Wednesday, January 18, 2023

பாவ மன்னிப்பு.

பாவ மன்னிப்பு.

"தாத்தா, ஒரு கதை சொல்லுங்களேன்."

"'ஏன் திடீரென்று கதை மேல் ஆசை?"

"திடீரென்று வந்த ஆசையல்ல. சிறு பிள்ளைகளுக்கு கதை என்றாலே விருப்பம் என்று உங்களுக்கு தெரியாதா.

நீங்கள் Serious ஆக பேசிக் கொண்டிருந்ததால் கதை கேட்கவில்லை.

இப்பொழுது கேட்கிறேன். ஒரு சிறு கதை சொல்லுங்கள்."

""Serious ஆன விஷயங்களைத்தான் கதை மூலம் விளக்குவது வழக்கம்.

எங்கேயோ, எப்போவோ கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது ,
"இது எனக்கு தான் தெரியுமே" என்று நீ சொல்லக்கூடாது."

"தெரிந்தாலும் சொல்ல மாட்டேன். சொல்லுங்கள்."

"'ஒரு நாட்டில ஒரு ராசா இருந்தாராம்."

"பெயர்?"

"'எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் சொல்லவில்லை.

பெயர் இல்லாமல் கதை சொல்ல முடியாது.

நானே அவருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்கிறேன்.

Mr. X."

"எங்கள் கணக்கு வாத்தியார் அடிக்கடி சொல்வார், 

''விடையை எக்ஸ் என்று வைத்துக் கொள்வோம்.

அப்புறம் எக்சின் மதிப்பைப் காண்போம்." என்று.

"'சரி, கதையை கேள்.

அவர் நல்ல மன்னர். நாட்டை நல்ல விதமாக, மக்கள் மீது உண்மையான அன்போடு ஆட்சி செய்தார்.

மக்கள் எல்லோரும் அவரை நேசித்தார்கள்.

நாட்டில் சமாதானம் நிலவியது.

நல்லவர்களுக்குத் பிரச்சனைகள் வருவது இயற்கைதானே.

அவருக்கும் ஒரு பிரச்சனை வந்தது, பக்கத்து நாட்டிலிருந்து.

பக்கத்து நாட்டிலும் ஒரு மன்னர் இருந்தார்."

"பெயர்?"

"'கதாநாயகனுக்கே நான்தான் பெயர் வைத்தேன், வில்லனுக்கும் நானே வைக்கிறேன்."

"வில்லனுக்கு நான் பெயர் வைக்கிறேன்.

 Mr. Y. சரியா?"

"'நாம் வைப்பது தான் பெயர்.

வில்லன் என்று சொல்லி விட்டேன்.

ஆகவே அவனை மோசமானவன் என்று சொல்லியாக வேண்டும்.

அவன் மோசமான மன்னன்.

அதிகாரம் மட்டும் செய்யத் தெரியும்.

அன்பு செய்யத் தெரியாது.

பேராசைக்காரன்.

பக்கத்து நாட்டையும் தனது நாட்டோடு இணைத்து அதிகாரத்தோடு ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

ஆகவே காரணம் எதுவும் இல்லாமல் பக்கத்து நாட்டோடு போர் கொடுத்தான்."

"தாத்தா, காரணம் தான் இருக்கிறதே. பேராசை."

"அதுவும் சரிதான். 

Mr. X தனது படையோடு எல்லையிலேயே அவனைச் சந்தித்து, போரிட்டு, வென்று மன்னனையும், படைகளையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தார்."

"தாத்தா, போரைப் பற்றி கொஞ்சம் விளக்கியிருக்கலாம்."

"'நல்ல விஷயங்களைத்தான் விளக்க வேண்டும்.

எதிரி மன்னனையும், படை வீரர்களையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தார."

"அதை ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்."

"'கதை சொல்லும் போது இடை இடையே பேசக்கூடாது.

பேசினால் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும்.

அவ்வளவு பெரிய சிறைச்சாலை அந்த நல்ல மன்னரது நாட்டில் இருந்ததா என்று கேட்டு விடாதே.

கதைக்கு தேவையானது எல்லாம் இருக்கும்.

மன்னரது வெற்றியைக் கண்டு அமைச்சர்களும் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வெற்றியை ஒரு பெரிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று எல்லாம் அமைச்சர்களும் ஆசைப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல விழா ஆரம்பமாகுமுன் கைது செய்யப்பட்ட எல்லா எதிரிகளையும் கொன்று விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள்.

மன்னர் இரண்டு ஆசைகளையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்."

"'நல்ல மனிதர் என்று சொன்னீர்கள். எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதை எப்படி ஏற்றுக் கொண்டார்?"

"'இடையிடையே பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.

இனி பேசினால் கதையை நிறுத்தி விடுவேன்."

"சரி, தாத்தா, பேசமாட்டேன்."

"'விழா கொண்டாட ஏற்பாடு செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பெரிய அமைப்பில் அழகான வடிவில் மேடையும், பந்தலும் போடப்பட்டன.

விழாவிற்கான நாள் குறிப்பிடப்பட்டது.

விழா நாள் அன்று விழா ஆரம்பம் ஆகுமுன் மன்னர் எதிரிகளை எல்லாம் கொன்று விட வேண்டும்.

அந்த வெற்றி செய்தியுடந்தான் 
விழா ஆரம்பம் ஆக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 

விழா நாளன்று அமைச்சர்கள் மேடையில் அமர்ந்திருக்க,

மக்கள் பந்தலில் அமர்ந்திருக்க,

மன்னர் எதிரிகளைக் கொல்வதற்காக சில படை வீரர்களோடு சிறைச்சாலைக்குச் சென்றார்.

எதிரிகளை எல்லாம் கொன்றார்.

கொன்ற செய்தியோடு மன்னரும், படைவீரர்களும் திரும்பி வரும் காட்சியை காண மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

 மன்னர் திரும்பி வந்து கொண்டிருந்த விதம்தான் ஏமாற்றத்திற்குக் காரணம்,

மன்னரும், எதிரி மன்னரும் கைகோர்த்துக்கொண்டு, 

சிரித்து பேசிக்கொண்டு முன்னால் வர,

கொல்வதற்காகச் சென்ற படைவீடர்களும், எதிரியின் படை வீரர்களும் சேர்ந்து,

 ஆடிப் பாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.

படைவீரர்கள் பந்தலுக்குள் செல்ல,

இரண்டு மன்னர்களும் மேடையில் ஏறினார்கள்.

Mr. X மைக்கைக் கையில் பிடித்துக் கொண்டு,

"அறிவு நிறைந்த அமைச்சர்களே,
அன்பு நிறைந்த என் நாட்டு மக்களே,

நமது எதிரிகள் எல்லோரையும் கொன்றுவிட்ட மகிழ்ச்சியான செய்தியுடன் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

எனது மகிழ்ச்சியுடன் உங்களது மகிழ்ச்சியும் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்."

என்று சொல்லும்போது ஒரு அமைச்சர் எழுந்தார்.

"அரசே, எல்லா எதிரிகளையும் கொன்று விட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள்.

 ஆனால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது நமது விழா பந்தலுக்குள் தானே இருக்கிறார்கள்.

எதிரி மன்னரும் விழா மேடையில் தானே இருக்கிறார்."

"பந்தலுக்குள் இருப்பவர்களும்,
மேடையில் நம்மோடு வீற்றிருக்கும் மன்னரும்
இப்போது நமது எதிரிகள் அல்ல. நண்பர்கள்.

எதிரிகளை கொன்றவுடன் அவர்கள் எல்லோரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

நமக்கு இப்போது எதிரிகள் இல்லை.

கொல்லப்பட்டவர்கள் எப்படி நண்பர்களாக மாற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.

கொல்லப்பட்டது அவர்களுக்கும் நமக்கும் இடையே இருந்த பகைமை.

பகைமை இறந்தவுடன் பகைவர்கள் நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

முதலில் நாம் வென்றது நமது பகைவர்களை.

இப்பொழுது நாம் வென்றது அவர்களது பகைமையை.
 
நாம் வென்ற இந்த இரட்டை வெற்றி விழாவைத்தான் இப்போது கொண்டாடப் போகிறோம்."

மகிழ்ச்சி பெருக்கில் மக்கள் கைதட்டிய சப்தம் மேடையையும் பந்தலையும் அதிரச் செய்தது."

"விழா கொண்டாடினார்களா?".

"'Super ஆ கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடினார்கள்.

விழா முடிந்தவுடன் எல்லோருக்கும் விருந்து ஒன்று வைக்கப்பட்டது."

"கதை Super ஆ இருந்தது.

கதை என்றாலே அது ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமே.

இந்த கதை கற்பிக்கும் பாடம் என்ன?"

"'கடவுள் தனது அன்பின் மிகுதியால் நாம் வாழும் உலகை படைத்து,

அவரை அன்பு செய்வதற்காக நம்மையும் படைத்தார்.

நாம் அவருக்கு அன்பு செய்வதற்குப் பதிலாக அவருக்கு விரோதமாக பாவம் செய்து, பாவிகளாக மாறினோம்.

தந்தை இறைவன் தனது ஒரே மகனை பாவிகளாகிய நம்மிடம் அனுப்பினார்." 

"பொறுங்கள். இனி நான் சொல்கிறேன்.

தன்னை எதிர்த்த பாவிகளைத் தேடி வந்தவர், அவர்களைக் கொல்லவில்லை.

மாறாக தனது உயிரை கொடுத்து பாவத்தைக் கொன்றார். 

பாவம் கொல்லப்பட்டவுடன் கடவுளின் எதிரிகளாக வாழ்ந்த பாவிகள் அவருடைய நண்பர்களாக மாறினர்."

"'அதென்ன மாறினர்?

மாறினோம் என்று சொல்லு.
நாம் எல்லோரும் பாவிகள் தான்."

"இயேசுவின் சிலுவை மரணத்தினால் நாம் கடவுளின் நண்பர்களாக மாறினோம். சரியா?"

"ஆனால் தாத்தா இன்னும் பாவம் உலகில் இருக்கிறதே.

அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment