Saturday, September 24, 2022

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."(லூக்.9:23)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23)

இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகிறவர்களுக்கு இயேசு கூறும் அறிவுரைகள்:

1. தங்களையே மறுக்க வேண்டும்.

2. தங்கள் சிலுவையை நாள்தோறும் சுமக்க வேண்டும்.

3. இயேசுவைப் பின்தொடர வேண்டும்.

மனித இனம் நித்திய காலம் இறைவனோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தான் படைக்கப் பட்டது.

நமது முதல் பெற்றோர் அதை மறந்து, இறைவனது கட்டளையை மீறி பாவம் செய்ததால் அவர்களது இயல்பு நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வை நாடும் இயல்பாக விழுந்து விட்டது. (Fallen nature)

பேரின்பத்திற்காகப் படைக்கப் பட்ட இயல்பு மாறி, சிற்றின்பத்தைத் தேடும் இயல்பாகி விட்டது.

இறைவனின் சாயலாக படைக்கப் பட்ட மனிதன் சாத்தானின் சாயலை விரும்ப ஆரம்பித்து விட்டான்.

நம் ஆண்டவர் தனது சிலுவை மரணத்தின் மூலம் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து பேரின்ப வாழ்வுக்கான வழியைத் திறந்து விட்டிருக்கிறார்.

பேரின்ப வாழ்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டுமானால் 

சிற்றின்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம் நம்மையே மறுத்து,

பேரின்ப வாழ்வை நோக்கி திரும்ப வேண்டும்.

நம்மை நாமே மறுத்தால் தான் இயேசுவோடு பேரின்ப வாழ்வை நோக்கி பயணிக்க முடியும்.

ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் திசைகளை நோக்கி பயணிக்க முடியாது.

ஒரே நேரத்தில் பேரின்பத்தையும், 
சிற்றின்பத்தை நோக்கி பயணிக்க முடியாது.

ஆகவே தான் ஆண்டவர் 

"சிற்றின்ப வாழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் நீங்கள்

 உங்களை நீங்களே மறுத்து

 என்னை நோக்கி திரும்பி வாருங்கள்" என்கிறார்.


இயேசுவோடு பயணிக்க வேண்டுமானால் அவர் சிலுவையைச் சுமந்தது போலவே,

நாம் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்.

அழுவாரோடு அழ வேண்டும்.
சிரிப்பாரோடு சிரிக்க வேண்டும்.

சிலுவையைச் சுமப்பவரோடு நாமும் சிலுவையைச் சுமக்க வேண்டும்.

இயேசு சிலுவை என குறிப்பிடுவது நமது வாழ்வின் போது நமக்கு வரும் துன்பங்களை.

துன்பங்களை துன்பங்களாக நினைத்து சுமந்தால் அவை துன்பங்கள்தான்.

ஆனால், இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக, நமது மீட்புக்காக சிலுவையைச் சுமந்தது போல,

நாமும் நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், நமது மீட்புக்காகவும் துன்பங்களை ஏற்றுக் கொண்டால் அவை சிலுவையாக மாறிவிடுகின்றன.

இயேசு எந்த கருத்துக்களுக்காகச் 
சிலுவையைச் சுமந்தாரோ,

அதே கருத்துக்களுக்காக நாமும் சிலுவையைச் சுமக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் இயேசுவின் சீடர்கள்.

நாம் யாருடைய போதனைப்படி நடக்கிறோமோ அவரைப் பின்பற்றுபவர்களாகப் கருதப் படுவோம்.

நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக வாழ வேண்டுமென்றால்

அவருடைய போதனைப்படி எல்லாவற்றுக்கும் மேலாக அவரை நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ முடியாது.

நமது அன்பு நமது சிந்தனையில் மட்டுமல்ல, சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

சொல்லில் வெளிப்படும்போது நாம் நற்செய்தியை வாயால் அறிவிக்கிறோம்.

செயலில் வெளிப்படும்போது நாம் நற்செய்தியை வாழ்ந்து அறிவிக்கிறோம்.

நமது சுய ஆசைகளை ஒறுத்து,
நமது சிலுவையைச் சுமந்து கொண்டு,
இயேசுவின் போதனைப்படி வாழ்ந்து 

அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment