Wednesday, January 18, 2023

வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."(கலாத்.2:20)

'வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."
(கலாத்.2:20)

நாம் வாழ்கிறோம்.

மிருகங்களும் வாழ்கின்றன.

வாழ்வு என்ற வார்த்தை தான் ஒன்றுபோல் இருக்கிறதே தவிர இரண்டு வாழ்க்கையும் ஒன்றல்ல.

மனிதன் சிந்திக்கிறான்,

 சொல்லுகிறான்,

 செயல் புரிகிறான்.

மிருகங்களால்  சிந்திக்க முடியாது.

உள்ளுணர்வின்படி (Instinct) செயல்புரியும்.

மனம் உடையவன் மனிதன்.

மனம் எப்படியோ அப்படியே மனிதன்.

மனம் பரிசுத்தமாக இருந்தால், சொல்லும் செயலும் பரிசுத்தமாக இருக்கும்.

"நல்மனதோற்குச் சமாதானம்" என்பது இறைவாக்கு.

நல்ல மனது உள்ளவர்கள் சமாதானமாக வாழ்வார்கள்.

மனதில் தீய எண்ணங்கள் இருந்தால் சொல்லும் செயலும் தீயனவாகவே இருக்கும்.

தீய எண்ணங்களுக்கு சொந்தமான மனது உள்ளவர்கள் "யாரைக் கெடுப்போம்" என்று சிந்தித்துக் கொண்டே திரிவார்கள்.

"வாழ்வது நான் அல்ல" என்று புனித சின்னப்பர் கூறுகிறார்.

அப்படியானால் வாழ்வது யார்?

அவருடைய மனதை கிறிஸ்துவுக்குக் கொடுத்து விட்டார்

அவரது மனதில் வாழ்வது கிறிஸ்து.

உருவம் புனித சின்னப்பருடையது, 
வாழ்க்கை கிறிஸ்துவினுடையது.

சின்னப்பனுடைய உருவத்தில் கிறிஸ்து வாழ்கிறார்.

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே."
என்று ஏன் சின்னப்பர் நம்மிடம் கூறுகிறார்?

அவரைப் பின்பற்றி நாமும் அவர் கூறும் வார்த்தைகளை நம்மைப் பற்றி கூறும் அளவிற்கு நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையால் தான் 

சின்னப்பர் இந்த வார்த்தைகளை நம்மிடம் கூறுகிறார்.

அவரது வார்த்தைகளை வாசித்து விட்டு அப்படியே விட்டு விட்டோம் என்றால்,

சுவையான உணவை கண்ணால் பார்த்துவிட்டு,

அதன் மணத்தை மூக்கால் நுகர்ந்து விட்டு

சாப்பிடாமல் போனவர்களுக்குச் சமமாவோம்.

அநேக விஷயங்களில் நமது செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.

திருப்பலிக்குப் போவோம், ஆண்டவரையும், அவரது அருள் வரங்களையும் அள்ளி வருவோம்

வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டோம்.

குருவானவரது பிரசங்கத்தை கேட்போம்,

ஒரு காது வழியே கேட்டு,
 இன்னொரு காது வழியே வெளியே விட்டுவிட்டு, வெறுமையாய் வீட்டுக்கு வருவோம். 

தினமும் பைபிள் வாசிப்போம்,

 வாசித்தது புத்தியில் இருக்கும்,

 மனதுக்கும் வராது,

 வாயிலும்  வராது,

 செயலிலும் வராது.

தெரியாதவர்கள் வாழ்வதைப் போல தெரிந்தவர்கள் நாமும் வாழ்வோம்.

வாசிக்க பைபிள் இருக்கிறது 

என்று சொல்லிக் கொண்டு

 பைபிள் என்ற புத்தகத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு திரிவதால் ஒரு பயனும் இல்லை.

புத்தகத்தில் இருப்பது பேப்பரும் எழுத்துக்களும் தான். இறைவாக்கு வாசிப்பவர்கள் மனதுக்கு வர வேண்டும்.

கிறிஸ்துவைப் பற்றி அறிந்த பின்னும்,

அவர் நமது மனதில்  குடியேறாவிட்டால்,

கிறிஸ்தவன் என்ற பட்டம் நமக்கு பொருந்தாது.

கிறிஸ்து நம்மில் வாழ்ந்தால் தன்னுடைய எல்லா பண்புகளோடும் வாழ்வார்.

பாலோடு சேர்ந்த தண்ணீர் பாலாகி விடுவது போல,

நம்மில் வாழும் கிறிஸ்துவின் பண்புகளோடு நமது பண்புகளும் சேர்ந்து,

கிறிஸ்துவின் பண்புகள்

 நம்மை வழி நடத்தும்.

அதாவது கிறிஸ்துவே நம்மை வழி நடத்துவார். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் வாழ்ந்த இயேசு,

2023ல் நம் உருவத்தில் உலகில் வாழ்வார்.

அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து அவர் அவருக்கான உடலை எடுத்துக் கொண்டது போல,

நமது உடலையும் அவர் முழுமையாக எடுத்துக் கொள்வார்.

நமது உடலோடும், உள்ளத்தோடும், ஆன்மாவோடும்

அவர் ஏழையாக வாழ்வார்.

பெற்றோருக்கு கீழ்ப் படிந்து நடப்பார்.

நம்மை சுற்றியுள்ளோர்க்கு நற்செய்தியை அறிவிப்பார்.

சுமை சுமந்து வரும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பார்.

பசியாய் வருபவர்களுக்கு உணவு கொடுப்பார்.

நம்மை வெறுப்பவர்களையும் அவர் நேசிப்பார்.

தீங்கு செய்தவர்களுக்கு நன்மை செய்வார்.

வரும் கஷ்டங்களை பொறுமையோடு தாங்கிக் கொள்வார்.

நமக்கு தீங்கு செய்பவர்களை அவர் மன்னிப்பார்.

அன்று பட்ட பாடுகளை இன்று நம் உருவத்தில் படுவார்.

நம்மை பார்ப்பவர்கள் நமது உருவத்தில் கிறிஸ்துவைத்தான் பார்ப்பார்கள்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கிறிஸ்துவாக மாறிவிட்ட நம்மை போல மற்றவர்களும் மாற ஆசைப்படுவார்கள்.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

கிறிஸ்துவாக வாழ்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும்.

காலப்போக்கில் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறுவார்கள்.

சமுதாயமே ஒரே கிறிஸ்துவாக மாறும்.

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்."
(அரு. 17:21)

 இயேசு தந்தையை நோக்கி செய்த இந்த மன்றாட்டு நம்மில் நிறைவேறும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment