Thursday, September 8, 2022

பேறுபெற்றவர்கள்.

        பேறுபெற்றவர்கள்.

ஏழைகள், பசியாய் இருப்பவர்கள், அழுபவர்கள், இகழ்ந்து ஒதுக்கப் பட்டவர்கள் பேறுபெற்றவர்கள் என்று இயேசு கூறுகிறார். 

உலகக் கண்ணோக்கில் பார்ப்பவர்களுக்கு இக்கூற்று வினோதமாகத் தோன்றும்.

"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற தமிழ் மொழிப் படி

 இவ்வுலகினர் எவ்வளவு கஷ்டப்பட்டாவது செல்வத்தை ஈட்டுவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

யாரும் பசியினால் வாடுவதற்காக வாழ்வதில்லை. பசியின்றி வாழ்வதற்காகவே உணவைத் தேடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழுது கொண்டல்ல, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதே மக்களின் ஆசை. அவர்கள் கொண்டாடும் விழாக்கள் எல்லாம் அதற்காகத்தான்.


மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவதற்கு அல்ல,

புகழோடு ஏற்றுக் கொள்ளப்படவே மக்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை நோக்கி 


"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்,

பசியாய் இருப்பவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:

இப்பொழுது அழுபவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:


மற்றவர்களால் புறம்பாக்கக்கப் பட்டு இகழப்படுகின்றவர்களே நீங்கள் பேறுபெற்றவர்கள்."

என்று சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

தேர்வு எழுதவிருக்கிறவர்களிடம் போய், 

"தேர்வில் தோல்வி அடைபவர்கள் பேறுபெற்றவர்கள்"

என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

ஆனால் ஆண்டவர் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம், லௌகீகம் அல்ல.

ஆன்மீகம் லௌகீகத்துக்கு எதிரானது.

லௌகீக வாதிகள் இவ்வுலகமே சதம் என்று வாழ்கின்றவர்கள்.

ஆன்மீகவாதிகள் விண்ணகத்திற்காக வாழ்பவர்கள்.

இருவருடைய பார்வையே எதிர் மாறாது.

லௌகீகத்தில் இவ்வுலக செல்வமோ, அதன் மீது பற்றோ உள்ளவர்கள் செல்வந்தர்கள்.

இவர்களுக்கு இவ்வுலக பொருள் மீது மட்டும் ஆசை இருக்கும். 

மறு உலகிற்கு தேவையான அருள்மிகு இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். 

 இவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை மரணத்தோடு முடிந்து விடும்.

ஆன்மீகத்தில் இவ்வுலக செல்வத்தின் மீது பற்று இல்லாதவர்கள் ஏழைகள்.

இவர்களுக்கு மறு உலக வாழ்க்கைக்கு தேவையான அருள் மீது மட்டும் பற்று அதிகம் இருக்கும்.

இறைவன் மீதும், அயலான் மீதும் அன்பு, செபம், தவ முயற்சிகள் மூலம் இறையருளை ஈட்டுவதிலே குறியாக இருப்பார்கள்.

இவர்களது நித்தியகால பேரின்ப வாழ்வு மரணத்தில் ஆரம்பிக்கும்.

இவ்வுலக மரணம் இவர்களுக்கு விண்ணகத்திற்கு வாசல்.


பொருள் உள்ளோர்க்கு இவ்வுலகம் மட்டும் தான்.

ஆனால் அருள் உள்ளவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

இப்போது சொல்லுங்கள், யார் பேறுபெற்றவர்கள்?

உடலை வளர்ப்பதற்கு தேவையாக இருப்பது உடற்பசி. இது உள்ளவர்கள் வயிறார உண்டு உடலை வளர்ப்பார்கள். மரணத்திற்குப் பிறகு உடல் புழுக்களுக்கு இரையாகும்.

ஆண்டவர் குறிப்பிடுவது ஆன்மீக பசி. ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான இறை அருள் மீது பசி. இவர்கள் ஆன்மீக உணவாகிய ஆண்டவரையே தேடி உணவாக உட்கொள்ளுவார்கள்.

செபத்தின் மூலமும், தேவத்திரவிய அனுமானங்கள் மூலமும் கிடைக்கும் அருளை ஆன்மாவிற்கு ஊட்டுவதே இவர்களது வாழ்வின் பணி.

 இவர்களது ஆன்மா அருளால் நிறைய நிறைய, விண்ணகத்தில் இவர்கள் நித்திய காலம் அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தின் அளவு கூடிக் கொண்டே இருக்கும்.

உடற்பசி உள்ளவர்களுக்கு உடல்  புழுக்களுக்கு உணவாக வளரும்.

ஆன்மீகப் பசி உள்ளவர்களுக்கு நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.

யார் பேறுபெற்றவர்கள், உடல் பசி உள்ளவர்களா? 

அருள் பசி உள்ளவர்களா?

ஆண்டவர் குறிப்பிடுவது அருள் பசி உள்ளவர்களைத்தான்.


உடல் மீது ஆசை உள்ளவர்கள் வலி வந்தால் அழுவார்கள், நோய் வந்தால் அழுவார்கள், ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் அழுவார்கள். அவர்களது அழுகையால் யாருக்கும் பயனில்லை.

ஆன்மீக நலன் மீது ஆசை உள்ளவர்கள் ஆன்மாவிற்கு கேடு விளைவிக்கும் பாவம் செய்ய நேர்ந்தால் 

தங்களைப் படைத்த அன்பு நிறைந்த தேவனுடைய மனதை தங்களது பாவத்தால் நோகச் செய்து விட்டோமே என்ற வருத்தத்தினால் அழுவார்கள்.

அவர்களது அழுகையை ஏற்றுக்கொண்டு இரக்கம் நிறைந்த இறைவன் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.

செய்த பாவத்திற்காக அழும் அழுகை பாவ மன்னிப்பையும், நித்திய பேரின்ப வாழ்வையும் பெற்றுத் தரும்.

உடல் வலியினால் அழுபவர்களது வலி அழுகையால் குறைய போவதில்லை.

ஆனால் பாவத்திற்காக அனுபவங்களின் அழுகை பாவ மன்னிப்பையும், நித்திய பேரின்ப வாழ்வையும் பெற்றுத் தரும்.

ஆகவேதான் பாவ மன்னிப்பு கேட்டு அழுபவர்கள் பேறுபெற்றவர்கள்.

மனுமகன் மனிதர் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக 

பரிசேயர்களாலும், மறைநூல் அறிஞர்களாலும் 

வெறுக்கப்பட்டு, 

வசைகூறப்பட்டு, 

 இகழப்பட்டு,

பாடுகள் படுத்தப்பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு, கொல்லப்பட்டார்.

மனுமகன் நமக்காக பட்ட பாடுகளை அவருடைய மகிமைக்காக நாம் பட நேர்ந்தால் நாம் பேறுபெற்றவர்கள்.

வேதசாட்சியாக மரிப்பதைவிட பாக்கியமான மரணம் வேறு இருக்க முடியாது.

 
இறைவன் மீது பற்று கொள்வோம்.

இறையருள் மீது பசியாய் இருப்போம்.

நாம் செய்த பாவங்களுக்காக வருந்தி அழுவோம்.

இயேசுவின் பொருட்டு மனிதர் நம்மை வெறுத்து,
 புறம்பாக்கி,
 வசைகூறி,
 நமது பெயரே ஆகாது என்று இகழ்ந்து ஒதுக்கும்பொழுது 

மகிழ்ச்சி அடைவோம்.

ஏனெனில் நமக்கு கைம்மாறாக கிடைக்கப் போவது நித்திய பேரின்ப வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment