"அவர்கள் படகு ஓட்டுகையில் அவர் உறங்கினார்." (லூக்.8:23)
நற்செய்தி நூலில் இயேசு சம்பந்தப் பட்ட எந்த நிகழ்ச்சியை வாசிக்கும் போதும் நம் நினைவில் இருக்க வேண்டியது
இயேசு சர்வ வல்லமையும், ஞானமும் நிறைந்த கடவுள்.
அவரது ஒவ்வொரு செயலும் நித்திய கால திட்டத்திற்கு உட்பட்டது.
நாம் ஏதாவது ஒரு திட்டத்தைத் தீட்டினால், அது நமது திட்டப்படி நடக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது.
ஆனால் அவரது திட்டம் திட்டமிட்டபடியே செயலாகும்.
ஒரு நாள் அவர் தனது சீடர்களோடு
படகில் சென்றபோது அவர் உறங்கினார்.
அப்போது புயற்காற்று கடலில் வீசியது.
படகு நீரால் நிறைந்துபோகவே, அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.
சீடர்களைப் பொறுத்தமட்டில் படகில் ஏறும்போது அவர்கள் புயற் காற்றில் அகப்படப் போவது தெரியாது.
கடவுளாகிய இயேசுவைப் பொறுத்தமட்டில் புயற்காற்று அவருடைய நித்திய காலத் திட்டம்.
புயற்காற்றின்போது அவர் உறங்க வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.
திட்டப்படியே அவர் படகில் உறங்கினார்.
படகு நீரால் நிறைந்தது. அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.
சீடர்களுக்கு இது எதிர்பாராத நிகழ்ச்சி.
இயேசுவிடம் வந்து, "குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினார்கள்.
அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.
அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார்.
சீடர்களுக்கும், நமக்கும் விசுவாசத்தின் அவசியம் பற்றி போதிக்கவே இயேசு இந்த நிகழ்ச்சியைத் தட்டமிட்டார்.
இந்நிகழ்ச்சியை வாசிக்கும் நாம் மனதில் கொள்ள வேண்டியது
பாவம் தவிர, நமது வாழ்வில் நடை பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கடவுளுடைய திட்டப்படி தான் நடக்கின்றன.
நமக்கு நோய் நொடிகள் போன்ற கஷ்டங்கள் வரும்போது அவை இயேசுவின் திட்டப்படி தான் நடக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டால்
கஷ்டங்களைப் பார்த்து வருத்தப் படவோ, பயப்படவோ மாட்டோம்.
ஏனெனில் இயேசு நமக்கு எதைச் செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.
கஷ்டங்கள் வரும்போது இயேசுவைப் பார்த்து,
" ஆண்டவரே, இந்தக் கஷ்டத்தை எனது ஆன்மீக நன்மைக்காகவே கொடுத்திருக்கிறீர்
என்ன நன்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் உமக்குத் தெரியும்.
நான் படும் கஷ்டத்தை உமக்கே ஒப்புக் கொடுக்கிறேன்.
அவற்றைத் தாங்கும் சக்தியைத் தாரும்.
அன்று உமது பாடுகளையும், மரணத்தையும் எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக உமது தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது போல,
நான் எனது கஷ்டங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
அவற்றை ஏற்றுக் கொண்டு எனக்கு நித்திய பேரின்ப வீட்டைத் தாரும்." என்று வேண்ட வேண்டும்.
சீடர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டியது போல, நாமும் நமது கஷ்டத்தை நீக்க கடவுளிடம் வேண்டலாம்.
அவருக்கு சித்தமிருந்தால் நீக்குவார்.
நமது வாழ்வில் கஷ்டங்களே வராமலிருந்தால் நாம் கடவுளை நினையாமலிருக்க வாய்ப்பு இருக்கிறது.
அவரை நினைக்க வைப்பதற்காகவே கடவுள் நமக்குக் கஷ்டங்களை அனுப்புவதுண்டு.
இயேசு சீடர்களோடு படகில் பயணித்துக் கொண்டிருந்த போது,
புயற்காற்று வீச திட்டமிட்டிருந்தும்,
உறங்கினார்.
ஏன்?
சீடர்கள் தன்னை எழுப்பி வேண்ட வேண்டும் என்பதற்காக.
நாம் அவரிடம் பேச வேண்டும் என்பதற்காகவே துன்பங்களை அனுப்புகிறார்.
எப்போதும் ஆண்டவரிடம் பேசுவோம்.
அதற்காகவே இரவும் பகலும் திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment