(லூக்.6:46)
மனிதர்களுக்கு கடவுள் கொடுத்துள்ள மிகப்பெரிய வரம் சிந்தனை, சொல், செயல்.
கடவுள் அவரது சாயலில் நாம் இருக்க வேண்டும் என்பதற்காக நமக்கு அவரால் கொடுக்கப்பட்ட வரம் இது.
கடவுள் சிந்திக்கிறார், தனது சிந்தனையை நமக்கு தெரியப்படுத்துகிறார்.
நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்துக் கொண்டு வருகிறார்.
நமது சிந்தனை, சொல், செயல் மூன்றையும் கடவுளுக்காக எப்படிப் பயன்படுத்துகிறோம்?
அவரைப் பற்றி தியானிக்கிறோமா?
தியானிக்கும்போது பிறக்கும் அன்பை அவருக்குத் தெரியப்படுத்துகிறோமா?
நமது அன்பை செயலில் வெளிப்படுத்துகிறோமா?
கடவுள் நமக்கு தந்திருக்கும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது தான் நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பை செயலில் வெளிப்படுத்துகிறோம்.
"கடவுளே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம்" என்று சொன்னால் மட்டும் போதாது.
அவரது சொற்படி செயல் புரிய வேண்டும்.
"ஆண்டவரே, ஆண்டவரே" என்று அவரை அழைத்து நமக்கு வேண்டிய உதவிகளை கேட்பது மட்டும் செபம் அல்ல.
அவரது சொல்லை செயல்படுத்துவதுதான் உண்மையான செபம்.
அவர் சொன்னபடி நடக்காமல்,
அதாவது,
அவரது கட்டளைகளை வாழாமல்,
அவரை நோக்கி "ஆண்டவரே, ஆண்டவரே" அழைத்தால்,
நமது அழைப்பு பொருளற்றது.
எல்லா பக்தி முயற்சிகளும் வாழ்க்கையாக மாற வேண்டும்.
வாழ்க்கையில் பிரதிபலிக்காத பக்தி பக்தியே அல்ல.
இறை அன்னையின் மீது பக்தி வைத்திருக்கிறோம்.
தினமும் அன்னையை நோக்கி செபமாலை சொல்கிறோம்.
அன்னையின் திருத்தலங்களுக்கு திருயாத்திரையாக சென்று வருகின்றோம்.
ஒன்றை மறந்து விடக்கூடாது.
மாதா பக்தியின் உயிர் மாதாவைப் போல் வாழ்வது.
வாழ்க்கையில் பிரதிபலிக்காத பக்தி முயற்சிகள் உயிர் அற்றவை.
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற வார்த்தைகளின் மூலம் தனது வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவள் நமது அன்னை.
அவள் வாழ்ந்தது இறைவனுக்காக மட்டுமே, தனக்காக அல்ல.
நாமும் நமது வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணித்து,
அவருக்காக வாழ்ந்தால் மட்டுமே நாம் உண்மையான மாதா பக்தர்கள்.
அர்ப்பணம் இல்லாமல் நமக்கு வேண்டிய உதவிகளை கேட்பதற்கு மட்டுமே மாதாவின் மீது பக்தி கொண்டிருந்தால் அது உயிர் இல்லாத பக்தி.
அதனால் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை.
நாம் செப மாலை சொல்லும் போது ஒவ்வொரு பத்து மணியையும் ஏதாவது ஒரு கருத்துக்காக ஒப்புக்கொள்கிறோம்.
மிகவும் நல்லது.
அந்த பத்து மணி செபமாலையின்போது எதைப் பற்றி தியானிக்கிறோமோ அது நமது வாழ்வில் பிரதிபலித்தால்தான்
அதற்கு நமது கருத்தை நிறைவேற்றும் சக்தி ஏற்படும்.
அல்லது நாம் சொல்வது வெறும் வார்த்தைகளாகவே இருக்கும்.
உதாரணத்திற்கு, இயேசு பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்த்ததை தியானித்துக் கொண்டு பத்து மங்கள வார்த்தை செபங்கள் சொல்லுகிறோம்.
அந்த தியானத்தின் போது,
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நமது மனதை தொட்டிருக்கும்.
நமது வாழ்வில் நமது விருப்பப்படி வாழாமல் இயேசுவின் விருப்பப்படி வாழ வேண்டும்.
இயேசுவின் விருப்பப்படி வாழ்ந்தால் தான் நாம் உண்மையான செபமாலை மாதா பக்தர்கள்.
கருத்தை சொல்லும்போதும், "அன்னையே, உங்கள் மகனுக்கு விருப்பம் இருந்தால் நாங்கள் கேட்பதை பெற்றுத் தாரும்" என்று சொல்ல வேண்டும்.
அப்போதுதான் நமது செபம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
புனித அந்தோனியார் பக்தர்கள் அவருடைய புதுமைகளை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
புதுமைகள் செய்ய சக்தி கொடுத்த அவரது வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்.
வாழ்க்கையை பின்பற்றாமல் உதவிகளை மட்டும் கேட்டால்
நாம் விண்ணகம் செல்ல உதவும் புனிதராக அவரை எண்ணாமல்
உதவிகளைப் பெற்றுத் தரும் Agent ஆக நினைக்க ஆரம்பித்து விடுவோம்.
புனித அல்போன்சா பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை புனிதத்துவம் பெறும் வழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புனித கல்கத்தா தெரசாவின் பத்தர்கள் இறைவன் பெயரால் ஏழைகளுக்குச் செய்யும் சேவையே
இறைவனுக்குச் செய்யும் சேவையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
புனிதர்கள் மீதான பக்தி நமது வாழ்க்கையாக மாறாவிட்டால் அப்பக்தியால் யாருக்கும் பயன் இல்லை.
"ஆண்டவரே, ஆண்டவரே" என்று இயேசுவை அழைத்தால் மட்டும் போதாது, அவரது சொற்படி வாழ வேண்டும்.
இவ்வுலகில் இயேசுவின் சொற்படி வாழ்ந்தால் தான் மறு உலகில் அவரோடு வாழ முடியும்.
வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment