Thursday, January 12, 2023

"உம்முடைய சித்தம் பூலோகத்திலும் செய்யப்படுவதாக."

''உம்முடைய சித்தம் பூலோகத்திலும் செய்யப்படுவதாக."

"தாத்தா, நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போது,

'உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக'

என்று வேண்டுகிறோமே, எதற்காக?

கடவுள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அது தானே கடவுளின் சித்தம்.

கடவுள் அவர் விரும்புவதை செய்ய நமது வேண்டுதல்  எதற்கு?

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பு,

கடவுள் மட்டும் தானே இருந்தார்.

அவர் யாருடைய அனுமதியையும் கேட்டு இந்த பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை.

யாருடைய அனுமதியையும் கேட்டு நம்மைப் படைக்கவில்லை.

இப்போதும் அவர் நினைத்தது தானே நடக்கும்.

நாம் ஏன், "நீர் நினைத்தது நடப்பதாக" என்று செபிக்க வேண்டும்?"

"'ஒரு வேலைக்காரன் தனது முதலாளியிடம் சென்று,

'ஐயா, நீங்கள் என்னை என்ன வேலை வேண்டுமானாலும் செய்யச் சொல்லலாம்" என்று சொன்னால் என்ன அர்த்தம்?''

"நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் என்று அர்த்தம்."

"'அதே அர்த்தத்தை உனது செபத்துக்கும் கொடு."

"விண்ணகத் தந்தையே,

 உமது சித்தத்தை  விண்ணகத்திலுள்ள அனைவரும் நிறைவேற்றுவது போல 

பூலோகத்தில் உள்ள நாங்களும் நிறைவேற்றுவோம். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்." என்று அர்த்தம்."

"'வீட்டுக்கு வரும் விருந்தாளியை 'வாருங்கள்' என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

"உங்களை எங்கள் விருந்தாளியாக ஏற்றுக் கொள்கிறோம்' என்று அர்த்தம்."

"'இப்போது கர்த்தர் கற்பித்த செபத்தின் முதல் பகுதியை உனது வாசகங்களை கொண்டு கூறு."

"மோட்சத்தில் இருக்கிற எங்கள் தந்தையே, 

உம்மைப் போற்றிப் புகழ்கிறோம்.

மோட்சத்தில் இயங்கும் உமது அரசை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

நாங்களும் மோட்சத்திற்கு வர ஆசைப்படுகிறோம்.

அங்கு நாங்கள் வர வேண்டுமென்றால்,

மோட்ச வாசிகள் எவ்வாறு உமது சித்தத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ,

அதேபோல நாங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே, தந்தையே, நாங்கள் உமது சித்தப்படி செயல் புரிய வாக்களிக்கிறோம்.

நாங்கள் வாக்களிக்கிற படி நடக்க எங்களுக்கு உதவியருளும்.

தயவுசெய்து எங்களை உமது விண்ணக அரசுக்குள் ஏற்றுக்கொள்ளும்."

சரியா, தாத்தா?"

"'அப்படியானால் கர்த்தர் கற்பித்த செபத்தை நாம் சொல்லும்  ஒவ்வொரு முறையும் கடவுளுக்கு என்ன வாக்கு கொடுக்கிறோம்?"

"உமது விருப்பப்படியே நாங்கள் வாழ்வோம்' என்று வாக்கு கொடுக்கிறோம்.

வாக்கு கொடுத்துவிட்டு நமக்கு வேண்டிய மற்ற உதவிகளையும் கேட்கிறோம்."

"'நமக்கு வேண்டிய உதவிகளை நாம் பெற வேண்டுமானால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?"

"விண்ணக தந்தையின் விருப்பப்படி வாழ வேண்டும்.

அவரது விருப்பப்படி வாழ்ந்தால்தான் அவரிடம் உதவி கேட்க நமக்கு உரிமை கிடைக்கும்.

நாம் நமது இஸ்டம் போல் வாழ்ந்து விட்டு அவரிடம் சென்று உதவி கேட்பதில் அர்த்தமில்லை."

"தாத்தா, நான் உங்களிடம் கடவுளின் சித்தம் என்ன என்று கேட்டால்,

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிக்க வேண்டும்,

நம்மை நாம் நேசிப்பது போல நமது பிறரையும் நேசிக்க வேண்டும்

என்ற  அவருடைய இரண்டு கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தம் என்று சொல்லிவிடுவீர்கள்.

ஆகவே அந்த கேள்வியைக் கேட்க மாட்டேன்.

அது பொதுவாக மனுக் குலம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய அவருடைய சித்தம்.

அதுபோல் ஒவ்வொரு மனிதனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அவரது சித்தமும் இருக்கும்.

அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது?"

"'நம் ஒவ்வொருவரையும் கடவுள் ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார் என்பது உனக்குத் தெரியும்.

நம் ஒவ்வொருவரையும் நித்திய காலமும் தனது மனதில் வைத்து நேசித்து வந்த கடவுள் 

நாம் எந்த நாட்டில்,
எந்த ஊரில், 
எந்த பெற்றோருக்கு, 
எப்பொழுது பிறக்க வேண்டும்
 என்பதை அவரே தீர்மானித்து அதன்படி நம்மைப் படைத்திருக்கிறார்.

நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் 

என்பதற்கான சூழ்நிலையையும் அவரே அமைத்து கொடுத்திருக்கிறார்.

நமது உள் உணர்வுகளின் மூலம் அவரே சில ஆசைகளை நம் உள்ளத்தில் ஏற்படுத்துகிறார்.

நாம் பரிபூரண சுதந்திரம் உள்ள அவருடைய பிள்ளைகள்.

நமக்கென்று சில சொந்தமான ஆசைகளும் இருக்கும்.

நம்முள் எழும் ஆசைகள் நமது சொந்த ஆசைகளா,

 அல்லது இறைவன் தரும் ஆசைகளா என்பதை தீர்மானிப்பதற்காகத்தான்

 நமக்குள் மனசாட்சி என்ற ஒன்றை அவரே அமைத்திருக்கிறார்.

உதாரணத்திற்கு உனக்கு அரசியலில் நுழைய ஆசை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

உன்னுடைய மனசாட்சி அதை தவறு என்று சொன்னால் அதை அப்படியே மறந்து விட வேண்டும்.

சரி என்று சொன்னால் உன்னுடைய பெற்றோர், ஆத்ம குரு ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

எடுக்கிற முடிவு இறைவனது சித்தத்துக்கு உகந்ததாக இருக்கும்."

"அதாவது இறைவன் நமது உள்ளத்தில் ஏற்படும் தூண்டுதல்கள் மூலமாகவும்,

 நம்மை ஆன்மீகத்தில் வழி நடத்துபவர்கள் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார்.

மனசாட்சிக்கு விரோதமாக நாம் முடிவு எடுத்தால் கடவுள் என்ன செய்வார்?"

"'அதைத் தொடராதவாறு அநேக  தடங்கல்களை ஏற்படுத்துவார்.

அதையும் மீறி நீ இஷ்டப்படி நடந்தால் உனது முயற்சியில் ஆன்மீக ரீதியாக  தோல்விகளே ஏற்படும்."

"ஆன்மீக ரீதியாக என்றால்?"

"'அரசியல் வாழ்வில்  தவறுகள் பல செய்து நிறைய பணம் சம்பாதித்தால் உலக ரீதியாக அது வெற்றி போல் தோன்றும்,

ஆனால் ஆன்மாவை இழக்க நேரிடும்.

உலகம் முழுவதும் ஒருவன் தனதாக்கிக் கொண்டாலும் அவனது ஆன்மாவை இழந்தால் அவனுக்கு என்ன பயன்?

நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது சீடத்துவ வாழ்க்கையை ஒழுங்காக நடத்தினால், நாம் இறைவன் சித்தப்படி தான் வாழ்வோம்.

நமது தேர்வுகள் எல்லாம் மனசாட்சியின் படி தான் இருக்கும்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள் மனதில் இறைவன் பேசுவதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்."

"நல்ல கிறிஸ்தவர்கள் தினமும் வேதாகமம் வாசிப்பார்கள்.

திருப்பலியின் போது 
குருவானவருடைய பிரசங்கத்திற்குத் தூங்காமல் செவிமடுப்பார்கள். 

இறைவாக்கும், குருவாக்கும் கடவுளின் சித்தத்தை வெளிப்படுத்தும்.

ஒரே வாக்கியத்தில்,

கிறிஸ்தவ வாழ்வின் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே  நம் ஒவ்வொருவர் மட்டிலும் இறைவன் சித்தம்.

தந்தையின் சித்தம்,
 நமது பாக்கியம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment