" அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது." (மாற். 4:27)
"தாத்தா, திவ்ய நற்கருணை ஆண்டவருக்கு எந்தவித
அவமரியாதையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக
திவ்ய நற்கருணையை நாவில் வாங்குங்கள் என்று எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்!
அவர்களில் ஒருவராவது நீங்கள் சொன்னபடி செய்திருப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?"
'" பேரப்பிள்ள, நம்மிடம் இருக்கும் விதையை விதைக்க வேண்டியது நாம்.
அதை முளைக்க வைப்பதும், வளர்ப்பதும், பலன் தர செய்வதும் கடவுள்தான்.
"நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்:
ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே."(1கொரி.3:6)
நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நாம் செய்ய வேண்டும்.
கடவுள் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும்.
அவருடைய வேலையில் குறுக்கிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.
நமது ஆசை நிறைவேற அவரை நோக்கி செபிக்கலாம்.
ஆனால் நமது ஆசைப்படி செயல்படவோ,
அல்லது,
அவரது விருப்பப்படி செயல்படவோ அவருக்கு முழுமையாக சுதந்திரம் உண்டு.
அவர் என்ன செய்தாலும் அது நன்மைக்காகவே இருக்கும்.
ஏனெனில் அவர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவர்.
மருதடியூருக்குக் கிழக்கே ஒரு பெரிய ஆலமரம் நிற்பதை பார்த்திருக்கிறாயா?"
"பார்த்திருக்கிறேன். அதன் வயது பல நூறு ஆண்டுகள் இருக்கும்.
பரந்து விரிந்து வளர்ந்திருக்கும் அதன் நிழலில் ஒரு பெரிய படையே ஓய்வு எடுக்கலாம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மரத்திற்கான விதையை அந்த இடத்தில் யார் போட்டிருப்பார் என்று நினைக்கிறாய்?"
"யார் என்று கேட்பதை விட எது என்று கேட்டிருக்கலாம்.
ஆல மரத்தின் விதை எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
யாரும் அதை அங்கே விதைப்பதற்காக சுமந்து கொண்டு வந்திருக்க மாட்டார்கள்.
ஏதோ ஒரு காகம் வெகு தூரத்தில் உள்ள ஆல மரத்தில் பழுத்திருந்த பழத்தைத் தின்றுவிட்டு அந்த வழியே பறந்து வந்திருக்கும்.
அங்கு வந்தபோது அது எச்சம் இட்டிருக்கும்.
எச்சத்தில் உள்ள பல ஆல விதைகளுள் ஒன்று முளைத்திருக்கும்.
முதலில் நிலமும், பிறகு மழை நீரும் அதை வளர்த்திருக்கும்.
விதை முளைத்து, கன்றாகி, மரமாகும்வரை அதற்கு யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் அதன் நிழலை நாம் அனுபவிக்கிறோம்.
ஆல விதையை முளைக்க வைத்து, மரமாக வளர்த்திருப்பவர் கடவுள் மட்டுமே.
காகமும், நிலமும், மழை நீரும் கருவிகளே."
"'Very good. நாமும் இறைவன் கையில் கருவிகளாக பயன்பட வேண்டும்.
முதலில் நமது உள்ளத்தை இறைவாக்கு விதைகளால் நிரப்ப வேண்டும்.
நாம் எங்கு சென்றாலும் நமது உள்ளமும், இறைவாக்கு விதைகளும் நம்மோடு தான் வரும்.
நாம் எங்கு சென்றாலும் மனிதர்களோடு தான் பழகுகிறோம்.
நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களோடு மட்டுமல்ல,
நமக்கு முன்பின் தெரியாத மனிதர்களோடும் பழக நேரிடும்.
புகைவண்டியிலோ, பேருந்திலோ பயணம் செய்ய நேர்ந்தால்,
தற்செயலாக நம்முடன் பயணம் செய்பவர்கள் பயண நண்பர்களாக மாறி விடுவார்கள்.
பயண நேரத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதில்லை.
பயண நேரம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்போம்.
உள்ளத்தில் இருப்பது தான் சொல் வடிவத்தில் வாய் வழியே வெளியே வரும்.
நமது அனுபவங்களை வார்த்தைகளின் வழியே பரிமாறிக் கொள்ள நேரிடும்..
அப்படி பரிமாறும்போது இறைவாக்கு விதைகளை நம்மிடம் பேசிக் கொண்டிருப்பவர்கள் காதில் விதைக்க வேண்டும்.
காதில் விதைக்கப் பட்ட விதை அவர்களது கருத்துக்குள் நுழையும்.
அப்புறம் அந்த இறைவாக்கு விதையை முளைக்க வைத்து, வளர்த்து பலன் தர வைப்பது கடவுள் பொறுப்பு.
நாம் கடவுள் கையில் கருவிகளாக செயல்படுகிறோம்.
நாம் விதைத்த இறைவாக்கு விதைகளில் எத்தனை முளைத்தன என்பது நமக்குத் தெரியாது.
நமக்கு தெரியாத இடத்தில் அவை முளைத்து பலன் கொடுத்துக் கொண்டிருப்பது கடவுளுக்கு மட்டும் தெரியும்.
"அவன் (விதைத்தவன்) இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
நிலம் தானாகவே பலன் அளிக்கிறது:
முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி."
(மாற். 4:27, 28)
இவை இயேசுவின் வார்த்தைகள்."
"இப்போது ஒன்று புரிகிறது.
மற்றவர்களோடு பேசும்போது அர்த்தம் இல்லாத அரட்டைகளையும்,
பிறரைப்பற்றி கெடுத்துப் பேசும் பேச்சுக்களையும்,
கோள்களையும்,
நமது கஷ்டங்களைப் பற்றிய புலம்பல்களையும்
தவிர்க்க வேண்டும்.
இவற்றோடு இறைவாக்கு வராது.
பயன்தரும் பேச்சுக்களோடு இறை வாக்கையும் கலந்து பேச வேண்டும்.
"நான் இப்போது உங்களோடு இறை வாக்கைப் பற்றி பேசப்போகிறேன்" என்று சொல்லிக்கொண்டு பேச்சை ஆரம்பிக்க தேவையில்லை.
அப்படி ஆரம்பித்தால் எதிரில் இருப்பவர் எழுந்து போய்விட வாய்ப்பு இருக்கிறது.
தாய் குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது குழந்தையோடு கொஞ்சிக் கொண்டே,
மருந்தை தேனோடு கலந்து கொடுப்பது போல,
நமது இறைவாக்கு பகிர்வும் இருக்க வேண்டும்.
மகிழ்ச்சிகரமாக நமது அனுபவங்களைப் பகிரும்போது அவற்றோடு இறைவாக்கையும் பகிர வேண்டும்.
நம்மோடு பேசுபவர்கள் அறியாமலேயே இறைவாக்கு அவர்களது சிந்தனைக்குள் சென்று விடும்.
சாப்பிடுவது மருந்து என்று தெரியாமலேயே குழந்தை தேனோடு அதை விழுங்கி விழுவது,
இறைவாக்கு என்று தெரியாமலேயே அதை மனதுக்குள் ஏற்றுக்கொள்வர்.
குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற மருந்து அங்கிருந்து வேலை செய்வது போல,
இறைவாக்கும் ஏற்றுக் கொண்டவருடைய மனதில் இருந்து அதன் வேலையைச் செய்யும்."
"'உண்மையில் குருவானவர் பிரசங்கத்தில் கொடுப்பதை விட
அதிக பயன் தரும் முறையில் விசுவாசிகள் தங்களது விசுவாச பகிர்வின் மூலம்
விசுவாசத்தை பகிர முடியும்.
ஒருமுறை ஒரு குருவானவர் தனது ஆன்மீக பணிகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு 12 மணிக்கு படுக்கைக்கு சென்றார்.
அப்போது அவரது போன் அலற ஆரம்பித்தது.
சாமியார் போனை எடுத்து,
காதில் வைத்து,
"ஹலோ!" என்றார்.
"சுவாமி வணக்கம். உங்களது பங்கு மக்களின் ஒருவன் பேசுகிறேன்."
"என்ன வேண்டும்? சொல்லுங்கள்."
"சுவாமி, தூக்கம் வரவில்லை."
"உங்களுக்கு தூக்கம் வரும்படி செபிக்கிறேன்."
"செபம் தேவையில்லை, சுவாமி. ஒரு பிரசங்கம் வையுங்கள்."
சிலருக்கு பிரசங்க நேரத்தில்தான் தூக்கம் வரும்.
ஆனால் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது தூக்கம் வராது. பேசுவதில் ஆர்வம் இருக்கும். இறைவாக்கை விதைக்க பொருத்தமான நேரம்.
இதற்காகத்தான் சில குருவானவர்கள் உரையாடல் பாணியில் பிரசங்கம் வைக்கிறார்கள்.
சொற்பொழிவை விட உரையாடல் அதிக பலன் தருகிறது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இறைவாக்கை விதைத்து கொண்டே செல்வோம்.
விதைக்கப்படும் நிலம் எப்படிப்பட்டது என்ற கவலை நமக்கு வேண்டாம்.
விதைப்பது நமது கடமை.
விதைக்கு உரியவர் அது முளைத்து பலன் தருவதை பார்த்துக் கொள்வார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment