Thursday, February 9, 2023

"பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்." .(ஆதி. 3:22)

"பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்."
( ஆதி. 3:22)

பைபிள் ஒரு வரலாற்றுப் புத்தகமோ, அறிவியல் புத்தகமோ அல்ல.

கடவுள் தன்னை நமக்கு வெளிப்படுத்த (To reveal Himself to us) 

அவர் தேர்ந்தெடுத்த மனிதர்களைத் தூண்டி (By inspiring the persons of His choice)

எழுதிய நூல்தான் வேதாகமம், (Bible)

பைபிளின்  ஆசிரியர் (Author) கடவுள்தான்.

எழுதிய மனிதர்கள் அவர் பயன்படுத்திய கருவிகள்.

தன்னை வெளிப்படுத்தவே கடவுள் பைபிளை எழுதுவித்தார்,

உலக வரலாற்றை அறிவிக்க அல்ல.

பைபிள் ஒரு  நூல்.

நாம் அனுசரிக்க    கடவுளால் தரப்பட்ட ஒழுக்க நெறிகளைக் கொண்டதுதான் நூல்.  

"காலை மாலை நூலை ஓது." என்ற தமிழ் அறிவுரையில் குறிப்பிடப்பட்ட நூல்.

பைபிளில் நாம் தேட வேண்டியது இறைவன் நமக்கு அருளும் செய்திகளை.

பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் 

உலகம் மற்றும் மனிதன் பற்றிய படைப்புச் செய்திகளைக் கூறுகின்றன.

 இறைவன் நமக்கு அருளிய செய்திகளை
அறியும் நோக்கோடு வாசிக்க வேண்டுமே தவிர,

வரலாற்றை அறியும் நோக்கோடு அல்ல. 

இறைவன் ஒருவரே.

சர்வ வல்லபர், அன்பே உருவானவர்.

தனது அன்பையும், மற்ற பண்புகளையும் பகிர்ந்து கொள்வதற்காக வாழக்கூடிய மனிதர்களைப் படைக்க தீர்மானித்தார்.

மனிதர்களைப் படைக்கு முன் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு உலகைப் படைக்கத் தீர்மானத்தார்.

அவர் தனது சர்வ வல்லமையால்   உலகையும், மனிதர்களையும் ஆறு நாட்களில் படைத்ததாக பைபிள் கூறுகிறது.

நாள் எனப்படுவது 24 மணி நேரம் கொண்ட நாளல்ல.

அந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்பது நமக்கு மிக முக்கியமான ஒரு அறிவுரையை கூறுவதற்காக.

 கடவுள் ஆறு நாட்களில் உலகையும், மனிதர்களையும் படைத்துவிட்டு, 

ஏழாம் நாள்  ஓய்வு எடுத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது நமக்கு அறிவிக்கும் செய்தி,

நாம் வாரத்தின் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும்.

ஒரு நாள் இறைவனுக்காக ஓய்வு எடுக்க வேண்டும்.

கடவுளை பொருத்தமட்டில் அவரால் ஓய்வு எடுக்க முடியாது.

உலகைப் படைத்து முடித்துவிட்டு, மனிதனை படைத்தார்,

 மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்." என்று பைபிள் கூறுகிறது.

நாம் அறிய வேண்டிய செய்தி:

மனித உடல் கடவுளால் ஏற்கனவே படைக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது.

மனித ஆன்மா கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டு உடலோடு சேர்க்கப்பட்டது.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடல் மண்ணுக்குத் திரும்பி விடும். ஆனால் ஆன்மா இறைவனிடம் செல்லும்.

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதாக பைபிள் சொல்லுகிறது.

அது அறிவிக்கும் செய்தி:

விலா எலும்புகள் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முக்கிய உறுப்புகளாகிய நுரையீரலையும், இருதயத்தையும் பாதுகாப்பதற்காக படைக்கப்பட்டன.

ஆகவே மனைவி கணவனின் பாதுகாப்பிலும், கணவனை பாதுகாப்பவளாகவும் வாழ வேண்டும்.

இருவரும் ஒருவரை ஒருவர் பாதுகாப்பவர்களாக வாழ வேண்டும்.

இருவருடைய உறவும் பிரிக்க முடியாத, நெருக்கமான உறவு.

இந்த உறவை இறைவனே ஏற்படுத்தினார்.

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவைப் பிரிக்க எந்த மனித சக்திக்கும் அதிகாரம் இல்லை.

கணவன் பெரியவனா, மனைவி பெரியவளா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

ஏனெனில் இருவராக இருந்தாலும் இணைந்து  ஒருவராகவே வாழ வேண்டும்.

இறைவன் மனிதனை தனது சாயலில் படைத்தார்.

இறைவன் அன்பே உருவானவர்.

மனிதர்களையும் நேசிக்கக் கூடியவர்களாகவே படைத்தார்.

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்கள். மூன்று ஆட்களாய் இருந்தாலும் கடவுள் ஒருவரே.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசித்து, ஒரே குடும்பமாக வாழ வேண்டும்.

கணவனும் மனைவியும் மட்டுமல்ல,

அவர்களுடைய பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் ஏற்றத்தாழ்வு இல்லாமல் நேசித்து,

 ஒருவரை ஒருவர் பாதுகாத்து வாழ வேண்டும்.

குடும்பம் மட்டுமல்ல, குடும்பங்களால் ஆன சமூகமும் குடும்பத்தை போலவே அன்பால் இணைக்கப்பட்டு வாழ வேண்டும்.

சமூகம் அப்படி வாழ்ந்தால் சமூகத்தில் சாதி இன வேறுபாடுகள் இருக்காது.

யார் பெரியவர், யார் சிறியவர் என்ற பேச்சே இருக்காது.

அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருப்பார்கள்.

நாடுகள் அனைத்தும் குடும்பங்கள் போல் வாழ்ந்தால் 

யுத்தம் என்ற சொல்லே அகராதிக்கு வந்திருக்காது.

"உலகம் என்றால் என்ன ?"

என்று ஆசிரியர் கேட்டால், 

 "சமாதானம்"

 என்று மாணவர்கள் பதில் சொல்வர்.

" பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்."

என்ற இறைவாக்கில் இவ்வளவு செய்திகள் அடங்கியிருக்கின்றன.

கடவுள் பரிபூரண சுதந்திரம் உள்ளவர்.

மனிதர்களையும் சுதந்திரமாக செயல்படக் கூடியவர்களாகவே படைத்தார்.

கடவுள் பரிசுத்தர்.
மனிதர்களையும் பரிசுத்தமானவர்களாகவே படைத்தார்.

மனிதர்களைத் தனது சாயலில் படைத்தார்.

தன்னைப் போல பரிபூரண சுதந்திரம் உள்ளவர்களாகவும், அன்பு செய்யக் கூடியவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் படைத்தார்,

கடவுள் மனிதர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்.

அவர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி கடவுள் கொடுத்த கட்டளைப்படி வாழ வேண்டும்.

கட்டளைப்படி வாழ்ந்தால்தான் அவர்கள் பெற்ற இறைவனது சாயல் அவர்களில் நீடிக்கும்.

ஆனால் நமது முதல் பெற்றோர் சாத்தானின் சோதனைக்கு இணங்கி கடவுள் கொடுத்த கட்டளையை மீறினார்கள்.

அவர்களிடம்  இருந்த கடவுளின் சாயலைப் பழுதுபடுத்தி விட்டார்கள்.

ஆனாலும் அன்பும் இரக்கமும் மிகுந்த கடவுள் 

மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டு 

அவர்கள் இழந்த அவருடைய சாயலை திரும்பவும் அவர்களுக்கு அளிப்பதற்காக

 தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்புவதாக வாக்களித்தார்.

அவர்களை பாவத்தில் விழத்தாட்டிய சாத்தானை சபிக்கும்போது,

"உனக்கும் பெண்ணுக்கும், 

உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே 

பகையை உண்டாக்குவோம்: 

அவள் உன் தலையை நசுக்குவாள்: 

நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."

"அவள் உன் தலையை நசுக்குவாள்:" 

என்ற வார்த்தைகளின் மூலம்

 பிறக்க போகும் மீட்பரின் தாய் சென்மப் பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாய் உற்பவிப்பாள், 

பாவ மாசு இல்லாமல் வாழ்வாள்

என்ற செய்தியையும் முன்னறிவித்தார்.

படைப்பைப் பற்றிய செய்தியை ஆழ்ந்து வாசித்து,

தியானித்தால், 

(ஆராய்ச்சி செய்தால் அல்ல)

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நமக்குப் புரியும்.

நோக்கத்தை அடைய வாழ்வோம்.

ஆகவே, பைபிளை வாழ்வதற்காக வாசிப்போம்.

வாசிப்போம், வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment