Sunday, January 29, 2023

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)



"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)

''தாத்தா, இயேசு இறைமகன். 

நாம் எப்படி இறை மக்கள்?"


"'கடவுளின் சாயலில் அவரால் படைக்கப்பட்ட நாம் அவரின் மக்கள்.

கடவுள் நமது முதல் பெற்றோரை தனது சாயலில் படைத்தார்.

பரிசுத்தத்தனம் உள்ளிட்ட தனது பண்புகளோடு அவர்களைப் படைத்தார். 

அவர்கள் தங்கள் பாவத்தினால் பரிசுத்தத்தனத்தை இழந்தார்கள்.

இறைவனுடைய சாயலையும் இழந்தார்கள்.

கடவுளுடைய மக்களாய் இருப்பதற்குரிய அருகதையையும் இழந்தார்கள்.

 இழந்த சாயலை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனிதனாய்ப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.

நமது பாவங்கள் 
மன்னிக்கப்படும்போது இழந்த பரிசுத்தத்தனத்தையும், இறைவனின் சாயலையும் மீண்டும் பெற்று கடவுளுடைய பிள்ளைகள் ஆகிறோம்."

"தாத்தா, சமாதானம் செய்வோர் கடவுளின் மக்கள் எனப்படுவர்' என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே.

சமாதானத்திற்கும், கடவுளின் மக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?"

"'சமாதானமாக இருப்பவர்கள் தான் கடவுளின் மக்கள்.

சமாதானம் என்றால் சுமூகமான உறவு. இரண்டு பேர் சுமூகமான உறவோடு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சமாதானமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைத்தபோது 

கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தது.

அதாவது அவர்களுக்கு இடையில் சமாதானம் நிலவியது.

சமாதானம் நிலவியதால்தான் அவர்கள் கடவுளின் மக்களாக இருந்தார்கள்.

பாவத்தினால் இழந்த சமாதானத்தை மீட்டுத் தருவதற்குப் பெயர் தான் மீட்பு.

இயேசு நமது மீட்பர்.

அதாவது கடவுளோடு இருந்து, நாம் இழந்த சமாதானத்தை மீட்டவர்.

அவர் சமாதானத்தின் தேவன்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் மரித்து உயிர்த்த பின்

அவர் சீடர்களுக்கு காட்சி கொடுக்கும் போதெல்லாம்

"உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக" என்றுதான் வாழ்த்தினார்.

மீட்பர் பிறந்த அன்று கூட வானவர்கள்

"நல் மனதோற்கு சமாதானம் உண்டாகுக." என்றுதான் பாடினார்கள்.

யாரெல்லாம் விண்ணிலிருந்து வந்த சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுளின் மக்களே."

"மற்றவர்கள் அமைதி என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் சமாதானம் என்று கூறுகிறீர்கள்?"

"'சமாதானத்தில் ஒரு நயம் இருக்கிறது தெரியுமா?"

"சொன்னால் தெரிந்து கொள்கிறேன்."

"'இரண்டு ஆட்கள் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமான உறவில்லாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்களுடைய உறவு சீராக வேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?"

"பல கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஏதாவது ஒரு கருத்தில் ஒருமிக்க   வேண்டும்.

அந்த கருத்தில் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் இருவருடைய மனங்களும் ஒருமித்து விடும்.

அவர்களுடைய நல்ல உறவுக்கு அது ஆரம்பமாகிவிடும். "

"'இருவரும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒருவர் உயர்ந்த நிலையிலும் மற்றவர் தாழ்ந்த நிலையிலும் இருந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?"

"உயர்ந்த நிலையில் உள்ளவர் இறங்கி வர வேண்டும்.

தாழ்ந்த நிலையில் உள்ளவர் ஏறி வரவேண்டும்.

இருவரும் சம இடத்தில் சந்திக்க வேண்டும்."

"'Very good. சமாதானம் என்ற வார்த்தையை சமம் + தானம் என்று பிரிக்கலாம்.

தானம் என்றால் இடம்.

கணிதத்தில் ஒரு தான எண், இரண்டு தான எண், மூன்று தான எண் என்று படித்திருப்பாய்."

"ஆமா. நூறு மூன்று தான எண். தானம் என்றால் இடம். புரிகிறது."

"'கடவுள் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருப்பவர்.

மனிதன் பூமியில் வசிப்பவன்.

மனிதனால் சுயமாக எதுவுமே செய்ய முடியாது.

ஆனால் கடவுளோடு உறவை புதுப்பிப்பதற்காக சுயமாக மேலே செல்ல முடியாது.

சர்வ வல்லமையுள்ள, கற்பனைக்கு எட்டாத உயர்ந்த விண்ணகத்தில் இருக்கும் கடவுள்

மனிதனை சம இடத்தில் சந்திப்பதற்காக

மனித அவதாரம் எடுத்து,

விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.

பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும்

மனிதனோடு மனிதனாக, அவனுக்கு இணையாக பூமியில் வாழ்ந்தார்.

மனிதனைப் போலவே உண்டு, உடுத்தி, அவனது மொழியிலேயே அவனோடு பேசி அவனை தன் உறவுக்குள் இழுத்தார்.

தனது மனித சுவாவத்திலேயே மனிதனுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

உறவு முறிவதற்கு காரணமாக இருந்த பாவத்திலிருந்து அவனை மீட்டு விண்ணகத்திற்கு அழைத்து செல்கிறார்.

பூமியில் மனிதனோடு சம தானத்தில் வாழ்ந்து, 

புதுப்பிக்கப்பட்ட உறவுடன் அவனை விண்ணகத்தில் அவருடன் சம தானத்தில் வாழச்செய்கிறார்.

மனிதனோடு சம தானத்தில் கடவுள் வாழ்வதால்,

கடவுள் நம்மோடும்,
 நாம் அவரோடும் சமாதானத்தில் வாழ்கிறோம்.

சமாதானம் என்ற வார்த்தையின் நயம் புரிகிறதா?

இந்த நயம் அமைதியில் இருக்கிறதா?"

''இறைவனோடு சமாதானமாக வாழ வேண்டும்.

நமது அயலானோடு?"

'"இறைவனோடு சமாதானமாக வாழ்வது போலவே, நமது அயலானோடும் சமாதானமாக வாழ வேண்டும்.

தனது அயலானோடு சமாதானமாக வாழ்பவனால் மட்டுமே இறைவனோடு 
சமாதானமாக வாழ முடியும்.

இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

சமாதான வாழ்வுக்கு அடிப்படையே அன்புதான்.

பிறனையும் அன்பு செய்ய வேண்டும், பிறனோடும் சமாதானமாக வாழ வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. 

பிறனோடு சமாதானமாக வாழாதவன் இறைவனது கட்டளையை மீறுகிறான்.

இறைவனது கட்டளையை மீறுபவனால் இறைவனை அன்பு செய்ய முடியாது.

பிறருக்கு செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்கிறோம். 

சமாதானம் நமது உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment