Friday, September 2, 2022

"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?"(லூக்.5:34)

"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?"
(லூக்.5:34)

இயேசு தான் சீடராக அழைத்த லேவியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது

பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் இயேசுவைப் பார்த்து,

"அருளப்பரின் சீடர் அடிக்கடி நோன்பு இருந்து செபம் செய்கின்றனர். 

பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர்.

 உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள். 


 அதற்கு இயேசு, "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?

மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்."

"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?"
என்று ஏன் சொன்னார்?

நோன்பு இருக்க தேவையில்லாத கடவுளாகிய இயேசுவே தனது நற்செய்தி பணியை நாற்பது நாள் நோன்பிருந்துதான் ஆரம்பித்தார்.

 நற்செய்திப் பணி 
செய்பவர்களுக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காகவே இதைச் செய்தார்.

அவர் நோன்பை விரும்பாதவர் அல்ல.

பழைய ஏற்பாட்டு மக்கள் பல வித காரணங்களுக்காக நோன்பு இருந்தார்கள்.

அவற்றில் ஒன்று மெசியாவின் தீவிர வருகைக்காக நோன்பு இருந்தது.

யார் சீக்கிரம் வரவேண்டுமென்று நோன்பு இருந்தார்களோ அவர் வந்தபின் அவரோடு இருந்தவர்கள் அவருக்காக நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவேதான் "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?" என்று ஆண்டவர் கேட்டார்.

தான்தான் யூதர்கள் எதிர்பார்த்த மெசியா என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு சொன்னார்.

பரிசேயர்கள் மெசியா தங்களுக்கு அரசியல் விடுதலையை பெற்றுத் தருவார் என்று நம்பினார்கள்.

 ஆனால் இயேசுவோ நமக்கு ஆன்மீக விடுதலையைப் பெற்றுத் தரவே மனிதனாகப் பிறந்தார்.

ஆகவேதான் இயேசுவைத் தாங்கள் எதிர்பார்த்த மெசியாவாக அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


"மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?" என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மற்றொரு உண்மையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம்  உலகில் நோன்பு இருப்பதின் நோக்கம் விண்ணகம் சென்று இயேசுவோடு வாழ்வதற்காகத்தானே?

விண்ணகம் சென்று இயேசுவோடு வாழ ஆரம்பித்த பின்பு நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்போஸ்தலர்கள் உலகிலேயே இயேசுவோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆகவே அவர் அவர்களோடு  வாழும் வரை அவர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் இறந்து மோட்சதிற்குச் சென்றபின் அவர்கள் தனியாக இருக்கும்போது இறந்து மோட்சதிற்குச் செல்லும்வரை நோன்பு இருக்க வேண்டும்.

ஆகவேதான் இயேசு,
"மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

இயேசு மரித்து விண்ணகம்  சென்ற பின்னும்  அப்போஸ்தலர்களுடன் வாழ்ந்தார்,

இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று அவர் கூறியபடி வாழ்ந்தார், வாழ்கிறார்.

ஆனால் அது திவ்ய நற்கருணையில்.

அவர் சிலுவையில் மரிக்கு முன்பு உலகில் வாழ்ந்ததற்கும், திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதே இயேசுதான்

அன்று நேரடியாக உலகில் வாழ்ந்தார், இன்று அப்ப, ரசக் குணங்களில் வாழ்கிறார்.

மனிதர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் பேசுவது போல இயேசு அப்போஸ்தலர்களுடனும், மற்றவர்களுடனும் பேசினார்.

நற்கருணையில் இருக்கும் இயேசு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையில் நமது உள்ளத்தில் உள் உணர்வுகள் மூலம் பேசுகிறார்.

நம்மால் இயேசுவை விண்ணகத்தில்தான் நேரடியாக பார்க்க முடியும்.

நாம் விண்ணகத்துக்குச் செல்ல நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் செல்லாமல் இறந்தவுடன் விண்ணகம் செல்ல 

நமது ஆன்மா முற்றிலும் பாவ மாசு இல்லாமல் இருக்க வேண்டும்.

அதற்காக நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதோடு,  

உத்தரிக்கிற ஸ்தலத்தில் படவேண்டிய வேதனைகளை பூமியிலேயே அனுபவித்து முடித்து விட வேண்டும்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் படவேண்டிய வேதனைகளுக்கு ஈடாக 

நாம் நோன்பு இருக்க வேண்டும்.

நோன்பும்,
 தவ முயற்சிகளும்,
 சுய ஒறுத்தல் முயற்சிகளும்,
 செபமும், 
நாம் செய்யும் பிறர் சிநேக உதவிகளும், 
நாம் பக்தியுடன் பங்கேற்கும் திருப்பலிகளும் 

நமது உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளைக் கணிசமான அளவு குறைக்கும். 

நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும், நோய் நொடிகளையும், 
அவற்றால் ஏற்படும் வேதனையும் 

நாம் செய்த பாவங்களுக்கும், மற்றவர்கள் செய்த பாவங்களுக்கும் 
பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் 

நமது உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளும்,
மற்றவர்களது உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளும் குறையும்.

அது மட்டுமல்ல நமது மோட்ச பேரின்பம் அதிகரிக்கும்.

இம் முயற்சிகளை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் மற்ற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக் கொடுத்து 

அவர்கள் சீக்கிரம் விண்ணகம் அடைய உதவி செய்யலாம்.

இதுவும் ஒரு பிறரன்பு செயல்தான்.
 
முழுமையான மனதுடன் தவ முயற்சி செய்பவர்கள் பாவத்தில்  விழ மாட்டார்கள்.

நமது நோன்பு மற்றும் தவ முயற்சிகளின்   பலனாக விண்ணகம் சென்ற பின்

கடவுளின் நேர்முக தரிசனத்தில் என்றென்றும் இறையன்பிலும், பிறரன்பிலும்,  பேரின்பத்திலுமே வாழ்வோம்.

மண மகனோடு வாழும்போது நோன்பு இருக்காது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment