Monday, January 30, 2023

"இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்."(மாற். 5:43)

"இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்."
(மாற். 5:43)

"தாத்தா, இது யாருக்கும் தெரியக்கூடாது என்றால் என்ன அரத்தம்?"

"'செபக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் என்பவரின் இறந்த மகளுக்கு இயேசு உயிர் கொடுத்த புதுமையை வாசித்திருக்கிறாய் என்பது உனது கேள்வியின் மூலம் தெரிகிறது."

"ஆமா, தாத்தா. சிறுமி இறந்த வீட்டில் நிறைய பேர் இருந்திருப்பார்கள்.

சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்" என்று என்று இயேசு சொன்னபோது

 அவர்கள் அவரை ஏளனம் செய்தனர்.

சிறுமிக்கு உயிர் கொடுத்த போது அவரோடு மூன்று சீடர்களும், சிறுமியின் பெற்றோரும் மட்டுமே  இருந்தார்கள்.

மற்றவர்கள் சிறுமி படுத்திருந்த அறைக்கு வெளியே நின்றார்கள்.

மகள் உயிரோடு எழுந்தது குறித்து அவளது பெற்றோர் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்க முடியாது.

உயிர் பெற்றவளை மற்றவர்கள் பார்க்காமலும் இருக்க முடியாது.

அப்படி இருக்க இயேசு ஏன்
இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்?"

"'இயேசு கடவுள். தான் செய்த புதுமையை மற்றவர்களும் அறிவார்கள் என்று அவருக்கு நித்திய காலத்திலிருந்தே தெரியும்.

தெரிந்திருந்தும் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்கும் புரியவில்லை.

எனக்குப் புரியாததை உனக்கு எப்படி புரிய வைப்பேன்?"

"தாத்தா, அப்போ ஒன்று செய்வோம்.

அம்மா ஹோட்டலில் இட்லி வாங்கி சாப்பிடு என்று காசு கொடுத்திருக்கிறார்கள்,

ஹோட்டலில் இட்லி இல்லை.

என்ன செய்வோம்?

அதே காசுக்கு இருப்பதை வாங்கி சாப்பிடுவோம்.

அதேபோல...''

"'இயேசு சொன்ன வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

அவற்றை பயன்படுத்தி வேறு எதைப் பற்றியாவது பேசலாம் என்கிறாய், அப்படித்தானே?"

"இயேசு நம்மைப் படைக்கும் போது, தந்தை இறைவன் அவரைப் பார்த்து

"இது யாருக்கும் தெரியக்கூடாது"

என்று சொல்வதாகக் கற்பனை செய்து கொள்வோம்.

நாம் இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, எது யாருக்கும் தெரியக்கூடாது?" என்று கேட்கிறோம்.

இயேசு என்ன சொல்வார்?"

"'எது என்று தந்தைக்கும், எனக்கும், தூய ஆவிக்கும் மட்டும் தெரியும்,

 வேறு யாருக்கும் தெரிய கூடாது என்பது தந்தையின் கட்டளை.

தெரியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள நீ ஏன் ஆசைப்படுகிறாய்?

நான் உன்னை வழி நடத்துவேன். அதன்படி நீ நடந்தால் போதும்." என்று சொல்வார். "

"கரெக்ட், தாத்தா. நாம் பிறப்பதற்கு முன் 

எந்த நாட்டில்,
எந்த ஊரில், 
எந்த பெற்றோருக்கு, 
எப்போது பிறப்போம், 
என்று நமக்கு தெரியாது,

 பிறந்த பின்பு தான் அவற்றை தெரிந்து கொண்டோம்.

இப்போதும் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்,

எப்படி வாழ்வோம்,
எப்போது மரணம் அடைவோம்
என்ற எந்த விவரங்களும் நமக்கு தெரியாது.

அடுத்த வினாடி நமக்கு என்ன நடக்கும் என்பதும் நமக்கு தெரியாது.

பேசிக்கொண்டிருக்கும் போதே மரணம் வரலாம்.

Driver கையில் இருக்கும் கார் எங்கே போகும் என்பது காருக்குத் தெரியாது.

Driver ருக்கு மட்டுமே தெரியும்.

அதேபோல நமக்கு எப்போது என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது.

நம்மை பராமரிக்கும் கடவுளுக்கு மட்டுமே தெரியும்."

"'அதனால் நம்மைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கடவுளுடைய கட்டளைகளை அனுசரிப்பதோடு,

நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் நமது உள்ளத்தில் சொல்கிறாரோ அதையும் நாம் செய்தால் போதும்.

முழுக்க முழுக்க கடவுளை மட்டும் நம்பி வாழ்பவர்களுக்கு

 வெற்றி, தோல்வி, நோய்நொடி, கஷ்டங்கள் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

எல்லாம் இறைவன் செயல் என்பது மட்டும் தெரியும்.

வேறு எதுவும் தெரியாது.

கடவுளை மட்டும் நம்பி வாழ்பவர்கள்,

நினைத்தது நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள்,

 நடக்காவிட்டாலும் நன்றி சொல்வார்கள்.

சுகமாக இருந்தாலும் நன்றி சொல்வார்கள்,

 நோய் நொடிகள் வந்தாலும் நன்றி சொல்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களை மட்டும் அனுபவிக்க நேர்ந்தாலும் நன்றி சொல்வார்கள்.

என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்வார்கள்,

 ஏனெனில் நேர்வதெல்லாம் விண்ணக தந்தையின் சித்தப்படியே நேர்கின்றன.

வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவன்தான் தங்களை வழி நடத்துகிறார் என்பதை உணர்ந்து வாழ்பவர்கள்,

தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் தங்களை வழிநடத்தும் இறைவனுக்கு விசுவாசம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.

நடந்து செல்லும் போது,

 "நடப்பதற்கு தைரியம் கொடுத்த இறைவா உமக்கு நன்றி" என்பார்கள்.

நடக்கும்போது கல் தட்டி கீழே விழுந்து காலில் அடிபட்டாலும்,

"நான் விழுந்தது உமது செயல் என்பதால் இறைவா உமக்கு நன்றி" என்பார்கள்.

வாழ்வதற்கு மட்டுமல்ல, சாவதற்கும்,

 ஒவ்வொரு வினாடியும் தயாராக இருப்பார்கள்.

மாணவப் பருவத்தில் படிக்க வேண்டிய பாடங்களை ஒழுங்காக படிப்பார்கள்.

தேர்வு எழுதிய பின் கிடைக்கப்போவது வெற்றியா, தோல்வியா என்பது பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

ஏனெனில் அதை தீர்மானிப்பது இறைவனே."

"இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம்.

 நாம் எதிர்பாராதது ஏதாவது நேர்ந்தால்?"

"'நான் படித்துக் கொண்டிருக்கும் போது 

தேர்வுக்கு என்ன கேள்விகள் வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று எங்கள் ஆசிரியரிடம் கேட்டோம்,

 அவர் சொன்னார்,

 "எதிர்பாராதவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்."

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு இப்போது தெரிந்து விட்டால் 

"அதுதான் நடக்குமே. அதற்காக நாம் ஏன் இப்போது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்" என்று எண்ணி சோம்பேறிகளாக மாறி விடுவோம்.

எதிர்காலம் நமக்கு தெரியாததால் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்."

"இரவு படுக்கப் போகும் போது "நாளைக் காலையில்  மரிப்போம்" என்று தெரிந்தால் விடிய விடிய நமது நிலை எப்படி இருக்கும்?"

"'நீ ஒரு இரவைச் சொல்கிறாய்.

குழந்தை பிறக்கும்போதே பத்தாவது பிறந்தநாளில் குழந்தை இறக்கும் என்ற உண்மை பெற்றோருக்கு தெரிந்தால் 10 ஆண்டுகளும் அவர்களுக்கு எப்படி இருக்கும்

நாம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நமது எதிர்காலம் நமக்கு தெரியக்கூடாது என்று தந்தை இறைவன் விரும்புகிறார்."

"இன்னும் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு

 கடவுளுக்காகவே அவரது விருப்பப்படி மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

கடவுளின் விருப்பமும் அதுதான்.

புனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி அல்ல கடவுள் விருப்பப்படியே வாழ்ந்தார்கள்.

புனிதர்கள் மீது பக்தி வைத்திருக்கும் நாம் அனைவருமே அவர்களை போலவே வாழ்வோம்."

"'இன்னும் ஒரு விஷயம்.

பைபிள் வாசிக்கும்போது புரியாத விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு 

புரிந்ததை முழுமையாக வாழ்வோம். 

நாம் விண்ணகம் சென்றபின் இப்பொழுது நமக்கு புரியாதது எல்லாம் புரியும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment