங்கி அப்பாவிடம் கொடுத்தால் உண்மையில் யாருக்கு கொடுக்கிறோம்?"

"நமக்குதான் கொடுக்கிறோம். நம்மிடமிருந்து பெற்றதை அப்பா நமக்காகத்தான் செலவழிப்பார்."


"'நாம் கடவுளின் பிள்ளைகள். நாம் அவருக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கிறது.

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்"
(மத்.10:42)

என்று நமது ஆண்டவரே கூறியிருக்கிறார்."

"அப்படியானால் சுயநலத்துடன் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்கிறீர்களா?"

"'இறைவன் விருப்பப்படி செயல்படுவது எப்படி சுயநலம் ஆகும்?

கடவுளின் அன்பு தன்னலம் அற்ற அன்பு.

அவர் இயல்பாகவே சகல நன்மைகளிலும் முழுமையாக, நிறைவாக இருக்கிறார்.

அவரது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் அவருக்காக நற்செயல் செய்யவில்லை.

அவரது சித்தத்தை நிறைவேற்றவே நற்செயல்கள் செய்கிறோம்.

தன்னலம் இன்றி நாம் அவருக்காகச் செய்யும் செயல்களின் பலனை,

அவரும் தன்னலமின்றி தனது பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

அது அவரது இயல்பு.

தன்னலமின்றி அவருக்காக அவருக்குள் இருந்து நாம் செய்யும் நற்செயல்களில் பலன்கள்,

அவருள் வாழும் நமது சகோதர சகோதரிகளுக்கும் போய் சேரும்.

நமது ஆண்டவர் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே உலகிற்கு வந்தார்.

அவர்கள் சீடர்களாகிய நாம் அவரைப் பின்பற்றி  தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே செயல் பட வேண்டும்.

"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக"

என்று நாம் தந்தையிடம் வேண்டும்போது அவரது சித்தத்தால் பூமியில் வாழும் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்.

அனைவரும் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே வாழ்கிறோம்.

அதன் ஆன்மீக பலனை அனைவரும் அனுபவிக்கிறோம்." 

"தாத்தா, கடவுளின் தன்னலமற்ற அன்பை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

 கடவுள் நம்மை அவருக்காக வாழச் சொல்வது அவருக்காகவா நமக்காகவா?"

"'நமது உதவி அவருக்கு எந்த விதத்திலும் தேவையில்லை.

ஆனால் அவருடைய உதவியின்றி ஒரு வினாடி கூட நம்மால் வாழ முடியாது.

நம்மை அவருக்காக வாழச் சொல்வது நாம் நித்திய காலமும் அவரோடு பேரின்பத்தில் வாழ்வதற்காகத்தான்.

அவர்  தன்னலம் இன்றி நம்மை அன்பு செய்வது போல 

நாமும் தன்னலம் இன்றி அவரை அன்பு செய்வோம். 

நமக்கு மோட்ச பேரின்பத்தை தருவார் என்பதற்காக அல்லாமல்,

அவர் சகல நன்மைத் தனங்களையும் கொண்டவரும்,

நம்மைப் படைத்தவருமான கடவுள்  என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.


"சர்வேசுரா சுவாமி!

தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன்."

 தாய் திருச்சபை நாம் சொல்வதற்காக சொல்லித் தந்திருக்கும் இந்த செபத்தை வாழ்வோம்.

செபமாகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment