Tuesday, September 6, 2022

"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."(லூக்.6:38)

"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."

(லூக்.6:38)


நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.

நமக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

 நாம் மற்றவர்களுக்கு  என்ன செய்கிறோமோ அதையே மற்றவர்கள் நமக்குச் செய்வார்கள்.

நாம் மற்றவர்களுக்குக்   கொடுக்க எந்த அளவைப் பயன்படுத்துகிறோமோ அதே அளவுதான் நமக்கும் கிடைக்கும்.

இவ்வுலகில் நாம் மற்றவர்களுக்கு கொடுத்ததற்கு உரிய பலன் நமக்கு மறுவுலகில் கிடைக்கும்.


 இவ்வுலகில் எந்த அளவையால் மற்றவர்ளுக்கு அளக்கிறோமோ, அதே அளவையால்தான் மறுவுலகில் இறைவன் நமக்கு அளப்பார்.


விண்ணகத்தில் நமக்கு சன்மானம் நிறைய கிடைக்க வேண்டுமென்றால்,


நம்மைப் பகைப்பவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்களை நாம் நேசிக்காவிட்டால் இறைவனுக்கு எதிராக பாவம் செய்து கொண்டிருக்கும் நாம் எந்த உரிமையில் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியும்?


நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

நாம் எவ்வளவு தீமைகள் செய்தாலும் கடவுள் நம்மை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுதான் வருகிறார். இதை நன்கு உணர்ந்து கொண்டால் நம்மால் நமக்கு எதிராகத்.தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யாமல் இருக்க முடியாது.


கொடுத்ததை திரும்ப தர முடியாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.


நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க வேண்டும். மன்னிப்பவர்களுக்குத்தான் மன்னிப்பு கேட்க உரிமை உண்டு. 
நாம் நமது பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்குமுன் நமக்கு எதிராக குற்றம் செய்த அயலானை மன்னித்து விட வேண்டும்.


ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுக்க வேண்டும். அதற்கு பெயர் தான் உதவி.


நன்றிகெட்டவர்க்கும், தீயவர்க்கும் பரிவு காட்ட வேண்டும்.


எல்லோருக்கும் இரக்கம் காட்ட வேண்டும். கடவுள் நம் மீது காட்டும் இரக்கத்தை நினைத்துப் பார்த்தால் நம்மால் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாமல் இருக்க முடியாது.


யாரையும் தீர்ப்பிடக் கூடாது. தீர்ப்பிடும் உரிமை நமக்கு இல்லை.

யாரையும் கண்டனம் செய்யாதிருக்க   வேண்டும்.

இவை எல்லாம் நம் ஆண்டவர் நமக்குத் தந்திருக்கும் அறிவுரைகள்.

ஆண்டவர் அறிவுரைப்படி நடந்தால் தான் விண்ணக வாழ்வு நமக்கு கிடைக்கும்.

ஆண்டவர் அறிவுரைப்படி நடப்போம்.
விண்ணக வாழ்வை அடைவோம்.

லூர்து செல்வம்.

Sunday, September 4, 2022

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"( லூக்.14:27)

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"
( லூக்.14:27)

ஒரு தாத்தா தனது பேரனிடம் ஒரு சிறிய விடுகதைையைப் போட்டார்.

ஒரு வீட்டுக்கு மூன்று விருந்தாளிகள் வந்திருந்தார்கள்.

அப்பா மகனைப் பார்த்து ,

"இதோ பார், மகனே, இந்த பையில் மூன்று மாம்பழங்கள் இருக்கின்றன.

இதை இதை எடுத்துக் கொண்டு போ.

நமது வீட்டிற்கு மூன்று விருந்தாளிகள் வந்திருக்கின்றார்கள்.

ஆளுக்கு ஒரு பழம் கொடு.

மூன்று பேருக்கும் மூன்று பழங்கள்.

கடைசியில் பையில் ஒரு பழம் இருக்க வேண்டும்.

 புரிகிறதா?"

"மூன்று பேருக்கும் மூன்று பழங்கள் கொடுத்தபின் பையில் எப்படி பழம் இருக்கும்?" 

"அது உனது திறமையைப் பொருத்தது."

"சரி . பையைக் கொடுங்கள்."

பையைக் கொண்டு போனவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

"நீங்கள் சொன்னபடியே கொடுத்துவிட்டேன்."

"எப்படிக் கொடுத்தாய்?"

"முதல் இரண்டு பேருக்கும் பழத்தை எடுத்துக் கொடுத்தேன்.

மூன்றாவது ஆளுக்கு பழத்தைப் பையோடு கொடுத்துவிட்டேன். 

அதாவது பையில் பழம் இருந்தது."

"Very good. இங்கு பழத்தைக் கொடுக்கும் போது செய்ததைப் போல உனது ஆன்மீக வாழ்வில் ஒரு காரியம் செய்ய வேண்டும். யோசித்து அது என்ன காரியம் என்று சொல்லு,'' 

"இதற்கு யோசிக்கவே வேண்டாம். அன்னை மரியாள் செய்தது போல செய்ய வேண்டும்.'

"அன்னை மரியாள் என்ன செய்தாள்?"

'அவள் பை. அவள் வயிற்றில் உற்பவித்த இயேசு கனி.

'இதோ ஆண்டவருடைய அடிமை' என்ற வார்த்தைகள் மூலம்  தன்னை முழுவதுமே ஆண்டவருக்கு அர்ப்பணித்து விட்டாளே.

அதன் பின் அந்த கனியுடன் தானே அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார்.

இயேசு வாழ்நாள் முழுவதும் தனது தந்தையின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவதற்காக வாழ்ந்தது போல 

மரியாளும் தந்தையின் திருச்சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே வாழ்ந்தாள்.

நமது ஆன்மீக வாழ்விலும் நமது அன்னையைப் போல நாமும் நம்மை முழுவதும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ வேண்டும்."

"மரியாள் தன் வயிற்றில் உற்பவித்த கனியுடன்  அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார்..

நாம் எதனோடு அர்ப்பண வாழ்வு வாழ?"

"ஆன்மீக வாழ்வு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான், ஆண்டவருக்காக வாழ்தல்.

புனிதர்கள் ஆண்டவருக்காகத்தான் வாழ்ந்தார்கள்.

நாமும் அவர்களைப் போலவே வாழ வேண்டும்.

நாமும் நம்மை முழுவதும், அன்னை மரியாளை போல, அர்ப்பணித்து வாழ வேண்டும்.

அன்னை மரியாள் தன் வயிற்றின் கனியோடு தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள்.

நமது ஆண்டவராகிய இயேசு 
தான் பட்ட பாடுகளையும்,
 சுமந்த சிலுவையையும்,
 சிலுவை மரணத்தையும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக தனது தந்தையிடம் ஒப்புக்கொடுத்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

தாயைப் போல பிள்ளை,
 குருவை போல சீடன்.

நாம் நமது வாழ்வின் சிலுவைகளோடு நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.


"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது"

அதாவது, தன் சிலுவைகளைச் 
சுமந்துகொண்டு இயேசுவைப் பின் செல்பவன்தான் அவருடைய சீடன்.

இயேசுவாகிய கனியுடன் மரியாள் தன்னை அர்ப்பணித்தது போல,

இயேசு தனது சிலுவையையும் (பாடுகளையும்), சிலுவை மரணத்தையும் தன் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது போல,

நாம் நமது சிலுவை வாழ்வுடன் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நமது வாழ்க்கையே ஒரு சிலுவை என்பது போல் தோன்றுகிறது."

''கணிதத்தில் புள்ளிகளின் கணம் தான் கோடு என்பார்கள்.
(A line is a set of Points.)

மாணவர்களின் கணம்தான் வகுப்பு.

அதுபோல,

சிலுவைகளின் கணம்தான் ஆன்மீக வாழ்வு.
(Spiritual life is a set of Crosses.)"

"சிலுவை என்ற வார்த்தை நமது துன்பங்களை குறிக்கும். 

ஆன்மீக வாழ்வில் இன்பத்துக்கு இடமே இல்லையா?"

"சிலுவை என்பது நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமல்ல.

ஆசைகளை அடக்கி தவ முயற்சி செய்வதும் சிலுவை தான்.

மனித வாழ்க்கை ஆசைகளால் நிறைந்தது.

ஆசையே இல்லாவிட்டால் அது வாழ்க்கை அல்ல.

உலக பொருள்களின் மீது மட்டும் நமக்கு ஆசைகள் இருந்தால் நாம் வாழ்வது லௌகீக வாழ்க்கை.

விண்ணகத்தின் மீது மட்டும் ஆசைகள் இருந்தால் நாம் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இயேசுவின் சீடன் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்க்கை.

நாம் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் உலகில் வாழும் மனிதர்கள் என்பதால் நமது வாழ்வில் உலகப் பொருள்கள் மீது ஆசை வரும்.

அவ்வாறு வரும் ஆசையை அடக்கி அதை விண்ணக வாழ்வுக்காக கடவுளுக்கு ஒப்பு கொடுக்கும் போது அது சிலுவையாக மாறிவிடுகிறது.

உதாரணத்துக்கு, பசி வரும்போது சாப்பிட ஆசைப்படுவது மனித இயல்பு. ருசியாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவதும் மனித இயல்புதான்.

ருசியைப் பற்றிய ஆசையை அடக்கி, நமது உணவை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து சாப்பிட்டால் அது சிலுவையாகிறது.

அதற்காகத்தான் சாப்பிடு முன்னும் சாப்பிட்ட பிறகும் செபம் சொல்கிறோம்.

நமது வாழ்நாளின் போது ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் ஆசையில் ஆன்மீகத்தைப் புகுத்தி அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் போது அது சிலுவையாக மாறுகிறது.

கடவுளுக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஒரு சிலுவை தான்.

தூங்குவது, எழுவது, உண்பது, உடுப்பது, வேலைக்குப் போவது, சம்பளம் வாங்குவது, அதை செல்லவழிப்பது எல்லாம் ஆண்டவருக்காக செய்யப்படும்போது அவை சிலுவைகளாக மாறி விடுகின்றன.

ஆண்டவருக்காக தூங்குபவன் ஓய்வு நேரத்தில் மட்டும் குறிப்பிட்ட கால அளவு தூங்கி அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பான்.

ஆண்டவருக்காக எழுபவன் எழவேண்டிய நேரத்தில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழுவான்.

ஆண்டவருக்காக உண்பவன் தான் உண்ணும் உணவை கடவுளுக்கு ஒப்பு கொடுப்பான். உணவை தந்த கடவுளுக்கு நன்றி கூறுவான்.

ஆண்டவருக்காக உடுப்பவன் உலகக் கவர்ச்சி இல்லாத ஒழுக்கமான உடையை உடுத்துவான். அரைகுறை ஆடையை அணிய மாட்டான்.


ஆண்டவருக்காக வேலைக்குப் போகின்றவன் ஆண்டவரின் திருப்திக்காக மனசாட்சியுடன் வேலை செய்வான். 

ஆண்டவருக்காக சம்பளம் வாங்குபவன் தனக்காக மட்டுமல்லாமல் பிறர் சிநேக பணிகளுக்காகவும் பயன்படுத்துவான்."

"நீங்கள் சொல்வதை பார்த்தால் மூச்சு விடுவது கூட சிலுவை போல் தெரிகிறது."

"பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிபவர் ஓய்வு நேரத்தில் Staff roomல் ஓய்வு எடுப்பதும் பணியோடு சேர்ந்ததுதானே.

நமது வாழ்வையே சிலுவையாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சிலுவை தான்.

வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும்  

கடவுளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டால் அவைகளும் சிலுவைகள்தான்."

"தாத்தா, அவைகளும் சிலுவைகள்தான், என்கிறீர்கள். நான் அவைகள்தான் சிலுவைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்."

"வாழ்க்கை என்பது அவைகள் மட்டுமல்ல.

தனது தேவ சுபாவத்தில் இயேசுவால் சிலுவையைச் சுமக்க முடியாது.

சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து, அதன் மூலம் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான் இயேசு மனிதனாகப் பிறந்தார்.


 சர்வலோகத்துக்கும் சொந்தக்காரரான கடவுளாகிய அவர் மனிதனாய்ப் பிறக்கும்போது மிக ஏழையாய்ப் பிறந்தார்.

சூசையப்பருக்குச் சொந்தமாய் வீடு இருந்தது. ஆனால் இயேசு யாரோ ஒருவருடைய மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

சர்வ வல்லப கடவுளாகிய அவர் சாதாரண மனிதனாகிய ஏரோதுவுக்குப் பயந்து எகிப்து நாட்டுக்குச் செல்லுமளவிற்கு நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.

நினைத்தவுடன் உலகை உருவாக்கிய கடவுளாகிய அவர் தச்சு வேலை செய்து சாப்பிட்டார்.

நசரேத் ஊரில் தன் தாயுடன் சொந்த வீட்டில் வளர்ந்தாலும் பொது வாழ்வில் தலை சாய்க்கக் கூட இடமில்லாதவராய் வாழ்ந்தார்.

ஆக இயேசுவின் வாழ்க்கை முழுவதும் ஒறுத்தல் வாழ்வுதாவுதான், அதாவது, சிலுவை வாழ்வுதான்.

அவருடைய சீடர்களாகிய நமது வாழ்வும் ஒறுத்தல் வாழ்வாகத்தானே இருக்க வேண்டும்.

அதனால்தான் "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது" என்கிறார்.

நாமும் ஒவ்வொரு வினாடியும் சிலுவையைச் சுமப்போம்,

இயேசுவைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, September 2, 2022

''என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."( லூக்.14:26)

''என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."
( லூக்.14:26)


இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கு அகராதிப்படி பொருள் கொடுத்தால் வசனம் என்ன பொருள் தரும்?

",உன்னையும், உனது அயலானையும் வெறுத்தால்தான் நீ என் சீடனாயிருக்க முடியும்."

சொன்னது யார்?.
இறைமகனாகிய இயேசு.

இப்போது ஒரு கேள்வி எழும்.

இது அவரது இரண்டு கட்டளைகளோடு ஒத்துப் போகிறதா?

எதிராகப் போகிறதா?

அவர் கொடுத்துள்ள இரண்டு கட்டளைகள் எவை?


"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" என்பது முதல் கட்டளை. 


 "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக" என்பது இரண்டாவது கட்டளை.

இரண்டிலுமே வெறுப்பு என்ற வார்த்தை இல்லை.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது ஒத்துப் போவது போல் தெரியவில்லை.

ஆனால்   சொன்னவர் கடவுள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தியானிப்போம்.

இரண்டு கட்டளைகளையும்  வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கேட்கிறார்:

முதல் கட்டளைப்படி நமது மனதை முழுவதும் இறைவனுக்கு கொடுத்து விட்டால் 

நமக்கும் நமது அயலானுக்கும் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?

ஒரு ஒப்புமையையும் அவர் கூறுகிறார்:

"நானும், என் நண்பனும் கோவிலுக்குச் செல்கிறோம்.

என் பையில் ஐம்பது ரூபாய் மட்டும் உள்ளது. நண்பர் பையில் எதுவும் இல்லை.

நான் முதல் கட்டளைப்படி என்னிடம் உள்ள ஐம்பது ரூபாயையும் உண்டியலில் போட்டு விடுகிறேன்.

வெளியே வந்தவுடன் நண்பன்,

"பசிக்கிறது, ஹோட்டலுக்குப் போவோமா?" என்கிறான்.

 எனக்கும் பசிக்கிறது. நான் இப்போது என்ன செய்ய?"

நமது பிரிவினை சகோதார்கள் செய்வது போல இறை வசனங்களுக்கு அகராதிப்படி பொருள் கொடுப்பதால் வந்த வினை இது.

வார்த்தைகளுக்கு அகராதிப்படி அல்ல, சொல்கிறவர்களுடைய தன்மைப்படி பொருள் கொடுக்க வேண்டும்.

ஒரு ஆசிரியர் ஒழுங்காகப் பாடம் படித்து வராத ஒரு மாணவனைப் பார்த்து,

''இன்று இரவு வீட்டுப் பாடம் படிக்கா விட்டால், நாளை பள்ளிக் கூடத்துக்கு வராதே." என்கிறார்.

மறுநாள் காலையில் பையன் அப்பாவிடம்,

" ஆசிரியர் எனக்கு  இன்று விடுமுறை கொடுத்திருக்கிறார். நான் உங்களோடு வயலுக்கு வருகிறேன்." என்று சொல்லி வயலுக்குப் போய்விட்டான்.

மறுநாள் பையனின் தந்தை  பள்ளிக் கூடம் சென்று ஆசிரியரிடம்,

"எதற்காக என் மகனுக்கு விடுமுறை கொடுத்தீர்கள்?"

என்று கேட்க ஆசிரியர் நடந்ததைச் சொன்னார்.

கண்டிப்பாகப் படித்து விட்டு வரவேண்டும் என்ற பொருளில் சொன்னதை பையன் தன் விருப்பப்படி புரிந்திருக்கிறான்.

சிலர் இறைவாக்கையும் இப்படிப் புரிந்து கொள்வதால்தான் இத்தனை பிரிவினை சபைகள்.

இறைவனின் தன்மை அடிப்படையில்தான் இறைவசனங்களுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

அப்படியானால்


"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடு அன்பு செய்வாயாக" என்றால் என்ன பொருள்? 

முழு உள்ளத்தையும் கடவுளுக்கே கொடுத்து விட்டால், நமக்கும் நம் அயலானுக்கும் எதைக் கொடுக்க?

கடவுளுக்கு முழு உள்ளத்தையும் கொடுத்து விட்டால், நமக்கும், நம் அயலானுக்கும்தான் கொடுத்திருக்கிறோம்.

எப்படி?

நம் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்கிறோம். அப்படிச் செல்லும்போது ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொண்டு போவது வழக்கம்.

வாங்கிக் கொண்டு போவதை யாரிடம் கொடுப்போம்?

குடும்பத் தலைவரிடம்.

குடும்பத் தலைவரிடம் கொடுத்தாலே குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்ததாகவே பொருள்.


அனைவரையும் படைத்து பராமரித்து வருபவர் கடவுள்.

அனைவரும் கடவுளுடைய பராமரிப்பில் தான் இருக்கிறார்கள்.

நாம் கடவுளிடம் எதை கொடுத்தாலும் அவரின் பராமரிப்பில் உள்ள அனைவருக்கும்தான் கொடுக்கிறோம்.

நமது மனது முழுவதையும் கடவுளுக்கு கொடுத்து விட்டால் மனுக்குலம் முழுவதும் நமது மனதில் இருக்கிறது.

கடவுளுக்குச் செய்வதை மனுக்குலத்துக்குச் செய்கிறோம்.

மனுக்குலத்துக்குச் செய்வதை 
கடவுளுக்குச் செய்கிறோம்.

புனித கல்கத்தா தெரெசா தன்னை முழுவதும் இறை பணிக்கு அர்ப்பணித்து விட்டாள்.

தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கும் தொழு நோயாளிகளுக்கும் அவள் செய்த  சேவை இறைவனுக்கு செய்த சேவை.

கடவுள் பொறுப்பில் நாமும், நமது அயலானும் இருப்பதால் 

கடவுள் பெயரால் அயலானுக்கு கொடுத்து, நாமும் பயன்படுத்தினால் அது கடவுளுக்கு கொடுத்ததாகத்தான் பொருள்படும்.

இயேசு கொடுத்த முதல் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் இரண்டாவது கட்டளையையும் நிறைவேற்றுகிறார்கள்.

அதாவது இறைவனை நேசிப்பவர்கள் தங்கள் அயலானையும் நேசிக்கிறார்கள்.

இறைவனுக்காக அயலானை நேசிப்பவர்கள் இறைவனையும் நேசிக்கிறார்கள்.

அன்னை மரியாள் இறைவனுக்கு தாய் ஆனதால்தான் இயேசு அவளை நமது தாயாகத் தந்தார்.


"என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."

அன்பே உருவான இயேசு ஏன் நமது உறவினர்களை வெறுக்கச் சொல்கிறார்?

அவர் யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை.

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அம்மா சொல்கிறார்கள்,

"வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடு."

வாயைப் பொத்திக் கொண்டு எப்படிச் சாப்பிடுவது?

ஆனால் நமக்குத் தெரியும் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடு என்றால் பேசாமல் சாப்பிடு என்று பொருள்.

ஆண்டவர் சொன்ன வசனத்துக்கு பொருள்,

"என்னை முழு மனதோடு நேசிக்காமல் வேறு யாரை நேசித்தாலும் எனது சீடனாக இருக்க முடியாது.".

முதல் கட்டளையை நிறைவேற்றாமல் இரண்டாவது கட்டளையை நிறைவேற்ற முடியாது.

நாம் நேசிப்பவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது நமது கடமை.

நாம் கடவுளை நேசிக்கிறோம்.
நமது பெற்றோரையும் நேசிக்கிறோம்.

யாருடைய விருப்பத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?

கடவுளுடைய விருப்பத்திற்கா?
பெற்றோருடைய விருப்பத்திற்கா?

இருவருடைய விருப்பமும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. 

எதிர் எதிராக இருந்தால்?

உதாரணத்துக்கு,

இறைவன் நம்மை குருத்துவப் பணிக்கு அழைக்கிறார்.

பெற்றோர் நாம் அரசுப் பணி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்?

நாம் இயேசுவின் சீடராக இருக்க விரும்பினால் அவருடைய விருப்பத்தைத்தான் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு எதிரான பெற்றோருடைய விருப்பத்தை நிறைவேற்றினால் இயேசுவின் சீடராக இருக்க முடியாது.

இதை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான்  வெறுப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

நாம் அம்மாவின் விருப்பப்படி நடக்காவிட்டால் அவள் நம்மை பார்த்து, 

"உன்னைப் பெறுவதற்குப் பதில் ஒரு செருப்பைப் பெற்றிருக்கலாம்"
என்று கூறுவது போல.

இயேசுவா , நம் உயிரா என்ற கேள்வி வரும்போது நாம் இயேசுவையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள்தான் வேத சாட்சிகள்.

நாமும் இயேசுவுக்காக உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

நம்மில் இயேசுவின் சித்தமே நிறைவேறட்டும்.

லூர்து செல்வம்.

"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?"(லூக்.5:34)

"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?"
(லூக்.5:34)

இயேசு தான் சீடராக அழைத்த லேவியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது

பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் இயேசுவைப் பார்த்து,

"அருளப்பரின் சீடர் அடிக்கடி நோன்பு இருந்து செபம் செய்கின்றனர். 

பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர்.

 உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள். 


 அதற்கு இயேசு, "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?

மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்."

"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?"
என்று ஏன் சொன்னார்?

நோன்பு இருக்க தேவையில்லாத கடவுளாகிய இயேசுவே தனது நற்செய்தி பணியை நாற்பது நாள் நோன்பிருந்துதான் ஆரம்பித்தார்.

 நற்செய்திப் பணி 
செய்பவர்களுக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காகவே இதைச் செய்தார்.

அவர் நோன்பை விரும்பாதவர் அல்ல.

பழைய ஏற்பாட்டு மக்கள் பல வித காரணங்களுக்காக நோன்பு இருந்தார்கள்.

அவற்றில் ஒன்று மெசியாவின் தீவிர வருகைக்காக நோன்பு இருந்தது.

யார் சீக்கிரம் வரவேண்டுமென்று நோன்பு இருந்தார்களோ அவர் வந்தபின் அவரோடு இருந்தவர்கள் அவருக்காக நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவேதான் "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?" என்று ஆண்டவர் கேட்டார்.

தான்தான் யூதர்கள் எதிர்பார்த்த மெசியா என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு சொன்னார்.

பரிசேயர்கள் மெசியா தங்களுக்கு அரசியல் விடுதலையை பெற்றுத் தருவார் என்று நம்பினார்கள்.

 ஆனால் இயேசுவோ நமக்கு ஆன்மீக விடுதலையைப் பெற்றுத் தரவே மனிதனாகப் பிறந்தார்.

ஆகவேதான் இயேசுவைத் தாங்கள் எதிர்பார்த்த மெசியாவாக அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?" என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மற்றொரு உண்மையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம்  உலகில் நோன்பு இருப்பதின் நோக்கம் விண்ணகம் சென்று இயேசுவோடு வாழ்வதற்காகத்தானே?

விண்ணகம் சென்று இயேசுவோடு வாழ ஆரம்பித்த பின்பு நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்போஸ்தலர்கள் உலகிலேயே இயேசுவோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆகவே அவர் அவர்களோடு  வாழும் வரை அவர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் இறந்து மோட்சதிற்குச் சென்றபின் அவர்கள் தனியாக இருக்கும்போது இறந்து மோட்சதிற்குச் செல்லும்வரை நோன்பு இருக்க வேண்டும்.

ஆகவேதான் இயேசு,
"மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

இயேசு மரித்து விண்ணகம்  சென்ற பின்னும்  அப்போஸ்தலர்களுடன் வாழ்ந்தார்,

இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று அவர் கூறியபடி வாழ்ந்தார், வாழ்கிறார்.

ஆனால் அது திவ்ய நற்கருணையில்.

அவர் சிலுவையில் மரிக்கு முன்பு உலகில் வாழ்ந்ததற்கும், திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதே இயேசுதான்

அன்று நேரடியாக உலகில் வாழ்ந்தார், இன்று அப்ப, ரசக் குணங்களில் வாழ்கிறார்.

மனிதர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் பேசுவது போல இயேசு அப்போஸ்தலர்களுடனும், மற்றவர்களுடனும் பேசினார்.

நற்கருணையில் இருக்கும் இயேசு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையில் நமது உள்ளத்தில் உள் உணர்வுகள் மூலம் பேசுகிறார்.

நம்மால் இயேசுவை விண்ணகத்தில்தான் நேரடியாக பார்க்க முடியும்.

நாம் விண்ணகத்துக்குச் செல்ல நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் செல்லாமல் இறந்தவுடன் விண்ணகம் செல்ல 

நமது ஆன்மா முற்றிலும் பாவ மாசு இல்லாமல் இருக்க வேண்டும்.

அதற்காக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதோடு,  

உத்தரிக்கிற ஸ்தலத்தில் படவேண்டிய வேதனைகளை பூமியிலேயே அனுபவித்து முடித்து விட வேண்டும்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் படவேண்டிய வேதனைகளுக்கு ஈடாக 

நாம் நோன்பு இருக்க வேண்டும்.

நோன்பும்,
 தவ முயற்சிகளும்,
 சுய ஒறுத்தல் முயற்சிகளும்,
 செபமும், 
நாம் செய்யும் பிறர் சிநேக உதவிகளும், 
நாம் பக்தியுடன் பங்கேற்கும் திருப்பலிகளும் 

நமது உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளைக் கணிசமான அளவு குறைக்கும். 

நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும், நோய் நொடிகளையும், 
அவற்றால் ஏற்படும் வேதனையும் 

நாம் செய்த பாவங்களுக்கும், மற்றவர்கள் செய்த பாவங்களுக்கும் 
பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் 

நமது உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளும்,
மற்றவர்களது உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளும் குறையும்.

அது மட்டுமல்ல நமது மோட்ச பேரின்பம் அதிகரிக்கும்.

இம் முயற்சிகளை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் மற்ற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக் கொடுத்து 

அவர்கள் சீக்கிரம் விண்ணகம் அடைய உதவி செய்யலாம்.

இதுவும் ஒரு பிறரன்பு செயல்தான்.
 
முழுமையான மனதுடன் தவ முயற்சி செய்பவர்கள் பாவத்தில்  விழ மாட்டார்கள்.

நமது நோன்பு மற்றும் தவ முயற்சிகளின்   பலனாக விண்ணகம் சென்ற பின்

கடவுளின் நேர்முக தரிசனத்தில் என்றென்றும் இறையன்பிலும், பிறரன்பிலும்,  பேரின்பத்திலுமே வாழ்வோம்.

மண மகனோடு வாழும்போது நோன்பு இருக்காது.

லூர்து செல்வம்.

Wednesday, August 31, 2022

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்." ( மாற்கு.2:14)

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்." ( மாற்கு.2:14)


சுங்கத்துறையில் அமர்ந்திருந்த
 லேவியை  நோக்கி இயேசு கூறிய வார்த்தைகள்:  

"என்னைப் பின்செல்." 

.அவரும் உடனே எழுந்து அவரைப் பின்சென்றார்.

தனது சீடர்களைத் தேர்ந்தெடுக்க இயேசு பயன்படுத்திய வார்த்தைகள், 

"என்னைப் பின்செல்." 

அவர்களும் மறு வார்த்தை பேசாமல் தங்களது உடமைகளை எல்லாம் விட்டு விட்டு அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் அனைவருக்கும் பொருந்தும்.

குருக்களும், துறவிகளும் மட்டுமல்ல,

இயேசுவை விசுவசித்து அவர் வழி நடக்கும் அனைவரும் அவருடைய சீடர்கள்தான்.

அனைவருக்கும இயேசுவின் நற்செய்திப் பணியில் பங்கு உண்டு.

தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் தன் வழி நடக்க அழைப்பதற்காகத்தான் இயேசு மனிதனாக பிறந்தார்.

குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களுக்கு அளிக்கப்படாத சில பொறுப்புகளையும் இயேசு கொடுத்திருக்கிறார்.

திருப்பலி நிறைவேற்றுதல், பாவங்களை மன்னித்தல், அதிகாரப்பூர்வமாக போதித்தல் போன்றவை குருக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விசேஷமான பொறுப்புகள்.

நற்செய்தியின்படி வாழவும், நாம் வாழும் வழிப்படி வாழ மற்றவர்களை அழைக்கவுமான கடமை அனைவருக்கும் உண்டு.

அந்த வகையில் நாம் அனைவருமே இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் இயேசு நம் உள்ளத்தில் இருந்து கொண்டு, 

"என்னைப் பின்செல்" என்று அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.

இயேசு நமக்கு வழி காட்டுபவர் மட்டும் அல்ல, நம்மை வழி நடத்துபவரும் அவர்தான்.

ஒரு ஊருக்கு வழி எது என்று கேட்டால் வழி காட்டுபவர் செல்ல வேண்டிய திசையை காண்பித்து விட்டு அங்கேயே நின்று கொள்வார்.

ஆனால் வழி நடத்துபவர் நம்முடனேயே வருவார்.

ஒவ்வொரு வினாடியும் நம்முடனே இருந்து ஆலோசனைகள் கூறிக் கொண்டேயிருப்பார்.

செல்ல வேண்டிய இடத்திற்கு அவரே நம்மை அழைத்துச் சென்று விடுவார்.

அதைப் போலவே விண்ணுலகை நோக்கிய நமது ஆன்மீக பயணத்தில் இயேசு நமது உள்ளும் புறமும் இருந்து நம்மை வழி நடத்துகிறார்.

நமது உள்ளும் புறமும் இருக்கிறார் என்றால் 

இயேசு நமக்குள் இருக்கிறார், நாம் அவருக்குள் இருக்கிறோம்.

அவர் நமது உள்ளத்தில் என்றும் தங்கியிருக்கிறார்.

உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம் நம்மோடு பேசுகிறார்.

நாம் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடாதிருந்தால் அவரது குரல் நமக்கு தெளிவாக கேட்கும்.

 அனாவசியமான எண்ணங்களுக்கு இடம் கொடுத்தால் நமது கவனம் சிதறும்.

உள்ளத்தில் முழுவதுமாக அவரோடு இணைந்திருந்தால் அவரது எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறி நமது சொல்லிலும் செயலிலும் நம்மை வழி நடத்தும்.

சில வழி நடத்துதல்கள்:

காலையில் இறைவாக்கை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இறைவன் உள் உணர்வுகள் மூலம் நம்மோடு பேசுவார்.

வாசிக்கப்படும் இறைவாக்கை பகலில் எப்படி செயல்படுத்தலாம் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

எண்ணங்களை தோன்றச் செய்பவர் இறைவன்தான்.

அன்றைய நாளில் அதற்கான சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் இறைவன் நமது உள் உணர்வு மூலம் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

                       ***

வேறு வேலையாக வெளியே சென்றாலும் கோவில் அருகில் இருக்குமானால் உள்ளே  வந்து என்னை சந்தித்து விட்டு போ என்ற  நற்கருணை  நாதரின் குரல் உள்ளத்தில் ஒலிக்கும்.

அதை மீறி நம்மால் செல்ல முடியாது.

கோவிலுக்குள் நுழைந்து நற்கருணை  ஆண்டவரை சந்தித்து விட்டுதான் செல்வோம்.

                   .  ***

காலையிலேயே நம்மை முழுவதும் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் பகல் முழுவதும் இயேசுவின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக தோன்றி கொண்டேயிருக்கும்.

                    .  ***

யாரோடும் பேசும்போது கோபம் வந்தால் இயேசுவின் கருணை உள்ள முகம் உள்ளத்தில் தோன்றும். கோபம் காணாமல் போய்விடும்.

                          ***

 நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது நமது விசுவாச அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி உள்ளத்தின் உள்ளிருந்தே தூண்டுபவர் பரிசுத்த ஆவியானவர் தான்.

                             ***

நம்மை பற்றி அவதூராக பேசி, நமது பெயரைக் கெடுத்தவர்கள் நமக்கு எதிரே வரும்போது அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு, அவர்களோடு  இயல்பாகப்  பேச  வைப்பவரும் உள்ளத்தில் இருந்து நம்மோடு உரையாடும் ஆண்டவர் தான்.

                          ***

தேவைப்படுவோரைத் தேடிச்சென்று அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வைப்பவரும் நம் ஆண்டவர் தான்.

                               ***

நாம் செபிக்கும் போது நம்மை  வெறுப்பவர்களுக்காக வேண்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பவரும் நம் ஆண்டவர் தான்.
                 
இதைப் போன்ற  அனுபவங்கள் இயேசுவுக்காக மட்டும் வாழ்பவர்களுக்கு மட்டும்தான் ஏற்படும்.

தங்களுக்காக வாழ்பவர்களுக்கு ஏற்படாது.

ஆகவே ஒவ்வொரு வினாடியும் இயேசுவுக்காக மட்டும் வாழ்வோம்.

அவரோடு விண்ணகம் சென்று அங்கும் அவரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, August 29, 2022

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்" ( மாற்கு.2:10,11)

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்" ( மாற்கு.2:10,11)

இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்று,

 அதன் பின்பு நாற்பது பகலும், நாற்பது இரவும் நோன்பிருந்து,

அதன் பின்புதான் தனது நற்செய்திப் பணியை ஆரம்பித்தார். 

அவர் தச்சுத் தொழில் செய்து வாழ்ந்த நாசரேத்தூரை விட்டு,

 செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.

அங்கிருந்துதான் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

ஒரு நாள் அவர் வீட்டில் இருந்தபோது அவர் சொல்வதை கேட்பதற்காகவும், அவர் கையால் குணம் பெறவும் ஏராளமான மக்கள் வந்தார்கள். 

அவர்களுக்கு அவர் போதித்துக் கொண்டிருந்தபோது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு வந்தனர்.

கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.

இயேசு நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடத்தில் எல்லாம் நற்செய்தியை அறிவித்ததோடு,

தன்னைப் பார்க்க வந்த நோயாளிகளை எல்லாம் குணமாக்கினார்.

ஏன் நோயாளிகளைக் குணமாக்கினார்?

அதிலும் நற்செய்திப்பணி இருந்ததால்தான்.

நற்செய்திப் பணிக்கும், நோயாளிகளைக் குணமாக்கியதற்கும் என்ன சம்பந்தம்?

நற்செய்திப் பணியின் நோக்கம் என்ன?

இறைவனிடம் மக்களுக்கு விசுவாசத்தை வளர்த்தல்.

பாவ மன்னிப்பு.

விசுவாச வாழ்க்கை வாழ்ந்து,
 பாவ மன்னிப்பு பெற்றால் தான் நம்மால் விண்ணகம் செல்ல முடியும்.

விசுவாசம் இறைவன் நமக்கு இனாமாகத் தரும் ஒரு பரிசு. அதை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்வது நமது கடமை.

தன்னிடம் சுகம் பெற வருவோர்க்கெல்லாம் இயேசு முதலில் விசுவாசத்தைப் பரிசாக அளிக்கிறார்.

அடுத்து அவர்களது பாவங்களை மன்னிக்கிறார். 

பாவங்களை மன்னிக்கிறார் என்றாலே அதற்கான மனஸ்தாபத்தையும் பரிசாக அளித்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

அடுத்து குணமளிக்கிறார்.

குணமளித்த பின்,

"உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று என்கிறார்.

திமிர்வாதக்காரனை குணமாக்கிய புதுமையில்,

அவர்கள் விசுவாசத்தைக் கண்டு
(அதாவது அவர் அளித்த பரிசை ஏற்றுக் கொண்டதை கண்டு)

 திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

அதன் பின்,

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்:
 எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.

 என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான்."

அவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அவனை குணமாக்குகிறார்.

கடவுள் ஒருவருக்கே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.

ஆகவே தான் செய்த புதுமையினால் தான் கடவுள் என்பதையும் நிரூபிக்கிறார்.

இயேசு மண்ணுலகில் மனிதனாக பிறந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான். 


அவரது பாடுகள், சிலுவை மரணம் உட்பட,

அவரது ஒவ்வொரு செயலும்,

 அதை நோக்கமாக கொண்டதாகவே இருக்கும்.

இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கடவுளிடம் ஏதாவது ஒரு உதவியை கேட்கும் போது,

முதலில் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டும்.

இந்த இரண்டும் இருந்தால் தான் நாம் கேட்கும் உதவி கிடைக்கும்.

ஒருவருக்கு ஒரு நோய் வருகிறது என்றால்

 கடவுள் அவரது விசுவாசத்தை உறுதிப்படுத்தி

 அவரது பாவங்களை மன்னிக்க விரும்புகிறார் 

என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பசி வருகிறது.

நாம் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பாவ மன்னிப்பும் பெறவே நமக்குத் துன்பங்கள்  ஏற்படுகின்றன.

இதை உணர்ந்து செயல்பட்டால் நாம் ஒவ்வொரு நிமிடமும் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பாவ மன்னிப்பும் கேட்போம்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது நான் செய்ய வேண்டிய முதல் வேலை,

 நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

கஷ்டங்கள் நீங்க வேண்டுமென்று ஆசித்தால் கடவுளை நோக்கி,

"ஆண்டவரே உமக்கு சித்தம் இருந்தால் எனது கஷ்டங்களை நீக்கியருளும்." என்று செபிக்க வேண்டும்.

நமது விசுவாசம் நன்கு உறுதிப்பட்டால் நாம் இப்படி செபிப்போம்:

"ஆண்டவரே நீர் எங்களுக்காக பாரமான சிலுவையை சுமந்தீர்.

நான் எனக்கு வந்திருக்கும் கஷ்டங்களை எனது பாவங்களுக்கு பரிகாரமாகவும், 

உமது மகிமைக்காகவும்

 சிலுவையாய்ச் சுமக்க எனக்கு வேண்டிய அருள் உதவி செய்யும்."

இன்று விண்ணுலகில் வாழும் புனிதர்கள் இவ்வுலகில் வாழும்போது தங்களுக்கு வந்த கஷ்டங்களை பொறுமையோடு சிலுவையாய் சுமந்தவர்கள்தான்.

புனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள பக்தி  நமது ஆன்மீக வாழ்வில் அவர்களைப் பின்பற்ற நமக்கு உதவ வேண்டும்.

அதற்கான அருள் வரத்தை ஆண்டவரிடம் கேட்டு வேண்ட வேண்டும்.

நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தவும்,

 நமக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தரவுமே

நமக்குத் துன்பங்கள் வருகின்றன.

துன்பங்கள் வரும்போது இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.(மாற்கு1:40)

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.
(மாற்கு1:40)

இயேசுவை நோக்கி ஒரு தொழுநோயாளி  
 முழந்தாளிட்டு செய்த செபம்:

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" 

இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு சொன்னது, 

"விரும்புகிறேன், குணமாகு." 

உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.

தொழுநோயாளியின் நோய் 
அரோசிகமாக இருக்கலாம்,

ஆனால் அவன் செய்த செபம் நாம் எல்லோரும் பின்பற்றக் கூடியது.

அவன் ஆண்டவரை நோக்கி,

 நாம் எல்லோரும் வழக்கமாக கேட்பதை போல

 ''என் நோயை குணமாக்கும்" என்று சொல்லவில்லை.

"நீர் விரும்பினால் 

என்னைக் குணமாக்க உம்மால் கூடும்"

அதாவது,

"ஆண்டவரே, உமக்கு விருப்பம் இருந்தால்

 என்னைக் குணமாக்க உம்மால் முடியும்."

தனது வேண்டுதலை விட கடவுளின் சித்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறான்.

அவன் சுகமாக விரும்பியது உண்மை. ஆனால் அது கடவுளின் சித்தப்படி நடக்க வேண்டும் என்பதை அவனது செபம் நமக்கு உணர்த்துகிறது.

கர்த்தர் கற்பித்த செபத்தில் நமக்கு வேண்டியதை கேட்பதற்கு முன்னால்,

"உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!"

என்று இறைவனின் திருவுளம் நிறைவேற வேண்டுகிறோம்.

இப்படி வேண்டதான் கர்த்தர் கர்ப்பித்தார்.

நல்ல சம்பளம் தரக்கூடிய ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

அது கிடைக்க இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?

"விண்ணக தந்தையே, நான் இப்போது கேட்கப் போவது என்னுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமா இடைஞ்சலாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் உமக்கு தெரியும்.

நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

அது எனக்கு கிடைக்க வேண்டும் என்பது உமது சித்தமானால் எனக்கு கிடைக்கச் செய்யும்.

அது உமக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த வேலை வேண்டாம்.

என்ன வேலை கிடைக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அதைப் பெற்றுத் தாரும்."

"நான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்.

இந்த திருமணம் உமது விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்தால் நடத்தி வையும்.

ஏற்றதாக இல்லாவிட்டால் நடத்த வேண்டாம்.

நீரே எனக்கு உரிய பெண்ணை முடிவு செய்யும்.

உமது சித்தப்படி நடக்கவே உலகில் நான் வாழ்கிறேன்.

உமது சித்தம் நிறைவேறட்டும்."

சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டில் சுனாமியினால் ஆயிரக்கணக்கானோர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்தார்கள்.

இயற்கை கடவுளுடைய படைப்பு.

கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக அது செயல்படாது.

ஏன் சுனாமியால் ஆயிரக்கணக்கானோரை கடவுள் அழித்தார்?

அதற்கு ஒரே பதில் தான்.

அது அவருடைய சித்தம்.

அவரது ஒரே மகன் இயேசுவின் பாடுகளின்போது நடந்தவற்றைத் தியானித்தால் அவரது சித்தம் பற்றி புரியும். 

இயேசுவின் நற்செய்தி அறிவிக்கும் வாழ்வின்போது பலமுறை அவரை கைது செய்ய அவரது எதிரிகள் திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் தந்தை திட்டமிட்ட நேரம் இன்னும் வராததால் அவர் அவர்கள் கையில் அகப்படவே இல்லை.

கடைசி இரவு உணவு சாப்பிட்டபின் கெத்சேமனி தோட்டத்திற்குச் சென்றால் அவருடைய எதிரிகள் அவரை பிடிக்க வருவார்கள் என்று அவருக்கு தெரியும்.

யூதாஸ் அவரை முத்தமிட்டு காட்டி கொடுப்பான் என்றும் அவருக்குத் தெரியும்.

அவருடைய எதிரிகள் அவரை கைது செய்து கல்தூணில் கட்டி வைத்து அடிப்பார்கள்,

 முள்முடி சூட்டி அடித்து, அவமானப்படுத்துவார்கள்,

சிலுவையை சுமக்க வைப்பார்கள்,

சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்றெல்லாம் அவருக்கு தெரியும்.

ஆனாலும் அவருடைய அப்போஸ்தலர்களுடன் அவர்  அங்கே சென்றார்.

ஏனென்றால் அதுவே அவரது தந்தையின் சித்தம்.

தந்தையின் சித்தம்தான் மகனின் சித்தமும்.

தந்தையின் சித்தப்படிதான் எல்லாம் நடக்கும் என்பது நமக்கு புரிந்து விட்டால் நமது வேண்டுதல்களின் முறையே மாறிவிடும்.

"இயேசுவே, எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை தாரும். நாங்கள் வேளாங்கண்ணி அன்னையின் ஆலயத்திற்கு சென்று காணிக்கை செலுத்துகிறோம்" என்று நேர்ச்சை செய்ய மாட்டோம்.

",இயேசுவே, உமக்கு சித்தமிருந்தால் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை தாரும்" என்று மட்டும் வேண்டுவோம்.

உவரி அந்தோனியார் கோவிலில் இருக்கும் அதே இயேசு தான் நமது கோவிலிலும் இருக்கின்றார்.

நாம் எங்கே இருந்து செபம் செய்தாலும் அந்தோனியாருக்கு கேட்கும்.

திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை போவதை விட கடவுளின் சித்தப்படி வாழ்வதுதான் முக்கியம்.

திருத்தலங்களுக்குத் திரு யாத்திரை போக வேண்டாம் என்று சொல்லவில்லை.

அது கடவுளின் சித்தப்படி நடப்பதின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

நமது சித்தப்படி நடப்பதற்காக போவதை விட கடவுளின் சித்தப்படி நடப்பதற்காக போவது ஒரு பக்தி முயற்சி.

திரு யாத்திரைகள் இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்க உதவியாக இருக்க வேண்டும்.

உண்மையான விசுவாச வாழ்வுக்கு முதலிடம் கொடுப்போம்.

இறைவனின் சித்தப்படி நடப்பது தான் உண்மையான விசுவாச வாழ்வு.

திருவிழாக்கள், திரு யாத்திரைகள் போன்றவை அதற்கு உதவியாக இருக்க வேண்டும். 

"நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்"

என்ற இயேசுவின் செபமே அவருடைய சீடர்களாகிய நமது செபமாக இருக்கட்டும்.

லூர்து செல்வம்.