சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்?
அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?"
(1கொரி.1:13)
"'என்னடா, பேரப்புள்ள. வந்த நேரத்திலிருந்து Phone ஐயே நோண்டிக்கிட்டிருக்க?"
''நோண்டல, தாத்தா, தேடிக் கொண்டிருக்கிறேன்."
'''என்னத்த?"
"YouTubeல சாமிமார் பிரசங்கம் வைப்பாங்க தெரியுமா?"
"'பிரசங்கம் கோவிலில் தான் வைப்பார்கள். அதை YouTube க்கு Upload பண்ணுவார்கள்."
"அதற்குப் பிறகு அது அங்கே தான் இருக்கும்.
அதைத்தான் தேடித்தான் மக்கள் போவார்கள்.
என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இதுதான் முக்கிய வேலை.''
"'ஏன் கோவிலில் பங்கு சாமியார் வைக்கும் பிரசங்கத்தைக் கேட்க மாட்டார்களா?"
"கேட்பார்கள். வீட்டுக்கு வந்த பிறகு YouTube க்குப் போய்,
அங்கேயும் மற்ற சாமிமார் வைக்கும் பிரசங்கங்களை கேட்டுவிட்டு,
சண்டை போடுவார்கள்."
"'ஏன்? கணவன் மனைவி சண்டை போட வேண்டும் என்று பிரசங்கத்தில் சொல்ல மாட்டார்களே!"
"நான் கேட்ட பிரசங்கம் தான் நன்றாக இருந்தது என்று அப்பா சொல்வார்.
அதையே அம்மாவும் சொல்வாங்க.
சண்டை வந்துவிடும்."
"'அதையே சொன்னால் ஏன்டா சண்டை? மாற்றிச் சொன்னால் தான் பிரச்சனை, அப்பா சொன்னதையே அம்மா சொன்னால் என்ன பிரச்சனை?"
"தாத்தா, புரியாதது மாதிரி பேசாதீங்க. அதே வார்த்தைகளை, அதே உண்மையை அல்ல.
நகைச்சுவையாக பேசும் சாமியார் வைக்கும் பிரசங்கம் அப்பாவுக்கு பிடிக்கும்.
அம்மாவுக்கு நகைச்சுவை
பிடிக்காது.
நகைச்சுவை இருக்கும் இடத்தில் விசயம் இருக்காது என்பது அம்மா எண்ணம்."
"'அப்போ இருவருக்குமே ஆண்டவரது வார்த்தைகள் பிடிக்காது.
ஆண்டவரது வார்த்தைகள் பிடித்தால் அதை எப்படி சொன்னாலும் பிடிக்க வேண்டுமே!
நான் விரும்புகிறபடி சொன்னால் தான் பிடிக்கும் என்றால் எனக்கு பிடித்தது எனது விருப்பம் தான், ஆண்டவர் அல்ல."
"ஒருவருக்கு பங்கு சாமியார் சொல்வது பிடிக்கிறது.
இன்னொருவருக்கு உதவிப் பங்கு சாமியார் சொல்வது பிடிக்கிறது.
விளைவு? ஒரு பங்கிற்குள் இரண்டு பிரிவுகள்."
"'அதைத்தான் சின்னப்பர் சொல்லுகிறார்.
உங்களுள் ஒவ்வொருவரும், "நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்,
நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்,
நான் கேபாவைச் சேர்ந்தவன்,
நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்"
என்று பலவாறு சொல்லிக் கொள்ளுகிறீர்களாம்.
கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரோ?
சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்?
அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
(1கொரி.1:12,13)
சின்னப்பரும், அப்பொல்லோவும்,
கேபாவும் ஒரே கிறிஸ்துவைப் பற்றி தான் போதித்தார்கள்.
ஒரே கிறிஸ்துவை நம்புபவர்கள் நான்கு பிரிவினராய் இருந்தால்,
அவர்கள் உண்மையில் கிறிஸ்துவை நம்பவில்லை.
தங்களது எண்ணத்தைத்தான் நம்புகிறார்கள்.
கிறிஸ்தவனின் நம்பிக்கை கிறிஸ்துவை மட்டுமே மையமாக கொண்டிருக்க வேண்டும்.
இன்று கிறிஸ்துவை நம்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு 40,000 பிரிவினை சபையினர் இருக்கிறார்கள் என்றால்,
உண்மையில் அவர்களில் ஒரு பிரிவினர்கூட கிறிஸ்துவை நம்பவில்லை.
தங்களது நம்பிக்கைக்கு கிறிஸ்து என்று பெயரை வைத்திருக்கிறார்கள்.
அவ்வளவுதான்.
அவர்கள் பைபிள் என்ற பெயரால் வைத்திருக்கும் புத்தகம் உண்மையில் பைபிள் அல்ல.
குதிரைக்கு யானை என்று பெயர் வைத்து விட்டால் குதிரை யானையாகுமா?
மகன் தந்தையுள்ளும்,
தந்தை மகனுள்ளும் இருப்பது போல கிறிஸ்தவர்களும் அவர்களுள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தந்தையை நோக்கி செபித்தவர் கிறிஸ்து.
எங்கே ஒற்றுமை இல்லையோ அங்கே கிறிஸ்தவம் இல்லை.
கிறிஸ்து ஏற்படுத்திய ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து போகும் போதே
அவர்கள் கிறிஸ்துவை விட்டு பிரிந்து போய்விட்டார்கள்.
கிறிஸ்து என்ற பெயரை வியாபாரப் பொருளாக மாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கணித ஆசிரியர் மாணவர்களிடம் கணித உண்மைகள் மாறாது என்று சொல்லிவிட்டு,
இரண்டும் இரண்டும் நான்கு என்ற உண்மை மாறுமா? என்று கேட்டார்.
ஒரு மாணவன் எழுந்து,
"என்னிடம் ஒரு சாக் பீசைக் கொடுங்கள், நான் மாற்றி காண்பிக்கிறேன்" என்றான்.
ஆசிரியர் கொடுத்தார்.
மாணவன் கரும் பலகைக்குச் சென்று,
2 + 2 = 5. என்று எழுதினான்.
இதே போல் தான் கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு அவள் பெயரால் தங்கள் இஷ்டப்படி போதித்துக் கொண்டிருக்கிறார்கள்."
"அது ,உண்மைதான் தாத்தா.
ஆனால் இன்று கத்தோலிக்க சபைக்குள் இருப்பவர்களிடம் கூட ஒற்றுமை இல்லையே.
நமது செயல்பாடுகள் நாம் நம்புகிறோம் என்று கூறுவதற்கு ஏற்றதாக இல்லையே.
கத்தோலிக்க திருச்சபை இயேசுவால் உருவாக்கப்பட்டு 2000 ஆண்டுகளை கடந்து விட்டன.
இயேசுவின் போதனைகள் தான் அதன் கொள்கைகள்.
அனைவரும் ஒரே விசுவாச சத்தியங்களைத் தான் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் அவற்றை நமது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தும் போது,
பழமைவாதிகள், புதுமை விரும்பிகள் என இரு சாரார் தோன்றியிருக்கிறார்கள்.
பழமைவாதிகள் தேவையற்ற மாற்றங்களை விரும்புவதில்லை.
தேவையற்ற மாற்றங்கள் விசுவாச சத்தியங்களின் பொருளைப் புரிய விடாமல் செய்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.
புதுமை விரும்பிகள் காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இதை விளக்க ஒரு விசுவாச சத்தியத்தை எடுத்துக் கொள்வோம்.
இயேசு கடைசி இரவு உணவின் போது அப்பத்தைத் தனது உடலாகவும்,
ரசத்தை தனது ரத்தமாகவும் மாற்றி அப்போஸ்தலர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.
அப்போஸ்தலர்கள் அவர்களோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்து வந்த அதே இயேசுவைத் தான் உணவாக உண்டார்கள்.
அப்போது அவர்களுக்கு குருப் பட்டம் கொடுத்து,
அப்பத்தை அவரது உடலாகவும் ரசத்தை அவரது ரத்தமாகவும் மாற்றக்கூடிய வல்லமையைக் கொடுத்தார்.
அதே வல்லமையைத்தான் அப்போஸ்தலர்களின் வாரிசுகளாகிய நம்முடைய குருக்களும் பெற்றிருக்கிறார்கள்.
நமது குருக்கள் திருப்பலியின் போது
33 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்த அதே இயேசுவைத்தான்
நமக்கு திவ்ய நற்கருணை வழங்கும்போது உணவாகத் தருகிறார்கள்.
நற்கருணை விருந்தின் போது நம்மிடம் வருபவர் சர்வ வல்லமை உள்ள இறை மகனாகிய இயேசு.
கடவுள் உண்மையாகவே நம்மிடம் வரும்போது நம்மிடம் எவ்வளவு பயமும், பக்தியும் இருக்க வேண்டும்!
நமது பக்தி உணர்வை முழுமையாக காட்டுவதற்கும்,
கடவுளுக்கு உரிய ஆராதனையை செலுத்தும் விதமாகவும்,
திவ்ய தற்கருணை வாங்கும்போது முழங்காலில் இருந்து,
கடவுளாகிய அவரை நமது நாவில் வாங்கினோம்.
இது திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வரும் நடைமுறை.
இந்த நடைமுறையில் மாற்றம் எதுவும் ஏற்படக்கூடாது என்று
பழமைவாதிகள் விரும்புகிறார்கள்.
புதுமை விரும்பிகள் அதே இயேசுவை நட்டமாய் நின்று கொண்டு,
இடது கையால் வாங்கி,
வலது கையால் எடுத்து அவர்களாகவே நாவில் வைத்துக் கொள்கிறார்கள்."
"'அவ்வாறு செய்வதற்கு இயேசுவால் உருவாக்கப்பட்ட திருச்சபைதானே அனுமதி வழங்கியிருக்கிறது என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
அனுமதி வழங்க அதற்கு அதிகாரம் உண்டு என்பதுவும் உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
"வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.
எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.
எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" (மத்.16:19)
என்பது இயேசு திருச்சபையின் தலைவருக்குக் கொடுத்திருக்கும் அதிகாரம்.
இயேசு கொடுத்திருக்கும் அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது நமது கடமை என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்."
"தாத்தா, நான் எதுவும் தெரியாமல் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை.
எதற்கும் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.
விளக்கம் கேட்பதற்காக நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment